Header Ads



உடல்களை எரிப்பதை கொண்டு சிங்கள - முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்படும் வகையில் பிரசாரங்கள்


(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின்  உடல்களை தகனம் செய்வதை  அடிப்படையாக கொண்டு  சிங்களம் மற்றும் முஸ்லிம்  சமூகங்களுக்கிடையில்  பிரச்சினைகள் ஏற்படும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்தார்.

பேருவளையில்  இன்று -31- இடம்பெற்ற நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து  சுகாதார பிரிவினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் என்ற ரீதியில் அனைவரும்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாறாக அவற்றுக்கு ஒத்துழைக்காமல் அதில் அரசியல் இலாபம் தேடுவது முறையற்றதாகும். 

இனங்களுக்கிடையில்  முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில்  மாவனெல்ல பகுதியில் புத்தர்சிலைகள் மீது மீண்டும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை பிரிவினைவாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்.

அத்துடன் ஜனாதிபதியும் அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மீண்டும் எமது நாட்டில் ஏற்பட இடமளிக்கமாட்டார்கள் .

மக்களால் ஒதுக்கப்பட்ட  எதிர்க்கட்சியினர், தீவிரவாதிகளின் தோள்களைப் பற்றி மீண்டும் ஆட்சிக்கு வர  முயற்சிக்கிறார்கள்.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததால் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் பயம், சந்தேகமின்றி பாதுகாப்புடன்  வாழ்வதுடன், சகலரும் சகோதரத்துடன் வாழக்கூடிய சூழலை கட்டியெழுப்ப ஜனாதிபதி மற்றும் அரசாங்கமும் முன்னெடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், தற்போதைய எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இனவாதம், மதவாதம் பேசி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார். 

1 comment:

  1. எதற்கு எடுத்தலும் சிங்களவர்கள் கோபம் அடைந்து விடுவார்கள் என்றாள்.இது ஜனநாயக நாடு இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.