Header Ads



முஸ்லிம் உடல்கள் எரிப்பில் மத நம்பிக்கையை புண்படுத்துவதை தவிர, வேறு எந்த நன்மையும் இலங்கைக்கு இல்லை


கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல்  எரியூட்டி வரும் இலங்கை அரசை தமிழக முஸ்லிம்கள் சார்பில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கண்டிப்பதுடன், முஸ்லிம்களின் உடல்களை எரிக்காமல் அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.  

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது முதல் கொரோனாவில் உயிரிழப்பவர்களின் உடல்களை உலக நாடுகள் அடக்கம் செய்து வருகின்றன. உலக சுகாதார மையம் – WHO கொரோனாவில் மரணிப்போரை அடக்கமும் செய்யலாம், எரிக்கவும் செய்யலாம் என மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. அடக்கம் செய்வதால் நோய்த்தொற்று பரவும் என்று மருத்துவ உலகும் சொல்லவில்லை

இந்நிலையில் இலங்கையில் மட்டும் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

கொரோனாவில் மரணிப்போரின் உடல்களை எரிக்காது அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இலங்கை முஸ்லிம்கள் தொடர் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னால் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இனவாதம் பாராது கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மதக் கட்டளைப் படி அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார் 

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இலங்கையில் செயல்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ அமைப்பு பல தரப்பட்ட கோரிக்கைகளையும் அரசுக்கு முன்வைத்து வருகின்றது. ஜனாதிபதிக்கு பகிரங்கக் கடிதம் மூலம் கோரிக்கையும் விடுத்துள்ளது. 

இதுவரை இலங்கையில் பத்து முஸ்லிம்கள்  கொரோனாவில் மரணித்துள்ளனர்.  இந்தப் பத்து முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் எரியூட்டப்பட்டன. 

இலங்கை முஸ்லிம்கள் மட்டுமின்றி உலக முஸ்லிம்களுக்கும் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை முன்னெடுத்துச் செல்லும் இந்தியாவின் பாஜக ஆட்சியில் கூட முஸ்லிம்கள் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு மட்டும் அடக்கம் செய்ய மறுப்பதன் மூலம் முஸ்லிம்களை இரண்டாம் தர மக்களாக இலங்கை அரசு கருதுவதாக முஸ்லிம்கள் எண்ணுகிறார்கள்.

முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவது தவிர வேறு எந்த நன்மையும் நாட்டுக்கு இல்லை என்பதால் இலங்கை அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய வழிகாட்டல் படி சர்வதேச மற்றும் இலங்கை சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு இலங்கை அரசை வலியுறுத்துகின்றது.


இப்படிக்கு,

பீ.ஜைனுல் ஆபிதீன் 

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர்

No comments

Powered by Blogger.