November 22, 2020

எரிக்கப்படுவோம் என்ற பயத்தில், சிகிச்சை பெறாது உள்ளவர்களினால் பல மடங்கு ஆபத்து..!

- S.Hameeth -

எரிப்பதுதான் முடிவு என கொரோனா சம்பந்தமாக  நியமிக்கப்பட்ட சுகாதார குழுவினர் இன்று மீண்டும் அறிவித்துவிட்டனர். 

புதைப்பதனால், ஆபத்தில்லையென உலகம் முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகளும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களும் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறியும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி தாமே உலக விஞ்ஞானிகளுக்கெல்லாம் தலைவர்கள் என்பது போல இவர்கள் படம் காட்டுவதிலுள்ள அரசியல் என்னவென்பது மிகத் தெளிவாகவே புரிகிறது. ஒற்றைச் சொல்லில் கொஞ்சம் கடினமாகவே சொன்னால் - துவேஷம். வேறொன்றுமில்லை!

மரணத்துக்குப் பின்னர் மறுவுலக வாழ்வு உண்டென உறுதியாக நம்புபவர்கள் முஸ்லிம்கள். தாம் மரணித்த பின்னர் தமது இறுதிக் கிரியைகளும் இஸ்லாமிய சட்டங்கள் சொல்வதற்கேற்பவே இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் பெரும் விருப்பம். அந்த வகையில் எந்த ஒரு முஸ்லிமும் தான் இறந்த பின்னர் தன்னுடல் எரிக்கப்படாமல் அடக்கப்படுவதையே விரும்புகிறான். 

கொடூரமான ஒரு கொலைக் குற்றவாளியைத் தூக்கிலேற்ற முன்னம் ‘உன் இறுதி ஆசை என்ன?’ எனக் கேட்டு அதனை முடிந்தவரை நிறைவேற்றுவதுதான் மரபு. இன்று கொரோனாவால் மரணத்தைத் தழுவும் ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி விருப்பமாக இருப்பது வேறெதுவுமல்ல,தனது உடல் எரிக்கப்படாமல் அடக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த இறுதி ஆசை. 

இது நிறைவேறாது எனத் தெரியுமிடத்து ஒரு முஸ்லிம் கொரோனா நோயாளி சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதையே தவிர்த்துக் கொள்ள எண்ணக்கூடும். தான் வீட்டிலேயே இறந்தால் ஒருவேளை தான் கொரோனாவால் இறந்தது தெரியாமலேயே தனது உடல் அடக்கம் செய்யப்படக் கூடுமென்ற நப்பாசை இதற்குக் காரணமாகலாம். இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டு அவை அதிகமானால் முழு இலங்கையும் கொரோனாத் தொற்றினால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும். 

சிகிச்சைக்குப் போகாத நோயாளி கடைகளுக்கு, சந்தைகளுக்குப் போகலாம். அங்கே இருமலாம். பஸ்ஸில் பயணிக்கலாம். அங்கே தும்மலாம். வீதியில் நடக்கும் போது எச்சில் துப்பலாம். அரச மற்றும் தனியார் அலுவகங்களில் பேசலாம். இவ்விதம் இருமுவதால்,தும்முவதால்,துப்புவதால்,  பேசுவதால் கொரோனா மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கும். பரவும் கொரோனா சிங்களவர்,தமிழர்,இஸ்லாமியர் என்று பேதம் பார்ப்பதில்லை. எல்லோரையும் தொற்றும். இது உடல்களை அடக்காமல் எரிப்பதால் கிடைக்கும் நன்மையென இவர்கள் பொய்க்கணக்குப் போடுவதைவிட முழு நாட்டுக்கும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். 

இது ஒருபுறமிருக்க, புதைப்பதா, எரிப்பதா என்பதைத் தீர்மானிக்க நியமிக்கப்பட்ட சுகாதார குழுவுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் பிரதானமானது ‘கௌரவப்’ பிரச்சினை. புதைக்கக் கூடாது என்று இதுவரை சொல்லிவிட்டு இப்போது புதைக்கலாம் என்று சொன்னால் தங்கள் கௌரவம் பாதிக்கப்படுமென்று அவர்கள் எண்ணுகிறார்கள். மாத்திரமன்றி, சிங்கள இனவாதிகளின் தூற்றுதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாம் ஆளாக நேரிடலாமென்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். அத்தோடு, இக்குழுவினரில் ஒருவருக்கோ, சிலருக்கோ அரசியலில் குதிக்கும் ஆசை கூட இருக்கலாம். சிங்கள சமூகத்திடமிருந்து எளிதாக வாக்குகளைப் பெறுவதற்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதில் தாங்கள் பிடிவாதமாக இருந்தமை எதிர்காலத்தில் தமக்கு உதவுமென அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம். 

இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் ஒரு பயம் இருக்கிறது. அடக்க அனுமதித்தால் சிங்கள கடும்போக்குவாதிகளிடமிருந்து கடும் கோபத்தைச் சம்பாதிக்க நேரிடுமென்ற பயமது. இருபதாம் திருத்தத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கான கைமாறுதான் இது என்று சிங்கள இனவாதிகள் விமர்சிப்பார்களே என்ற பயமும் சேர்ந்ததுதான் அது. 

சரி...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்...? எமது அரசியல் பிரமுகர்களும் தலைமைகளும் என்ன செய்யப் போகிறார்கள்...? அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நமது சகோதரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்...?

ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்!

5 கருத்துரைகள்:

Ivarhal anaivarukkum allahvin thandanai undu nitchayamaha insha allah

அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.பலஹீனமான நிலையில் உள்ள எமக்கு உள்ள ஒரே வழி துஆ மாத்திரமே.நபிமார்கள் ஸஹாபாக்கள் வாழ்க்கையில் இதற்கான ஆதாரம் உள்ளது.அநீதி இழைக்கப்பட்டவர்களின் துஆ அல்லாஹ்விடம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.ஜம்மியதுல் உலமா இதற்கான வழியைக் காட்ட வேண்டும்.

கடைசிப் பந்தியில் குறிப்பிட்ட "அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நமது சகோதரர்கள்என்ன செய்யப் போகிறார்கள்" என்ற வினாவிற்கு மிகவும் திருப்தியான பதிலை என்னாலும் தர முடியும். ஆனால் அந்த ஆறு பேரிடமும் கேட்டு யாராவது எழுதினால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

அல்லாஹ் கஸ்டங்களின் போதும் அனியானங்களின் போது பக்குவமாக நடந்துகொள்ளவேண்டிய வழிகாட்டல்களை வரலாற்றில் பதிந்துள்ளது அவைகளை ஆய்வு செய்து சமயோசிதமாக நடந்து கொள்வதே இப்போதைக்கு சிறந்ததாகும்

Post a comment