Header Ads



சர்வதேச ரீதியில் எமக்கு எவ்வித அழுத்தமும் பிரச்சினைகளும் ஏற்படாது - வெளிவிவகார அமைச்சர்


சர்வதேச ரீதியில் எமக்கு எவ்வித அழுத்தமும் பிரச்சினைகளும் ஏற்படாதென வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையானது ஏனைய உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும். எமது நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்கால இயக்கத்துக்கும் தேவையான சித்தாந்தமான கொள்கைகளுமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அதிவிசேட வெற்றிக்கு கிடைத்த மக்கள் ஆணையானது கடந்த அரசாங்கம் நாட்டுக்கு செய்த நாசகரமான செயல்களில் இருந்து விலகிக்கொள்வதற்கான மக்கள் ஆணையாகும் என்பது வெளிப்படுத்தப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. கடந்த அரசாங்கம் ஒரு விளையாட்டு அரசாங்கமாகவே செயற்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமே ஆதரவாக வாக்களித்தது. தமது நாட்டுக்கு எதிராக வாக்களித்த எந்தவொரு நாடும் வரலாற்றில் இதற்கு முன்னர் இருக்கவில்லை. அதேபோன்று எமது இராணுவத்தினர் வெற்றிகொண்ட அனைத்தையும் காட்டிக்கொடுத்தனர். நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்படவும் இணக்கம் வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் அறிவிக்காது உரிய அனுமதிகள் பெறப்படாது ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர். தற்போது எம்மை விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மஹிந்த ராபஜக்ஷ, அன்று தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டை வெற்றிக்கொண்ட பின்னர் ஐ.நாவின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வந்தார். பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அவருடன் நாம் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக கூறுகின்றனர். நாம் எவ்வித உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை. கூட்டு அறிவிப்பொன்றையே விடுத்திருந்தோம். தமது நாட்டுக்கு எதிராக தவறான விதத்தில் பேசவேண்டாமென எதிர்க்கட்சியினரை கேட்கிறோம். எமது பொருளாதாரக் கொள்கைகளை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். எமக்கிடையில் எத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தாய் நாட்டின் நன்மையை கருதி சர்வதேச ரீதியில் ஒரு நிலைப்பாட்டில் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுக்கிறேன். எமது அயல் நாடுகளில் பாராளுமன்றத்தில் எத்தகைய மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் சர்வதேச ரீதியில் ஒரே நிலைப்பாட்டில்தான் செயற்படுகின்றன.


No comments

Powered by Blogger.