Header Ads



சவுதிக்கு சென்று உயிரிழந்த விஜயகுமாரி, சடலத்திற்காக, 5 மாதங்களாக காத்திருக்கும் குடும்பம்


மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்,  உடலில் ஆணியேற்றப்பட்ட ஆரியவதி, கம்பிகளால் காயப்பட்ட வீரையா லட்சுமி, 

சடலங்களாக நாடு திரும்பிய இன்னும் பலர்…

கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 61,000 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வங்கி கூறுகின்றது.

அவர்கள் தொடர்பில் தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய, அதிர்ச்சியளிக்கும் பல்வேறு உண்மைகள் வௌியாகியுள்ளன.

சவுதி அரேபியாவிற்கு சென்று உயிரிழந்த விஜயகுமாரியின் முகத்தைப் பார்ப்பதற்காக, அவரின் குடும்பம் கடந்த ஐந்து மாதங்களாகக் காத்திருக்கிறது.

அக்கரப்பத்தனை டொரிங்டனைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான தினேஷ்ராஜ் விஜயகுமாரி நிரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக சவுதிக்குச் சென்றார்.

2016ஆம் ஆண்டில் சவுதி சென்ற விஜயகுமாரி மூன்று மாதங்கள் மாத்திரமே தம்முடன் தொடர்பில் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறினர்.

பணிப்பெண்ணாகச் சென்ற விஜயகுமாரி இறந்துவிட்டார் என்ற தகவல் கடந்த ஜூன் மாதம் குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது.

மனைவின் சடலத்தைக் கொண்டு வருவதற்காக கணவர் தினேஷ்ராஜ் எத்தனையோ அலுவலகங்களை நாடிய போதிலும் சடலம் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

குடும்பத்தின் வறுமையும் நீங்கவில்லை…

விஜயகுமாரியும் வீடு திரும்பவில்லை…

இது ஒரு சம்பவம் மாத்திரமே…!

கடந்த 6 வருடங்களில் பணிப்பெண்களாகச் சென்றவர்களில் 310-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 6 வருடங்களில் மாத்திரம் வௌிநாடுகளில் உயிரிழந்த 31 இலங்கைப் பணிப்பெண்களின் சடலங்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. அவை வௌிநாடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் 281 பணிப்பெண்களின் சடலங்கள், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அறிய முடிந்தது.

2016 ஆம் ஆண்டில் 70 சடலங்களும், 2017ஆம் ஆண்டில் 74 சடலங்களும் 2018 ஆம் ஆண்டில் 47 சடலங்களும் 2019ஆம் ஆண்டில் 63 சடலங்களும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 27 பேரின் சடலங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.