Header Ads



சந்திரன் இல்லாத அமாவாசை இரவில், பயணிப்பவனின் ஒளிவிளக்கு போதுமானது...!


- ஏ. எல். முஸாதிக் -

அற்புதங்களை உருவாக்கி, அசாத்தியங்களை சாத்தியப்படுத்துகின்ற திறமை கொண்ட, தன்னிகரற்ற அபூர்வ ஆளுமை மிக்க ஒரு தலைவரை எதிர்பார்த்து காத்திருப்பதை விடவும்  சமூக மாற்றம் எனும் தலைமையில் மக்கள் மயப்பட்ட கூட்டு செயற்பாட்டை நோக்கி நகரவேண்டிய நேரம் வந்து விட்டது. 

அரசியல் மட்டத்திலும், மார்க்கப்பணிகளிலும் இத்தகைய தலைமைகளை காத்திருப்பதை விடவும் மக்கள் முன்வந்து  செயற்படுதலே சிறந்தது. 

இச்செயற்பாடு கூட்டாக  அமைவதே இன்றியமையாதது.

 அல்லாஹ்வின் உதவியும்  கூட்டு செயற்பாட்டில் தான் உள்ளது. 

ஒரு முஃமின் அடுத்த முஃமினுக்கு கட்டிடத்தை போன்றவன், அதில் உள்ள ஒவ்வொரு கல்லும் அடுத்த கல்லை பலப்படுத்துகின்றது.

"நிச்சயமாக அல்லாஹ்வின் அருளில் இருந்து நம்பிக்கை இழப்போர் வழிகேடர்களே" (அல் ஹிஜ்ர் -56 )

கஷ்டத்தின் பின்தான் இலகு இருக்கின்றது. நாளைய விடிவு நிச்சயமானது. நாட்கள் மாறி மாறியே சுழல்கின்றன, இன்றய சாதனைகள் பல நேற்றய கனவுகளாகவே இருந்தன.

இன்றய கனவுகள் நாளைய சாதனைகளாகவே மாறும் என நம்பும் ஒரு முஸ்லிம் ஒரு போதும் நம்பிக்கை இழக்கமாட்டான்.

ஒரு முஸ்லிம் வெற்றியினை மட்டும் எதிர்பார்த்து செயற்படமாட்டான்.மாறாக அல்லாஹ்வின் கட்டளையினை அமுலாக்கும் நோக்குடன் அவனது திருப்தியினை மாத்திரம் எதிர்பார்த்து முயற்சிக்க வேண்டும். 

ஒன்றில் வெற்றி உடனே கிடைக்கலாம் அல்லது தாமதமாகி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலே போகலாம். 

ஆனாலும் நிராசை அடையாமல் முயற்சித்தால் மறுமையிலாவது  வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதுதான் நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்தது. 

காலம் சிறந்ததொரு ஆசான். பொறுமையோடு உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் முயற்சித்தலே இன்றய தேவையும் கூட. 

வெற்றி கிடைத்தால் அது அல்லாஹ்வின் அருள், வெற்றி கிடைக்கப்பெறாவிட்டால் அவன் தனது கடமையினை எத்தி வைத்தவனாவான். 

நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் நீங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என மனிதர்களிடத்தில் கேட்கமாட்டான்.

மாறாக நீங்கள் ஏன் செயற்படவில்லை என்றே வினவுவான். 

இங்கு ஒவ்வொருத்தரும் தங்களது இடத்தில் இருந்து எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்பதனையே சிந்திக்க வேண்டும். 

அரசியல் ரீதியாகவும் , இயக்க ரீதியாகவும் இதனை எதிர்கொண்டு நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையினை சீரழித்து இனவாதிகளுக்கு தீனி போடுகின்றோம். 

அரசியல் தலைமைகள் மற்றும்  முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என காலத்திற்கு காலம் மேடை ஏறி பீர்த்திக்கொள்ளும் தலைமைகளும்,  பிரதிநிதிகளுமே  ஜனாசா எரிப்பு விடயத்தின் பொறுப்பு தாரிகள். 

உரிய முறையில் ஒன்றித்து  குரல் கொடுக்க வேண்டிய இவர்களின்  தற்போதைய மௌனம் எதைத்தான் சொல்லுகின்றது.

