November 20, 2020

கோடாரிக் கம்புகளே ஆபத்தனவை


ஒரு தனித்துவமான சமூகம் என்றும் அதன் மகத்துவம், கடப்பாடு, பொறுப்புணர்ச்சி என்பவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாத போது, அதன் பொது எதிரிகளால் அச்சமூகம் வீழ்த்தப்படும்; அல்லது பலகீனப்படுத்தப்படும். இதுவே, மனித வரலாறு நெடிகிலும் உள்ள பாடமாகும். 

அது எந்த சமயத்தை அல்லது மதத்தை கொண்டிருப்பினும் சரியே.

ஒரு நாடு அழகிய கட்டமைப்படனும் மக்கள் செல்வாக்குடனும் முன்னேறிக் கொண்டு போகின்றது; இதன் முன்னேற்றத்தை கசித்துக்கொள்ள இயலாத அயல் நாடு, இதன் வளாச்சியையும் முன்னேற்றங்களையும் தடுக்க வெளியில் இருந்து நேரடியாக எதுவிதமான தாக்குதல்களையோ யுத்தங்களையோ முதலில் செய்யத் துணிவதில்லை; அவ்வாறு முயற்சித்தால் அது படுதோல்வியில்தான் முடியும் என்பது அதற்குத் தெரியும். 

எனவே, அந்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க அதனுள்ளே இருந்து சிலரைப் பொறுக்கி எடுக்கும்; அவர்களுடன் மிகவும் மரியாதையாகவும் ஒத்தாசையாகவும் செயலாற்றும்; அவர்களது நாடி நரம்புகளை எல்லாம் பிடித்துப் பார்க்கும்; ஈற்றில் அவர்களது இரத்தோட்டம் சரியான திசையில் உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொண்டதும், அவர்களை கொடாரிக் கம்புகலாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும்.

 தனது இலக்கிலும் வெற்றியடையும். இது மனித வரலாறு.

இது போன்று ஒரு சமூகம் தலைநிமிர்ந்து வளர்ந்து வருகின்றது; இதனைக் கண்னுற்ற மற்றுமொரு சமூகம் இதன் வளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் தடுக்க அதே சமூகத்தில் உள்ள சுயநல நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பெயர்தாங்கிகளையும் எதிரியின் எதிரி நண்பன் என்ற கோட்பாட்டையும் பின்பற்றி அச்சமூகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும்; அல்லது பலகீனப்படுத்தும். இது சமூகவியல் வரலாறு.

ஒரு அமைப்பை எடுத்துக் கொண்டாலும் இதுவே நடைபெறும். அதாவது ஒரு சபை அல்லது சங்கம் சீரான நிர்வாகக் கட்டுக்கோப்புடன் வளர்ந்து அதன் இலக்கினை அடைந்து சமூக மட்டத்திலும் அதன் செல்வாக்கினை வளர்த்துக் கொண்டு, முன்னணியில் இருந்து பணியாற்றும்; ஆனால், அதன் இச்செல்வாக்கினையும் மக்கள் அங்கீகாரத்தினையும் ஏற்றுக் கொள்ளும் வெள்ளை உள்ளம் இல்லாத சில வியாதியஸ்தர்கள் இதற்கு எதிராகப் பயன்படுத்தப் படுவார்கள்; அவர்களோ, நாம் செய்வது சரியானதே என்று தம்மைச் சரிகண்டு கொள்வர்; இறுதியில் அவர்களே அதன் கொடாரிக் கம்புகளாக மாறிவிடுவர்.

ஒரு தனிமனிதன் அல்லது பொறுப்பில் உள்ள ஒருவருக்கும் நடப்பது இதுவேயாகும். ஓர் அதிபர் ஒரு பாடசாலையை சீராக, சிறப்பாக நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்; அவரது இச்சேவையில் மண் போட எத்தனிக்கும் அராஜகத்தார்கள் இவரது கல்விப் பணியினை ஏதோ ஒரு வகையில், எவரோ ஒரு அதிகாரியை பயன்படுத்தியாவது இவரைப் பணிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்து அநீதி செய்து விடுவர்.

அதே போன்றே, ஒரு நிறுவனத்தில் பொறுப்பில் அதே நிறுவனத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் வேகமாக அதனை வளர்த்தெடுப்பதை அல்லது அது வளர்ந்து வருவதை சகிக்கமுடியாத போது, அதன் எதிரிகள் பயன்படுத்த முனைவதும் கோடாரிக் கம்புகளையே என்பது தனிமனித வரலாறு. 

எதிரிகளுக்கு கோடாரிக் கம்புகளாக இருந்து கூர்மையாக மரத்தைத் தட்டியவர்கள் பலர் பின்னர் கைசேதப்படுவதும், கண்ணீர்வடிப்பதும் பல ஆயிரம் வருடங்களாக நடைபெறுகின்றன.

 புத்திசாலித்தனம், தனது இனத்தை வெட்டக் கோடாரிக் கம்பு பயன்படுத்தப்படுவதைப் போன்று, நான் அல்லது நாம் பயன்படுத்தப் படுகின்றோமா? என்பதை ஒரு கனம் சிந்தித்து செயலாற்றுவதே ஆகும்.

சமுகங்களையும் அவற்றின் வளர்ச்சிகளையும் அங்கீகரிக்கும் பக்குவத்தை இறைவன் தந்தருள்வானாக!

அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

1 கருத்துரைகள்:

Post a comment