Header Ads



ஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..?)


-அஸ்லம் எஸ்.மௌலானா-

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் இன்று வியாழக்கிழமை (26) உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ, வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ட்டபோது, கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் எரிக்கப்பட வேண்டும் என்று கோரி இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன, தனிமைப்படுத்தலில் இருப்பதனால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, அவர் சார்பில் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்தே இவ்வழக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதன்கிழமையன்று (25) மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட விசேட நகர்த்தல் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை விசேடமாக முன்னெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானத்ததற்கமைவாக இன்று இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா, விரான் கொரயா மற்றும் என்.எம்.சஹீட் போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு, எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி பல தரப்பினராலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பல மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதியும் ஜூலை மாதம் 13ஆம் திகதியும் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தன. எனினும் இதுவரை தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற விவகாரத்தினால் முஸ்லிம்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள சூழ்நிலையில், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்ற நிலையில், இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற விசாரணைகளின்போது, சுகாதார அமைச்சின் இணக்கப்பாட்டுடன் சட்டமா அதிபர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காவிடின் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.