December 03, 2020

கொரோனா மாசடைந்த நீரில் பரவுமாயின் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் மீன்கள் குறித்து இலங்கை விஞ்ஞான நிபுணர்கள் தெளிவுபடுத்துவார்களா..?


கொவிட்-19 தொற்றினால் மாசடையும் நீரின் மூலம் இவ்வைரஸ் பரவுமாயின் ஏனைய உயிர்வாழும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் மற்றும் மீனினங்களின் கலங்கள் என்பவற்றின் ஊடாக  இக்கிருமி பரப்பப்படாது என்பதை இலங்கை விஞ்ஞான நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, கொவிட் 19 தொற்று தொடர்பான விவகாரத்தில் அமைச்சரவையோ அல்லது நிபுணர்களோ முடிவு எடுப்பதை நீதிமன்றம் தடுக்கவில்லை. அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர ஆகியோர், கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் 2020 மார்ச் 27ல் வெளியான வர்த்தமானி அறிவித்தலை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் என்ற ரீதியில் மீளமைப்பது குறித்து அரசாங்கம் சாதகமாக ஆராய்ந்து வருவதாக அண்மையில் தெரிவித்திருந்தனர். அத்தோடு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும்  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தமது அறிக்கையை சமர்ப்பித்த பின் இறுதி முடிவொன்று எடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதில் தாமதம் காட்டக் கூடாது. அவர்கள் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய  காரணங்களையும் விளக்கங்களையும் முன்வைக்க வேண்டும். ஏனெனில் கொவிட் 19 தொற்றினால் மரணமடைபவர்களை அடக்கம் செய்யும் முறையை மீள நிலைநிறுத்துவதில் அரசு கொண்டுள்ள அக்கரையானது இது தொடர்பான நிபுணர்களின் கருத்துக்களில் தங்கியுள்ளது. அதேநேரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் நியாயமான காரணங்கள் இன்றி தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் உணரப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று தண்ணீரின் மூலம் பரவுகின்றது என்ற விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்படாத கருத்துக்கள் மீன்பிடித் துறையிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது. மீன் உண்ணுபவர்கள் இது தொடர்பான அச்சத்தில் இருந்து இன்னமும் விடுபடாத நிலையிலேயே உள்ளனர். அதனால் பொதுமக்கள் தௌிவடையும்  வகையில் தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டியது  துறைசார் நிபுணர்களின் அவசரப் பொறுப்பாகும்.  உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி, எந்தவொரு கிருமியாலும் மாசடையும் தண்ணீர் மூலம் வயிற்றோட்டம் ஏற்பட்டாலும் கொவிட்-19 தொற்று பரவாது என்பதாகும்.  

மாசடைந்த நீர் வழியாக ஒரு உயிர்வாழும் கலத்துக்குள் கொவிட்-19 வைரஸ் பரவும் என்பதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களை கிருமியியல் மற்றும் தொற்றுநோயியல் தொடர்பான இலங்கை நிபுணர்களால் நிரூபிக்க முடியுமெனில், மனிதர்களுக்கு அப்பால் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் மற்றும் மீன் இனங்களை குறிப்பிட்ட கிருமி பாதிக்காது என்பதையும், அவற்றில் இருந்து அவற்றைக் கையாளும் மற்றும் நுகரும் மனிதர்களுக்கு அது பரவாது என்பதையும் இலங்கை நிபுணர்கள் தௌிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறே இந்த விடயத்தில் தவறான எண்ணக்கருத்துக்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் விஞ்ஞான ரீதியாக விளக்கி தெளிவுபடுத்த வேண்டிய தேவை இலங்கை நிபுணர்களுக்கு உள்ளது.

கொவிட்-19 பரவலை மட்டுப்படுத்த பொதுமக்களுக்கு அறிவூட்டப்பட்டுள்ள பிரதான பாதுகாப்பு வழிமுறைகள் பாதிக்கப்பட்ட துகள்களை நுகர்தல் அல்லது சுவாசம் மூலம் உள்ளீர்த்தல் அல்லது பாதிக்கப்பட்ட மேல் பரப்புக்களை தொடுதல் என்பனவற்றோடு தொடர்புடையவையாகவே உள்ளன. கொவிட்-19ஆல் மாசடைந்த நீரை உயிர்வாழும் கலங்களை நுகர்தல் மற்றும் அதிலிருந்து மனிதர்களுக்குப் பரவல் என்றவகையில் அவை அமையவில்லை. துறைசார் நிபுணர்கள் இந்த விடயங்களை  ஏற்றுக்கொள்ளத்தக்க விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுடன் தௌிவுகளை வழங்க வேண்டும். 

இந்த நிபுணத்துவ குழுவில் அடங்கி இருப்பவர்கள், குறிப்பிட்ட துறையில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலை மீறிச் செல்லக்கூடிய அவர்களின் நிபுணத்துவம் அல்லது அவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றிய விவரங்கள் என்பன இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்க்கப்படும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைச்சரவை இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரக்கூடிய கதவுகளை அண்மைய நீதித்துறை தீர்ப்பு திறந்தே வைத்துள்ளது. அரசாங்கமோ அல்லது நிபுணர்களோ தேவையான முடிவுகளுக்கு வருவதை நீதிமன்றம் தடை செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 


2 கருத்துரைகள்:

How do you relate the pic with this post?

@welwisher - why do you worry about the picture. Read the article; give your comments. Do not try to pick the hair from the egg-shell.

Post a comment