Header Ads



இறந்தவர்களை தகனம் செய்யும் போது மௌனமாக இருப்பதன் காரணமும், மக்களின் புலம்பலும்..!!


- Dr. Anpudeen Yoonus Lebbe -

இன்று இலங்கையில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் Covid-19 ஐ இரண்டாவது அலை என்று கூறப்படுகிறது ஆனால் உன்மையில் இரண்டாவது அலையா அல்லது சமூகத்தில் ஆங்காங்கே மறைந்து காணப்பட்ட Covid-19 வைரஸின் பெருக்கமா என்று தெரியவில்லை. எது எப்படியோ மறணித்த நபர்களின் உடலில் Covid-19 உறுதிப்படுத்தப் படுகின்றன பொழுது (மறணம் நிகழ்ந்தது வேறு காரணங்களாக இருந்த போதிலும், உதாரணமாக மாரடைப்பு) அந்த உடல்கள் எரியூய்டப்படுகின்றன. ஒவ்வொரு பிரச்சினையும் அவரவருக்கு வரும் பொழுதுதான் அதன் அழுத்தமும் அதன் விளைவுகளும் விளங்கும், அதற்கு அப்பால் அதை ஒரு செய்தியாகத்தான் மக்கள் பார்ப்பது. இதுதான் இன்றைய அரசியல் வாதிகளின் நிலைப்பாடும். தேர்தல் காலங்களில் இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதும், உதாரணமாக கடந்த பொதுத் தேர்தலின் போது ஞானசாரத் தேரர் கல்முனைக்கு வருகிறார் என்றும், கருணா அம்மான் கல்முனையை பிடிக்கப்போகிறார் என்றும் மக்களை ஏமாற்றி தன்னை தோல்வியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கற்பனையில் கதைகளை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி அடைந்தார் கல்முனையின் காவலன் என்று தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட அந்த சகோதரர். அது அன்றைய அவருடைய தேவையும் அவருடைய பிரச்சினையும். அதேபோன்று அவருடைய இன்றைய தேவையும் பிரச்சினையும்தான் ஏதாவது மேலதிக பதவி ஒன்றை பாராளுமன்றக் கதிரையுடன் இணைத்துக் கொள்வதற்காக இரவு பகலாக ஓடித்திரிந்து மற்றவர்களையும் ஒன்று சேர்த்து தோல்வியின் பக்கம் இருந்த 20 தை வெறியடையச் செய்தது. அதன்பிறகு அதனை நியாயப்படுத்த கல்முனையை காப்பாற்ற கையை உயர்த்தியதாக முதலில் கூறியதும் அதன் பிறகு தமிழர்களின் தந்திர அரசியலில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்க 20 தை காப்பாற்றியதாக கூறிய கதைகளும்.

அதேபோன்று அதே கட்சியின் தலைவர் முதலாவது எரிப்பின் பின்னர் தேர்தலில் இலாபத்தை பெறுவதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போல், சுமுகமான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டி பிரச்சினையை அறிக்கையை விட்டு பிரச்சினையை பூதாகரமாக உருவெடுக்கவைத்து ஏற்கனவே சந்தர்ப்பங்களை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவல் பொரி கிடைத்தால் போல் இந்த எரிப்பு சம்பவத்தை உருவாக்கி கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கின்றார். அதேபோன்று இரட்டை பிரஜாவுரிமையை ஆதரித்து கதைகள் அளந்தார் ஒரு சகோதரர், யாருக்காக வாக்களித்தாரோ, அவர் அவருடைய அபிலாஷைகளை அடையப்போகின்றார் ஆனால் மறணித்த உடல்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  அவ்வாறுதான் மற்ற உறுப்பினர்களும் கையை உயர்த்திவிட்டு மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு சாட்டுக் காரணங்கள் கூறித் திரிகிறார்கள்.  


தற்போதைய நீதி அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மரண எரிப்பு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்ற என்று கூறினார் ஆனால் உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குகின்றபோது  ஏன் இலங்கை சுகாதார அதிகாரிகள் மட்டும் மறுக்கின்றனர் என்று கூட கேட்பது அரசாங்கத்தின் கடமை இல்லை என்பதுபோல் அவரின் பதில் அமைந்திருந்தன.