வெறுமனே தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து மேடையேறி மக்களுக்கு அரசியல் போதையினை ஊட்டி மக்களின் உரிமைகளை சூறையாடி செல்கின்றனர்.  

இப்படியான மோசடிகளில் இருந்து ஒருபொழுதும் தப்பிக்க முடியாது என்பது நிதர்சனம். 

 தூதுத்துவ பணியில் மும்முரமாக செயற்பட்ட எமது முன்னோர்கள் பலர் தங்களது இலக்குகளை அடையப்பெறாமலேயே மரணித்தனர். 

அல்லாஹ்வினை அன்றி வேறு எவராலும் தண்டிக்க அனுமதிக்கப்படாத நெருப்பினால் அவர்களும் சுட்டுப்பொசுக்கப்படடார்கள். எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் பின்பற்றிய பொறுமை முன்மாதிரியாகும். 

" கிடங்கு வாசிகள் சுட்டெரிக்கும் நெருப்புக்கிடங்கில் கொல்லப்பட்டார்கள். வானங்கள், பூமியின் சொந்தக்காரனும், புகளுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனுமான அல்லாஹ்வினை ஈமான் கொண்டற்காகவே அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள்".

ஆகவே முஸ்லிமாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் சோதனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது என்பதுதான் வரலாறு. 

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் திடடமிட்டு நடக்கின்ற அநியாயங்கள் இதற்கு சான்று. 

ஆகவே சோதனைகள் வெவ்வேறு வழிகளில் வரலாம், அதனை சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்வதே இன்றய இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்குள்ள சவால்கள்.

அரசியலுக்காக இனவாதத்தினை விதைத்து அதில் குளிர் காய்ந்து தங்களின் கஜானாக்களை நிரப்பும் இன்றய சில பெரும்பான்மை அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு நீதியினை நேசிக்கின்ற அதிகமான  பெரும்பான்மை இன மக்களின் நேசக்கரங்களை அழித்துவிடுவது உசிதமானதல்ல. 

நாட்டினுடைய அபிவிருத்தி மற்றும்  எதிர்காலம் பற்றிய எந்தவித சிந்தனையும் இல்லாமல் இனவாதம் மூலம் இந்நாட்டினை அழிக்கப்பார்க்கின்றனர். 

 முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி ஆளுக்கொரு அரசியல் கடசிகளை தொடங்கி மக்களின் பொன்னான வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று மிலாங்கு மீன்களாக செயற்படுகின்ற இப்படியான புளித்துப்போன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்னுமின்னும் நம்மிக்கொண்டா இருக்கின்றீர்கள். 

முஸ்லிம் அரசியல் உரிமைகளை சுமந்து வந்த பல காங்கிரஸ் கட்சிகளின் அசமந்த போக்கும், சுயநலமும், அரசியல் போட்டியும் இந்நிலைமையை உருவாக்க பெரும்பங்காற்றி இருக்கின்றதும் மறுக்க முடியாத உண்மை. 

முஸ்லிம் அரசியல் தலைமைகள் என காலத்திற்கு காலம் தங்களை இனங்காட்டிக்கொண்டு தங்களுக்கிடையே தலைமைத்துவ இருப்பு காரணமாக பிரிந்து,  பிரிந்து ஆளுக்கொரு காங்கிரஸ் கட்சி என்று  சின்னாபின்னமாகி நம்பி இருந்த மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டு இப்போது  அமைதியாக இருக்கின்றனர். 

இவர்களின் அமைதி எதைத்தான் சொல்லுகின்றது. ஆளும் கட்சியோடு இருந்தால் தான் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அபிவிருத்தி அரசியலை காரணம் காட்டி மாறி மாறி வந்த அரசியல் தலைமைகளோடு காலாகாலம் பெல்ட்டி அடித்ததன் சுவையினை இப்போது உணர்கின்றோம். 

எந்தவித கொள்கைகளும் இன்றி அங்குமிங்கும்  பாய்ந்து திரிந்த நம்மை பற்றி பெரும்பான்மை சமூகம் எப்பிடியெல்லாம் கணக்கு வைத்துள்ளார்கள் தெரியுமா !

