Header Ads



யார் இந்த மரடோனா...?


மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா?

"இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரடோனாவை மர்லின் மன்றோவுடனோ அல்லது மாவோ சே-துங்குடனோ இணைத்து பார்த்திருப்பார்.  மரடோனா ஒரு கால்பந்து வீரராக இல்லாதிருந்தால், நிட்சயமாக அவர் ஒரு புரட்சியாளராகியிருப்பார் என நான் நம்புகிறேன்.” என திரைப்பட இயக்குனர் எமிர் கஸ்துரிகா தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். (Emir Kusturica, film director)

ஆம் மரடோனா, அர்ஜென்டினாவில் புதிய தாராளவாதத்தை முன்னெடுத்த ஜனாதிபதி கார்லோஸ் மெனெம் (Carlos Menem) மற்றும் அவரது நண்பரான ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டொமிங்கோ கேவல்லோ(Domingo Cavallo) ஆகியோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மரடோனா இடதுசாரி சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதரானார்.

இவர் கியூபாவில் சிகிச்சை பெற்றபோது கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்டார். மரடொனா பற்றிய தனது குறிப்பொன்றில் "டியாகோ ஒரு சிறந்த நண்பர், மிகவும் உன்னதமானவர், அவர் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கியூபாவுடன் மிகச் சிறந்த நட்பை பேணும் அவர் தனது தனிப்பட்ட நலன்களுக்கு அதனைப் பயன்படுத்தவில்லை” என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார்.

மரடோனா, காஸ்ட்ரோவின் உருவப்படத்தை தனது இடது காலிலும், பிடலின் நெருங்கிய சக தளபதியான அர்ஜென்டினாவின் சே குவேராவின் உருவத்தை, தனது வலது கையிலும்(பச்சை குத்தி- tattooed) தாங்கியுள்ளார். “எல் டியாகோ” என்ற தனது சுயசரிதை நூலை காஸ்ட்ரோவுக்கும் தன்னை ஈர்த்த மக்களுக்கும் அர்ப்பணித்தார். அதில், "பிடல் காஸ்ட்ரோவிற்கும், , அனைத்து கியூப மக்களுக்கும் அர்ப்பணம்." “"To Fidel Castro and, through him, all the Cuban people." எனக் குறிப்பிட்டள்ளார்.

மரடோனா வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸின் ஆதரவாளராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், அவர் வெனிசுலாவுக்கு சென்று சாவேஸை சந்தித்தார், அவரை சாவேஸ் மிராஃப்ளோரஸ் அரண்மனையில்(Miraflores Palace) வரவேற்றார். இந்த சந்திப்பிற்குப் பின், ஒரு "பெரும் மனிதரை" (ஸ்பானிஷ் மொழியில் "அன் கிராண்டே" ("un grande" in Spanish), சந்திப்பதற்காக வெனிசுலாவிற்கு பயணித்ததாகவும், ஆனால் அதற்கு அப்பாலும் தான் எதிர்பார்த்ததை விடவும் “பிரம்மாண்டமான மனிதரை”(ஸ்பானிஷ் மொழியில் "அன் ஜிகாண்டே "un gigante") சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் "நான் சாவேஸை நம்புகிறேன், நான் ஒரு சாவிஸ்டா. பிடல் செய்யும் அனைத்தும், சாவேஸ் செய்யும் அனைத்தும், எனக்கு மிகப் பிடித்தமானவையே." எனக் கூறினார். 2007ல் வெனிகூலாவில் இடம்பெற்ற கோபா அமெரிக்க விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாள் ஆட்டத்தில், சாவேஸின் கௌரவ விருந்தினராக மராவோனா கௌரவிக்கப்பட்டார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்த மரடோனா ஏகாதிபத்திய அடையாளங்களுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். குறிப்பாக 2005 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் மார் டெல் பிளாட்டாவில் (2005 Summit of the Americas in Mar del Plata, Argentina.) இடம்பெற்ற அமெரிக்க உச்சி மாநாட்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கலந்துகொண்டதை எதிர்த்தார், "ஸ்ரொப் புஷ்" ("STOP BUSH") எனப் பெயரிடப்பட்ட ரீ- ஷேர்ட்டை அணிந்திருந்ததுடன் புஷ்ஷை "மனித குப்பை" ("human garbage) எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து2007 ஓகஸ்ட் இல், சாவேஸின் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியான அலோ பிரசிடேனில் தோன்றிய மரடோனா, "அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன், என் முழு பலத்தினாலும் அதை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார். இருப்பினும், 2008 டிசம்பர்ல், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமாவை மரடோனா பாராட்டியதுடன் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்.

