Header Ads



மேர்வின் சில்வாவின் சீற்றம்


மூன்று தசாப்த கால போரை முடித்த விதமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, ஸ்ரீலங்கா அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத ஒன்று என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் -02- விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தெருக்களில் நாய்கள் வெறிப்பிடித்தது போல முன்தீர்மானம் மற்றும் ஏற்பாடுகள் இன்றி அரசாங்கம் திடீரென 5 நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை மேல்மாகாணத்தில் அமுல்படுத்தியது.

பின்னர் திடீரென அந்த ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. அநுதினமும் தொழிலுக்குச் சென்று வருமானம் பெற்று உணவுகொண்டவர்கள் அநேகம்பேர் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொவிட்-19 தொற்றானது கடந்த வருட இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டதுடன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எமது நாட்டில் பரவத்தொடங்கியது.

அப்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தொற்றின் அபாயகரமான விடயங்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்.

ஆனால் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, ஏற்ற ஏற்பாடுகளை செய்யவுமில்லை. இன்று அதன் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை அரசாங்கம் செய்தாலும் எத்தனையோ பேருக்கு இந்த உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.