Header Ads



ஷரீஆ கல்வி புதிய விடயமல்ல, ஷரீஆ என்ற பெயரை நீக்காமல் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்போம் - பீரிஸ்


ஷரீஆ என்ற பெயரை நீக்காமல் அதன் விடயப்பரப்புகளை ஆராய்ந்து பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வோம். அத்துடன் பெட்டிக்கலோ கெம்பஸ் தனியார் நிறுவனமாக அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை. அரசாங்கத்துக்கு கீழே செயற்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தனவினால் வினப்பட்டிருந்த, மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கின்றதா? ஷரீஆ சட்டத்தை கற்பிக்க இடமளிக்கின்றதா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு பெட்டிக்கலோ கெம்பஸை நிர்மாணிக்க வெளிநாடுகளில் இருந்து சட்டவிராேதமாகவே பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும்போது, அது மத்திய வங்கியின் வெள்நாட்டு நாணயமாற்று பிரிவினூடாகவே அனுமதிக்கப்படவேண்டும். அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லாமலே இந்த நிறுவனத்துக்கு பணம் வந்திருக்கின்றது. அதனால் அந்த பல்கலைக்கழத்தை தனியார் நிறுவனமாக அரசாங்கம் அங்கிகரிக்காது. அதேபோன்று பட்டச்சான்றிதழ் வழங்கும் நிறுவனமாகவும் அதற்கு அங்கிகாரம் வழங்குவதில்லை.

அத்துடன் எமது அரசாங்கம் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றது. அதற்கு போதுமான வளங்கள் தேவையாகின்றன. பெட்டிக்கலோ கெம்பஸில் இருக்கும் இயற்கை வளங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திலோ பேராதனை பல்கலைக்கழகத்திலோ இல்லை. அதனால் பெட்டி கெம்பஸை அரசாங்கம் பெற்றுக்கொண்டு எமது மாணவர்கள் பிரயோசனம் எடுக்கும்வகையில் அதனை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அத்துடன் ஷரீஆ சட்டம் தொடர்பான கல்வி 2015க்கு முன்னரும் இருந்தது. 2015க்கு பின்னரே இதுதொடர்பில் பிரச்சினை வந்தது. 2015க்கு முன்னர் முறையான வேலைத்திட்டம் இருந்தது. ஷரிஆ பாடநெறியில் மறைந்து வேறு பாடத்திட்டங்களை உட்புகுத்த இடமளிக்கப்படவில்லை. ஆனால் 2015க்கு பின்னர் வெளிநாட்டு பேச்சாளர்கள் வந்தார்கள். அவர்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்படவில்லை. தனிவழி விசாவில் விமான நிலையத்துக்கு வந்து, மத்தரசாவுக்கு கற்பிக்க செல்ல அனுமதி கேட்டதும் வழங்கினார்கள். நல்லிணக்கம் என்ற பெயரில் அனைத்தையும் விட்டுக்கொடுத்தனர். எந்தவித கட்டுப்பாடும் இருக்கவில்லை. 2015க்கு முன்னர் இதுதொடர்பில் பலமான செயற்திட்டம் ஒன்று இருந்தது.

எனவே ஷரீஆ கல்வி புதிய விடயம் அல்ல. அதனால் ஷரீஆ என்ற பெயரை நீக்காமல் அதன் பாடத்திட்டங்களை ஆராய்ந்து, ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்போம். அத்துடன் வெளிநாட்டு போதகர்கள் தொடர்பில் நாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவோம் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)


1 comment:

  1. பதில் சொல்வதற்காக இஸ்லாத்தைப்படிக்கப் போய் அமைச்சர் இஸ்லாதிற்கு மாறினாலும் ஆச்சரியமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.