தனது நகரத்தின் ஏழ்மையான மக்களின் குடிசை வாழ்வோடு இணைந்திருந்த மரடோனா அங்கிருந்து தனக்கான ஆளுமையையும் வளர்த்தார்.

1987 ஆம் ஆண்டில் வத்திக்கானில் போப் இரண்டாம் ஜோன் போல் உடனான சந்திப்பின் போது, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாடலில் போப்புடன் முரண்பட்டார். அது குறித்து மரடோனா கூறுகையில், " வத்திக்கானில் காணப்பட்ட தங்க கூரைகள் அனைத்தையும் பார்த்தேன், ஏழைக் குழந்தைகளின் நலனைப் பற்றி தேவாலயம் (Church) கவலைப்படுவதாக போப் கூறுகிறார். உங்கள் தங்கக் கூரைகளை விற்று ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என நான் வத்திக்கானில் போப்புடன் வாதிட்டேன்” எனக் கூறினார்.

செப்டம்பர்2014 இல், மரடோனா ரோமில் போப் பிரான்சிஸைச் சந்தித்தார், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரோமிற்கு பயணிப்பதற்கான தூண்டுதலை போப் பிரான்சிஸிஸ் ஏற்படுத்தியதாகக் கூறினார். அத்துடன் "நாம் அனைவரும் போப் பிரான்சிஸைப் பின்பற்றி . ஒவ்வொருவரும் மற்றயோருக்கு ஏதாவது கொடுப்பதன் மூலம், உலகில் யாரும் பட்டினி கிடக்காமல் பாதுகாத்திடமுடியும் எனக் கூறினார்.

டிசம்பர்2007 இல், மரடோனா ஈரான் மக்களுக்கு ஆதரவான செய்தியுடன் கையொப்பமிடப்பட்ட ரீ ஷேர்ட் ஒன்றை வழங்கினார்: இது ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2013 இல், மரடோனா ஹ்யூகோ சாவேஸின் கல்லறைக்குச் சென்று, வெனிசுலாவின் மறைந்த தலைவரின் நியமிக்கப்பட்ட வாரிசான நிக்கோலஸ் மதுரோவை சோசலிச தலைவரின் பாரம்பரியத்தைத் தொடரத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்"போராட்டத்தைத் தொடருங்கள்" என்று மரடோனா தொலைக்காட்சியில் கூறினார். கராகஸில் நடந்த மதுரோவின் இறுதி தேர்தல் பிரச்சார பேரணியில் மரடோனா கலந்து கொண்டார், கால்பந்துகளில் கையெழுத்திட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுத்தார், மேலும் மதுரோவின் உருவத்தை அர்ஜென்டினாவின் ஜெர்சியில் பதித்து வழங்கினார். மரடோனாவுடன் சாவேஸின் கல்லறைக்குச் சென்ற மதுரோ, "மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் டியாகோவுடன் பேசுவதாகவும், ஏனெனில் தளபதி சாவேஸும் அவரை மிகவும் நேசித்தார்." #ஞாபகங்கள்

மரடோனா உனது மக்கள் நேயமும், மனித நேயமும், உனது புரட்சியும், கால்பந்தில் உன் உச்சமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். #ஞாபகங்கள்

Nadarajah Kuruparan


No comments

Powered by Blogger.