Header Ads



சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் மொத்தமாக 28541 கைதிகள் இருக்கின்றனர். அவர்களில் 52 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்கள் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் அனுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த திங்கற்கிழமை கேற்கப்பட்ட கேள்விக்கு இன்று பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் மொத்தமாக 28 ஆயிரத்தி 541 கைதிகள் இருக்கின்றனர். அவர்களில் 27ஆயிரத்தி 23 பேர் விலக்குமறியல் கைதிகளாகும். அதில் 7ஆயிரத்தி 818 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்களாகும். அதேபோன்று மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரண்டாயிரத்தி 891பேர் இருந்துள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்தி 59 பேர் விலக்கு மறியல் கைதிகள். 732 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

மேலும் கடந்த 2 ஆம் திகதியாகும் போது மஹர சிறைச்சாலை கலவரத்தினால் 11 பேர் மரணித்துள்ளதுடன் 106 பேர் காயமடைந்துள்ளனர். 2 அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு போதனா வைத்தியசாலை மற்றும் மஹர சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 2019 புள்ளி விபரப்படி சிறைச்சாலைகளில் இருக்கும் மொத்த கைதிகளில் 52 வீதம் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்கள். அதனால் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு புனவர்வாழ்வளிப்பதற்கு  தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதன் பிரகாரம் வேரகல பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு இரண்டாயிரம் விடுதி அறைகளை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் போதைக்கு அடிமையானவர்கள் சிறைசாலைக்கு வந்த பின்னர் அடிக்கடி சமூகமயமாகி வருகின்றனர். அதனால் போதையுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து சிறைச்சாலையிலிருப்பது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வாகாது என உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

1 comment:

  1. ஆன்மீக வழிகாட்டல்களை வழங்குங்கள் நிச்சயம் வெற்றியளிக்கும்......

    ReplyDelete

Powered by Blogger.