December 18, 2020

பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்படுவதையே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்


- நவமணி -

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் மாலைதீவு அரசுடன் கலந்துரையாடியதாகவும் மாலைதீவு அரசாங்கம் அது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இவ்விடயம் குறித்து அமைச்சவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆனால், அவர் இச்செய்தியை முற்றாக மறுக்கவுமில்லை. ஜனாதிபதி செயலகத்துடன் பேசிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை யாவரும் அறிந்தே. 

நீர்மட்டம் உயரமாக உள்ள ஒரு சிறிய தீவாக மாலைதீவு இருந்தபோதிலும் கொவிட்– 19 தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது அதன் பெருந்தன்மைக்கும் அயல் நாட்டு முஸ்லிம்கள் மீதுள்ள கரிசனைக்கும் மனிதாபிமா உணர்வுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கு நாட்டு மக்களாகிய நாம் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

ஆனாலும், மாலைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயம் பாரதூரமானது. முஸ்லிம் அரசியல் தலைமைகள், சமூக, மார்க்க சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இது குறித்து கலந்துரையாடாமல் தீர்மானத்திற்கு வருவது சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமையை மீறும் செயலாகும். 

இம்முயற்சி இலங்கை முஸ்லிம்களை மேலும் ஓரங்கட்டுவதற்கான வழியாக அமையும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹ்மத் சஹீட். 

சகிப்புத்தன்மை மற்றும் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் மத நம்பிக்கைகளின் பெறுமதிக்கு மதிப்பளிக்க வேண்டிய இந்நாட்டில் இதன் காரணமாக முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டு, ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும் என்றே முஸ்லிம்கள் கருதுகின்றனர். 

கொவிட்– 19 தொற்றினால் வெளிநாட்டில் மரணிப்பவர்களின் உடல்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்யவிருப்பதை தாம் ஆதரிக்க முடியாது என முப்பதாண்டு காலமாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹ்மூன் அப்துல் கையூம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

மறுபக்கம் உள்நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் உருவாகியிருக்கும் அழுத்தங்களை சமாளிப்பதற்கான உபாயமாக மாலைதீவு விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்திருக்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

எது எப்படியோ இலங்கை முஸ்லிம்கள் 1400 வருட காலமாக நாட்டுக்கு விசுவாசமாகவும் நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்காமலும் வாழ்ந்து வருபவர்கள். இலங்கைத் தாய்த் திருநாட்டில் பிறந்து வளர்ந்து இங்கேயே தமது முழு ஆயுள் காலத்தையும் கழித்தவர்கள் மரணத்துக்குப் பின்னர் வேறொரு நாட்டில் அடக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ஜனாஸாக்களை மாலைதீவிற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு எதிராக சமூகத்தின் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றமை இதனையே எடுத்துக் காட்டுகிறது.

தாம் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். அது தமது அடிப்படை உரிமை. அதனை எதற்காகவும் அவர்கள் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில் நடைமுறைச் சாத்தியமான தீர்வை முன்வைக்க முன்வர வேண்டும். 

0 கருத்துரைகள்:

Post a comment