Header Ads



இலங்கை மக்கள் சமைக்கும் முறையில் எந்த வைரஸும் இருக்க முடியாது, தாராளமாக மீன் சாப்பிடலாம் - வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க


(எம்.ஆர்.எம்.வஸீம்)

மீன் சாப்பிடுவதற்கு வீணாக அச்சப்படத் தேவையில்லை. பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொராேனா தொற்று மீனில் இருந்து ஏற்பட்டது அல்ல. மீன் வியாபாரியிடமிருந்தே ஏற்பட்டிருக்கவேண்டும் என தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.

 மீன் சாப்பிடுவதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொர்ந்து தெரிவிக்கையில்,

பேலியகொடை மொத்த மீன் விற்பனை சந்தையில் கொராேனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மீன் சாப்பிடுவதற்கு வீணான பயத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

மீன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதனால் தற்போதைய நிலையில் எமது ஆகாரத்தில் மீனை சேர்த்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.

அத்துடன் இலங்கை மக்கள் மீன் சமைக்கும் முறையின் பிரகாரம்  அதனுள் எந்தவொரு வைரஸும் இருக்க முடியாது.  அதிகூடிய வெப்பத்தில் மீன் சமைப்பதன் மூலம் அதனுள் இருக்கும் பாதகமானவைகள் அழிவடைந்து செல்கின்றன. மீன் சமைத்த பின்னர் சவர்க்காரமிட்டு கைகள் மற்றும் அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களை கழுவிக்கொள்வது அவசியமாகும்.

மேலும் பேலியகொடை மொத்த மீன் சந்தைக்கு கொராேனா தொற்று பரவியது மீன்கள் ஊடாக அல்ல. மாறாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் மூலமாகவே பரவியிருக்கும் என நம்புகின்றோம்.

அதனால் மக்கள் வீணாக அச்சப்பட்டு மீன் சாப்பிடுவதை நிறுத்தவேண்டாம். மீன் வகைகளிலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கின்றது. அதனால் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள மீன் பிரதான உணவாகும் என்றார்.

No comments

Powered by Blogger.