Header Ads



ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர், அமீர் அஜ்வத் விடுக்கும் விசேட அறிவித்தல்


இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்கள் சட்டரீதியற்ற முறையில் ஓமான் நாட்டுக்கு இடம்பெயர்வதனைத் தடுக்கும் முகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஓமான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் ஒரு “புதிய நடைமுறையை” அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நடைமுறையின்படி, ஆட்சேர்ப்பு முகவர் அல்லது தனிநபர் மஸ்கட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' (No Objection Certificate) இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தத்துடன் சேர்த்து சமர்ப்பிப்பதனால் மாத்திரமே ஓமான் நாட்டின் கடவுச்சீட்டு மற்றும் குடிவரவுக்கான பணியகம் (ROP) இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வீசாவை வழங்கும்.

எனவே, இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களை ஓமான் நாட்டில் பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர்கள் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திலிருந்து 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' பெற்றுக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓமான் நாட்டில் பணியமர்த்த விரும்பும் அனைத்து ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர்களும் பின்வரும் நடைமுறையை பின்பற்றுமாறு மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகின்றது:

1. இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் வீட்டுப் பணியாளரினதும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை ஓமான் நாட்டின் மனிதவள அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளில் தேவையான சான்றளிப்புக்களுக்காக சமர்ப்பித்தல்.

2. ஓமான் சுல்தானேட்டின் மனிதவள அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன சான்றளித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அங்கீகாரத்திற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சமர்ப்பித்தல்.

3. இலங்கைத் தூதரகம் அங்கீகரித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அனுப்புவதன் மூலம் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப பணியகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். 

4. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பெண் வீட்டுப் பணியாளரைப் பதிவுசெய்த பின்னர், 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்குவதற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஒரு கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும். 

5. இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் வீட்டுப் பணியாளரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கட்டாயமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதனை சரிபார்த்ததன் பின்னர், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்கும்.

6. பின்னர், ஓமான் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்கள் பணிகளில் ஈடுபடும் பொருட்டு, அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு வீசாவினை பெற்றுக் கொள்வதற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழுடன்' வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை கடவுச்சீட்டு மற்றும் குடிவரவுக்கான பணியகத்துக்கு (ROP)சமர்ப்பித்தல் வேண்டும். 

இந்த நோக்கத்திற்காக, 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழ்' இலவசமாக வழங்கப்படும் என்பதை மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. 

இலங்கைத் தூதரகத்தினால் 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்குவதற்கான புதிய நடைமுறை 2020 அக்டோபர் 01 ஆந் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

இந்த புதிய நடைமுறையைப் பற்றி தயவுசெய்து அறிந்து கொள்ளுமாறு ஓமான் நாட்டில் தொழில்வாய்ப்புக்களைத் தேட விரும்பும் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களைக் கேட்டுக் கொள்வதோடு அவர்களை வேலைக்கு அமர்த்தும் ஆட்சேர்ப்பு முகவர் அல்லது தனிநபர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றுமாறும் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொள்கிறது. 

எந்தவொரு மூன்றாம் நாடு வழியாகவும் விஜயம் / சுற்றுலா வீசா (visit/tourist) என்ற பிரிவின் கீழ் ஓமான் நாட்டில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளிக்கும் நேர்மையற்ற முகவர்கள் / தனிநபர்களிடம் சிக்கி விட வேண்டாம் என எதிர்வரும் காலங்களில் ஓமானில் தொழில் தேட விரும்பும் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களுக்கு தூதரகம் அறிவுறுத்துகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களின் சட்டரீதியற்ற இடம்பெயர்வு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு கட்டாயமாக கட்டுப்பட்டு, தூதரகத்துடன் ஒத்துழைக்குமாறு ஓமான் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்த விரும்பும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர்களை மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கின்றது.

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் சட்டரீதியற்ற இடம்பெயர்வு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு உதவிய ஓமான் மற்றும் இலங்கை அதிகாரிகள் அனைவரது ஒத்துழைப்பு மற்றும் உறுதியான ஆதரவிற்கும் ஓமான் சுல்தானேட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

(மனாஸ் ஹுசைன் )


No comments

Powered by Blogger.