Header Ads



கொழும்பு நகரமே ஆபத்தான மையமாக மாறியுள்ளது - Dr ஹரித


கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலைமைக்கு அமைய பிரதேசத்தில் சன நடமாட்டத்தை குறைக்க அதிகாரிகள் துரிதமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் காணப்படும் ஆபத்தான நிலைமை சம்பந்தமாக சுகாதார அமைச்சு தனது பரிந்துரைகளை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஆபத்துக்கு ஏற்ற வகையில் தீர்மானங்களை எடுத்து முன்நோக்கி செல்வது என நாடு என்ற வகையில் நாம் முடிவு செய்துள்ளோம்.

இதற்கு அமைய கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களுக்கு மேலதிகமாக மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேயர், சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்களை கவனத்தில் எடுத்து கொண்டால், கொழும்பில் ஏற்பட்டுள்ள ஆபத்து தெளிவானது.

புள்ளி விபரங்களை எடுத்துக்கொண்டால், அதிகளவான நோயாளிகள் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 400 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களில் மாத்திரமே குறைவான எண்ணிக்கையில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரமே ஆபத்தான மையமாக மாறியுள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பகுதிகளை முகாமைத்துவம் செய்வது குறித்து விசேட கவனத்தை செலுத்த வேண்டும்.

கொழும்பு நகருக்கு சுதந்திரமாக மக்களை நடமாட அனுமதித்தால், ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் அதிகம்.

மக்கள் நடமாட்டத்தை குறைப்பது சம்பந்தமான தீர்மானத்தை உடனடியாக எடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.