தேசியக் கட்சியில் உள்ளவர்கள் அவர்களுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள அவர்களுடைய கட்சிக்கும் கட்சிக் கொள்கைக்கும் ஆதரவாக பேசுகின்றனர் அதேநேரம் தனித்துவக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய சுயநல அரசியலை பாதுகாக்க பாடுபடுகின்றனர் அதேநேரம் இடைநடுவில் உள்ள இவர்களின் கைக்கூலிகள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டும் புகழ் பாடிக் கொண்டும் இருக்கிறார்கள், அதேசமயம் அப்பாவிப் பொதுமக்கள் செய்வது தெரியாமலும் எதிர்காலத்தில் எதைச் செய்யப்போகிறோம் என்று கூட சிந்திக்க தெரியாமலும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.

இறந்தவர்களின் உடல்கள் எரியூய்டப்படுகின்றன போது ஏற்படுகின்ற வலியும் வேதனையும் அவர்களின் இரத்த உறவுகளுக்குத்தான் புரியும், இந்த சுயநல அரசியல் வாதிகளுக்கும் அவர்களுடைய கைக்கூலிகளுக்கும் புரியாது. இவர்கள் இதையும் வைத்து அரசியல்தான் செய்தார்கள் இனியும் இதைவைத்து அரசியல்தான் செய்வார்கள் ஆனால் மக்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம். மாற்றம் ஒன்று மாறாதது ஏமாற்றமே. 

எந்த பிரதான கட்சியானாலும் அவர்களுடைய கட்சி ஆட்சிக்கு வருவதற்கும், கிடைத்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுவற்க்கும் முயற்சிசெய்து கொண்டே இருப்பார்கள் அது தற்போதைய ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி அல்லது இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி. எவ்வாறாயினும் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள்தான் இந்த நாட்டை ஆளமுடியும் அவ்வாறாயின் சிறுபான்மை சமூகமான நாங்கள் யார் ஆட்சியாளர்களாக வந்தாலும் எமது சமூகத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு எமது முடிவுகளும் நகர்வுகளும் அமையவேண்டும். நமது அரசியல் வாதிகள் பணத்திற்கும் பதவிகளுக்கும் தொடர்ச்சியாக ஆசைப்பட்டதன் விளைவுகள்தான் எமது இன்றைய நிலையும் இந்த ஜனஸா எரிப்பும். நாளை மாற்றுத் தரப்பு ஆட்சிக்கு வரும் போது இதேநிலை உருவாகமாட்டாது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை ஏனெனில் நம்மவர்களுடைய தொப்பி பிரட்டும் பழக்க வழக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால். இதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்கூடாக காண்கிறோம், ஒருகாலத்தில் பதவிகளை வழங்கி சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்டவர்களின் நிலை அதே ஆட்சியாளர்களால் எவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது என்று. 

இன்று சிலருக்கு முழு மந்திரி, அரை மந்திரி பதவிகள் கிடைக்கலாம் அதுதான் அவர்களின் இலக்கும் கூட. இப்பதவிகளும் சலுகைகளும் சிலரை திருப்திப்படுத்தலாம், வாழவைக்கலாம் ஆனால் இவைகள் எமது சமூகத்தின் மீது உள்ள கலங்கத்தை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைமைக்கு நாம் தள்ளப்படலாம். 

ஆட்சியாளர்கள் மாறினாலும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமை மாறும் என்று  கருதமுடியாது. எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் எவ்வாறு நாம் நடுநிலையான, பாதுகாப்பான, சுயமரியாதையான சமூகமாக வாழவேண்டும் என்று மட்டும் சிந்திக்க வேண்டும். அரசியல் வாதிகள் சிந்திக்க மாட்டார்கள் மக்களாகிய நீங்கள் சிந்திக்காதவரை. 

ஆட்சியாளர்களின் மனங்களில் மாற்றங்களைக் கொடுத்து மறணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு இறைவனைப் பிரார்த்தித்து இதை அடைவதற்கு தனிப்பட்ட ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். 

2 comments:

  1. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

    ReplyDelete
  2. You could something about Rishad too....or you dont want..?
    Big jock

    ReplyDelete

Powered by Blogger.