Header Ads



2 கோடி ரூபாய் செலவில், மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி அபிவிருத்தி


மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபை இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மாநகரசபையின் பிரதிமேயர் எம்.ரீ.எம்.இக்பால்   தெரிவித்தார்.

இதன்படி 9 ஏக்கர் கொண்ட மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி வாகனத் தரிப்பிட வசதி, அங்கு வருவோருக்கு தங்கியிருக்க மண்டபம் உட்பட பல நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதன் பணி ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக பிரதிமேயர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கவினதும் பிரதி மேயரினதும் முயற்சியால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

கொழும்பு மாநகரில் உள்ள மையவாடிகளை அபிவிருத்தி செய்வதற்கு எடுத்த தீர்மானத்தின் படியே  மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

500 வருடங்கள் பழமை மிகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி கொழும்பு பெரிய பள்ளிவாசலால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியிலே வீதிகளுக்கு உள்ளே இருக்கின்ற வீதிகளுக்கு காபட் இடுவது, மின் குமிழ்களைப் பொருத்துவது உட்பட பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பதாக புதனன்று அங்கு சென்று அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்ட பிரதி மேயர் இக்பால் தெரிவித்தார்.

இதேநேரம் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுடைய ஜனாஸாக்களை சுத்திகரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புறம்பான ஓர் அறை அமைக்கப்பட்டு இருக்கின்றது. மேமன் சங்க அனுசரணையுடன் இந்த அறை அமைக்கப்பட்டு  புதனன்று திறந்து வைக்கப் பட்டிருக்கின்றது. 

வெளிப் பாதையூடாக பெண்கள்  புறம்பாக வந்து நின்று இந்தப் பணிகளை செய்வதற்காக பிரத்யேகமாக இந்த அறை அமைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி மேயர் இக்பால் தெரிவித்தார். 

ஏனைய முஸ்லிம் மையவாடி களையும் இவ்வாறு அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியை முன்னாள் அமைச்சர் பௌசி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருக்கும்போது பாதைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பிறகு எந்த ஒர் அபிவிருத்தி நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்றும் பிரதி மேயர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏனைய மையவாடி களையும் பூரண வசதிகளுடன் கட்டமைப்பு வேலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி மேயர் இக்பால் தெரிவித்தார்.

நவமணி

No comments

Powered by Blogger.