Header Ads



"அரசாங்கம் தனது கைகளால் கழுத்தை, அறுத்துக்கொண்டது போல் ஆகிவிடும்"


மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தால், அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தனது கைகளால் கழுத்தை அறுத்து கொண்டமை போல் ஆகிவிடும் என அரசாங்கத்திற்கு நெருக்கமான பிரபல பௌத்த பிக்கு மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒற்றையாட்சி நாடு என்ற வார்த்தையை மட்டும் மீதம் வைத்து விட்டு நாட்டை பிரிவினைவாதத்திற்குள் கொண்டு சென்ற வேலைத்திட்டமே மாகாண சபை என்ற வேலைத்திட்டம். மாகாண சபைகள் ஒரு புறம் நாட்டை பிரிவினையை நோக்கி இட்டுச் செல்லும். மறுபுறம் பணம் வீண் விரயமாகும்.

மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமில்லை என்பது கடந்த சில ஆண்டுகளாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது இயற்கையாக மரணமடையும் மாகாண சபைகளே இருக்கின்றன. இதனால், இயற்கையாக மரணித்துள்ள மாகாண சபைகளுக்கு உயிரூட்டி, மீண்டும் நடைமுறைப்படுத்தி, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுமாயின் அது 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்காது.

மாகாண சபைகளை ஸ்தாபித்து சிலரது தம்பிமார், சிலரது கணவன்மார், சிலரது உறவினர்கள், பிள்ளைகளுக்கு முதலமைச்சர் பதவிகளை வழங்கி பொதுமக்களின் அபிலாஷைகளை பலி கொடுக்க வேண்டாம் என்பதை நாங்கள் விசேடமாக நினைவூட்டுகிறோம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகள் தொடர்பாக இருக்கும் எதிர்ப்பை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டாம். 28 ஆம் திகதி அரசாங்கம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தவுள்ளது.கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என தீர்மானித்தால் அரசாங்கம் தனது கைகளால் கழுத்தை அறுத்துக்கொண்டது போல் ஆகிவிடும் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் பிரதிநிதிகள் பலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்த போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி பாரிய போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மாகாண சபை முறைமையை அரசு இல்லாதொழித்தால் இனப்பிரச்சினைக்கும்,அதிகாரபரவலாக்கத்திற்குமாக வேறு ஒரு மாற்று முறைமையை முன்வைக்கவேண்டும் என்பதும் தவிர்க்கமுடியாததொன்றாகும்.

    ReplyDelete

Powered by Blogger.