Header Ads



முஸ்லிம்களின் மீது இனவெறியோடு செயற்படும் நிபுணர்கள் - ஹக்கீம்


“உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை முற்றாகப் புறக்கணித்தும் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கோவிட் - 19 தொற்றை காரணம் காட்டி பலவந்தமாக எரிப்பதை அரசாங்கம் நிறுத்தியாக வேண்டும்”.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். 

வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு புதன்கிழமை (25) மாலை உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இ அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றும் போது, ஐக்கிய நாடுகள் சாசனம் பற்றிக் குறிப்பிட்டார். 

ஐ.நா. சாசனம் உறுப்பு நாடுகளின் இறைமையின் சமத்துவம் பற்றி பேசுகின்றது. அவ்வாறே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் பற்றியும் கூறுகின்றது. அது இறைமையுள்ள நாடுகளினால் மனிதனுக்கு உரித்தான கண்ணியம் உரிய முறையில் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகம் வலியுறுத்துகின்றது. 

இறைமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறாமல், அது மக்களில் இயல்பாகவே இருந்து வருகின்றது எனப்படுகின்றது. ஆகையால், தனிப்பட்ட மனிதனின் கண்ணியத்தை அது நிலைநாட்டுகின்றது. இறைமை, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கதிகாரம், நீதித்துறை அதிகாரம் என்பவற்றுடன் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்குகின்றது. இதைத் தான் எங்களது அரசியலமைப்பு கூறுகின்றது. 

அடிப்படை உரிமைகள் பற்றி பேசும் போது நான் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு பின்னோக்கிச் செல்கின்றேன். அதன் போது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச கூட்டு ஒப்பந்தம் (ஐஊஊPசு) தனி மனித கண்ணியத்தை சிறப்பாக விபரித்துக் கூறுகின்றது. 

இச் சந்தர்ப்பத்தில், தற்போதைய அரசியலுக்கு பொருந்தும் ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் 2012ஆம் ஆண்டு பிரசுரமான ஒரு கற்பனை உரையாடலைச் சுட்டிக் காட்டுகின்றேன். அது காலி நகரில் நடைபெற்ற கடல் சார் பாதுகாப்பு மாநாடொன்று பற்றியதாகும். நீதியமைச்சராக அதில் பங்கேற்றியிருந்த எனது அருகில் அமர்ந்திருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் கடல் சார் அமைச்சரைப் பார்த்து நான் “உங்கள் நாட்டில் கடல் இல்லையே, ஏன் நீங்கள் அதற்கு அமைச்சர்? எனக் கேட்டதற்கு, அவர் “உங்களது நாட்டில் நீதி இல்லையே. எப்படி நீங்கள் நீதியமைச்சராக இருக்கின்றீர்கள்” எனப் பதிலளித்ததாகக் கிண்டலாக எழுதப்பட்டிருந்தது. அதுதான் நாட்டின் இன்றைய நிலைமையும் கூட. 

நானும் ஜெனீவாவுக்குப் போயிருக்கின்றேன். அப்போது இந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்த போது அவர்கள் சார்பில் அங்கு சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போயிருந்தேன். அப்போழுது நீதியமைச்சர் என்ற முறையில் எனது கடமையை செய்வதற்காக அங்கு சென்றதை இன்றும் கூட நண்பர் சுமந்திரன் போன்றோர் விமர்சிக்கத்தான் செய்கின்றனர். 

உயிர் வாழ்வோரின் கண்ணியம் பற்றிப் பேசுகின்ற வேளையில், இப்பொழுது இறந்து விட்டவர்களின் கண்ணியம் பற்றித்தான்  பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு, இஸ்லாமிய நாடுகள் அமைப்பை பிரதிநிதிதுவப்படுத்தும் இங்குள்ள பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இறந்தவர்களை எரிக்க மட்டுமே முடியும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்ட கடிதத்திற்கு எதுவும் நடக்கவில்லையென்றும், சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியின் வேண்டுகோளுக்கும் பயனில்லை என்றும் கூற நேர்ந்தது. ஆதாரங்களின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் தகனம் செய்வதற்கும், நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதியளித்திருக்கத்தக்கதாக, எரிக்க மட்டுமே முடியும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் இந்நாட்டில் வாழும் மக்களில் ஒரு சாராரின் மன உணர்வுகளை வெகுவாக பாதித்திருக்கின்றது, அடிப்படை உரிமையை புறக்கணித்திருக்கின்றது. நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்திருக்கின்றது. 

ஆகையால், ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்தவிதமான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுமின்றி வெளியிடப்பட்ட சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறியிருக்கத்தக்க, சுகாதார அமைச்சின் கீழ்வரும் சட்டமருத்துவ “நிபுணர்” ஒருவர் கோவிட் - 19 தொற்றினால் மரணித்தவரின் சடலத்தை உயிரியல் ஆயுதமாகப் பாவிக்கலாம் என உளறியிருக்கிறார். அப்படிச் செய்வதற்கு குறைந்தபட்சம் உயிரியல் இரசாயனக் கூடம் தரம் - 3ஆவது அவசியப்படும். அவ்வாறான தரத்திலான இரசாயனக் கூடங்கள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே உள்ளன. அவை கோவிட் -19 ஆல் இறப்பவர்களை உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கு இந்நாட்டு முஸ்லிம்களின் கைகளுக்குச் செல்வது எவ்வாறு சாத்தியமாகும்? 

இவ்வாறுதான் குறைந்த பட்சம் ஒரு கண்ணியமான நல்லடக்கத்தை சட்டப்பூர்வமாக வேண்டி நிற்கும் அப்பாவி மக்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் இனவெறியோடு செயற்படும் நிபுணர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். 

இப்படித்தான் அரசாங்கம் இந்நாட்டு முஸ்லிம்களை கையாள்கின்றது. சர்வதேச மன்னிப்பு சபை, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மற்றும் சர்வதேச உள்நாட்டு அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள்கள் விடுத்துள்ள போதிலும் இந்த நியாயமான வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

நேற்று உலக சுகாதார நிறுவனம் நீச்சல் தடாகத்தில் நீந்துகின்ற கோவிட் - 19 நோயாளிகளின் உடலிலிருந்து நீரினூடாக வைரஸ் பரவுவதில்லை என சுற்றறிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அத்துடன், ஐசீசீபிஆர் சட்டத்தின் படி, வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடுபவர்களை தண்டிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அம்சத்தை காரணம் காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறுதான் சமூக ஊடகத்தில் பதிவையிட்ட ரம்ஸி ராஸிக் என்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்தார் என்பதை ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி விஜேசூரிய இன்று காலை இங்கு சுட்டிக் காட்டினார். 

அவ்வாறு தான் அந்தச் சட்டத்தின் கீழ் முற்போக்கான இளம் சிங்கள சிறுகதை எழுத்தாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்திருக்கின்றார் என்றார். 

அத்துடன், இந்தியத் உயர்ஸ்தானிகராக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது உரையின் இறுதியில் சிலாபித்துக் கூறினார். 

1 comment:

  1. சிறந்ததோர் உரை.தொடர்ந்தும் அரசாங்கத்தை வற்புறுத்துங்கள்

    ReplyDelete

Powered by Blogger.