Header Ads



ஜனாதிபதியின் பயணத்தின் பின், அபிவிருத்தியை நோக்கி பதுளை


பதுளை மாவட்டத்தின் பொது வசதிகள் குறைந்த, வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் ஹல்துமுல்லை பிரதேசத்தின் வெலங்விட மற்றும் அக்கர சீய கிராமங்கள் தற்போது துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளில் பெருமளவு தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் நிறைவுசெய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 48000 மக்கள் வாழும் ஹல்துமுல்லை, பதுளை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலாளர் பிரிவாகும். வெலங்விட மற்றும் அக்கர சீய கிராமங்கள் மிகவும் பின்தங்கிய கிராமங்களாக கருதப்படுகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ”கிராமத்துடன் உறவாடல்” நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து செப்டெம்பர் 25ஆம் திகதி ஹல்துமுல்லை, குமாரதென்னை கிராமத்திற்கு கண்காணிப்பு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டார்.

அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் தமது பாரம்பரிய கிராமங்களை விட்டுச் செல்வதாக மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களின் மனக் குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் மூன்று மாத காலப்பகுதியில் பிரதேசத்தின் வீதிகள், மின்சாரம், நீர் மற்றும் பாடசாலை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

19 அரச நிறுவனங்களினால் 51 திட்டங்களின் கீழ் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து ஹல்துமுல்லை கிராமத்தில் விரிவான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்திக்கு ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். 12கி.மீ நீளமுடைய அக்கர சீய – வெலங்விட வீதியின் 05 கி.மீ கொங்ரீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 07 கி.மீ காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அக்கர சீயவில் இருந்து வெலங்விடவுக்கு செல்வதற்கு செலவான ஒன்றரை மணி நேரம் இந்த வீதி நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் 20 நிமிடங்களாக குறைவடையும். வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் பஸ் வண்டியொன்றை போக்குவரத்தில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளது.

கம்பஹ – வெலங்விட, கெலிபனாவல- ஹால்கன்ன- அக்கர சீய- கக்குடுஅராவ மற்றும் பெரகல – வெல்லவாய வீதிகளும் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.

மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அப்பணிகள் நிறைவடைந்ததும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்த தயாராகவுள்ளன.

தேசிய நீர் வழங்கள், வடிகாலமைப்பு சபை குடிநீர் வழங்குவதற்காக சாத்தியவள அறிக்கை மற்றும் உத்தேச திட்டத்தை தயாரித்துள்ளன.

17வது பொறியியல் பிரிவு வெலன்விட, குமாரதென்ன பாடசாலயில் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு பொறுப்பாகவுள்ளது. 04 வகுப்பறைகள் கொண்ட கட்டிட நிர்மாணப் பணிகள் செப்டெம்பர் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சொரகுண பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அனைத்து பாடங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வெல்லவாய – கம்பஹ பாடசாலைகளுக்கும் ஜனாநந்த பாடசாலைக்கும் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயம் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கொடபோகஸ்தென்ன விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு அண்மையில் கிராம மக்களிடம் கையளிக்கப்பட்டது.

187 காணிகளின் அளவிடும் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன், எஞ்சிய காணிகளின் அளவிடும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வனசீவராசிசகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு சொந்தமான விடுவிக்கமுடியுமான காணிகள், பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பத்திரங்கள் முறைமையின் கீழ் வழங்கப்படவுள்ளன.

கறுவா மற்றும் மிளகு செய்கையாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குமாரதென்ன கிராமத்தின் 57 விவசாயிகள் 160 ஏக்கர் நிலத்தில் மிளகு செய்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சேதன கிராம அபிவிருத்தி திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வெலங்விடவில் கறுவா செயன்முறை மத்திய நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 31 செய்கையாளர்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து பாரம்பரிய மட்பாண்ட கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 18 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.

காட்டு யானைகள் பிரச்சனைக்கு தீர்வாக மின்சார வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செயலிழந்து காணப்பட்ட வெலங்விட மற்றும் குமாரதென்ன மின்சார வேலிகள் புதுப்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அவர்கள் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்டிருந்த குமாரதென்ன, சரத் ரணதுங்கவின் வீட்டையும் பார்வையிட்டார். அதன் போது ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பணிப்புரையின் பேரில் இலங்கை இராணுவத்தினால் 03 அறைகள் கொண்ட அங்க சம்பூரணமான ஒரு வீடு அவருக்கு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக எந்த அரசாங்கத்தினாலும் கவனம்செலுத்தப்படாதிருந்த ஹல்துமுல்லை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு பிரதேச வாசிகள் ஜனாதிபதி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.11.08



1 comment:

  1. இதுவா முக்கியம்? முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் விளையாடப் படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.