தம்பிலாக்கள் எல்லோரும் இப்படித்தான் நடுத்தெரிவிலே கைவிட்டு விட்டு  சென்று விடுவார்கள் என்ற உண்மையினை மாத்திரம் இப்போது விளங்கியுள்ளார்கள். 

அபிவிருத்தி அரசியலை செய்து விட்டு இப்போது உரிமையினை இழந்து நிற்கின்றோம். 

மக்களும் தாங்கள் பல தசாப்தங்களாக  ஏமாந்து கொண்டுதான்  இருக்கின்றோம் என்ற பகுத்தறிவு கூட இல்லாமல் காலாகாலமாக அவர்களுக்கே வாக்களிக்கின்றனர். 

திறமையுள்ள, பண்பான, இஸ்லாமிய அடிப்படைகளை கற்றறிந்த, மக்களோடு அன்னியோன்மயாக சுக துக்கங்களில் கலந்து கொள்கின்ற, மக்களின் தேவைகளை, உரிமைகளை  பாராளுமன்றத்தில் உரத்து சொல்கின்ற சிறந்த ஆளுமைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பாமல் இப்போது பிதறித்திருகின்றனர்.

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட மாவீரர் தினத்திற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்க தைரியம் இருக்குமென்றால ஜனாசா எரிப்பிற்கு எதிராக  உங்களால் பேச முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன.  

பெரும்பான்மை சிங்கள சில  பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போது ஜனாசா எரிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். 

சட்ட ரீதியாக எந்தவித சட்ட நடவடிக்கையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுக்க முடியாத சந்தர்ப்பம் இருக்கின்ற போதும், ஏன் நீங்கள் மௌனியாக நிற்கின்றனர். 

உரத்து பேசுவதற்கு பேச்சு வன்மை இல்லை, தைரியம் இல்லை என்றால் முடியுமானவர்களுக்கு இடம் விட்டு ஒதுங்குவதுதான் நீங்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் பெரும் கைங்கரியம். 

தேர்தல் வருகின்ற பொழுது பொய்களையும், அபாண்டங்களையும் மேடைகளில் கூறி எதிர்க்கட்சி காரர்களை தூற்றி மக்களுக்கு ஒரு வகையான போதையினை ஊட்டி அவர்களின் வாக்குகளை அபகரித்து செல்லும் அரசியல் வாதிகளிடத்தில் இனி மேலாவது கவனமாக இருங்கள். 

வாக்குரிமைக்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும், தப்பிக்க முடியாது. 

சிலர் இருக்கின்றனர். அவர்கள் செயற்படுவதும் இல்லை, செயற்படுகின்றவர்களை விடுவதும் இல்லை.

 கோட்பாட்டு உலகிலும், கனவுலகிலும் அவர்கள் சஞ்சரிக்கின்றார்கள். 

இவர்கள் விமர்சிப்பதில் வல்லவர்கள், இவர்கள் ஆக்கப்பணியில் சோம்பேறிகளாகவும், அழிவுப்பணியில் முன்னணி வீரர்களாகவும் இருக்கின்றனர். 

இவர்கள் செயற்பாட்டாளர்களின் தவறுகளையும், சறுக்கல்களையும் தேடிப்பிடித்து நுண்காட்டி வைத்து நோக்குகின்றனர்.

செயற்படுகின்றபோதுதா ன் தவறுகள் இடம்பெறுவது நிதர்சனம்.

ஆகவே கூட்டு செயற்பாட்டுடன் ஒன்றித்து தூர சிந்தனையோடு, உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல்  பொறுமையோடும், புத்தி சாதுர்யமாகவும் சாதிக்கின்ற சிவில், சமூக கூட்டு தலைமைகளின் தேவையே தற்பொழுது  இன்றிமையாதது. 

2 comments:

  1. சமகாலத்துக்கு மிகவும் அவசியமான ஒரு ஆக்கம்

    ReplyDelete
  2. ஒன்றுக் கொன்று முரண்பாடான கருத்து. ஆரம்பித்தது ஒன்றில் முடித்தது ஒன்றில்.

    ReplyDelete

Powered by Blogger.