Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம், செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


கொரோனாவினால் உயிரிழப்போரின் உடலங்களை பலாத்காரமாக தகனம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று -10- கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை இந்த நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்திருந்தது.சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைய இந்த நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சவச்சாலையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுமார் 19 பேரின் உடலங்கள் பொறுப்பேற்கப்படாமையால் அவற்றை தகனம் செய்யுமாறு சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயம் தொடர்பில் இன்று தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டிற்குள் பதற்றத்தை தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஏதேச்சதிகார நடவடிக்கைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது மறைப்பதற்கான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை பொறுத்தவரையில் உயிரிழந்த ஒருவரின் உடலம் தகனம் செய்வது ஒரு தண்டனையாக கருதப்படுகின்றது. எனவே அதிகாரிகள் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக கூறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.