November 13, 2020

இறந்த உடலில் 27 நாட்களின் பின், கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொய்


-எஸ். ஹமீத்-

கொரோனா வைரஸ் நிலத்தடி நீரினால் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லையென உலக சுகாதார நிறுவனமான WHO திட்டவட்டமாக அறிவித்துள்ளது. There  is no evidence from surrogate human coronaviruses that they are present in surface or groundwater sources or transmitted through contaminated drinking water.

Ref: 

https://apps.who.int/iris/bitstream/handle/10665/331499/WHO-2019-nCoV-IPC_WASH-2020.2 eng.pdf#:~:text=Although%20persistence%20in%20drinking%2D,and%20hepatitis%20A).

ஆனாலும் தேவையற்ற பயத்தில் ஊறிய கற்பனைகளையும் இனவாத சிந்தனைகளுக்குள்ளிருந்து உதிக்கின்ற  ஊகங்களையும் கட்டுரைகளாகவும் ஊடக அறிக்கைகளாகவும் இலங்கையில்   அவிழ்த்துவிடுகின்ற சிலர் உலக விஞ்ஞானிகளை விடவும் எந்தளவுக்கு விஞ்ஞானத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லாமலிருப்பது நகைப்புக்கும் பரிதாபத்திற்கும் உரியதாகும். 

ஒரு கொரோனா நோயாளியின் மலம், சிறுநீர் போன்றவற்றில் கொரோனா வைரஸ் இருப்பது   ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவினால் இறந்த ஒருவரை மண்ணுக்குள் புதைப்பதனால் நிலத்தடி நீரினூடாக வைரஸ் பரவி கிணறு,குளம், ஆறு என்பவற்றுக்குள் தாவிவிடுமென்று உலக விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடமொன்றைக் கற்பிக்க முயற்சிக்கின்ற நம்நாட்டு சுகாதார, மருத்துவத்துறை விற்பன்னர்கள்  இலங்கையில் மலமும் சலமும் நிலத்துக்குள் செல்கிறது என்பதைப் பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்கள்? இலங்கையில் 99.9%  மலகூடங்கள் குழிகளைக் கொண்டதுதானே? அதிலும், அதிகளவான மலகூடக் குழிகளுக்கும் கிணறுகளுக்கும் ஓர் இருபது அடி தூரம் கூடக் கிடையாதே! இதனைப் பற்றி நமது மேதாவிகள் ஏன் கருத்துக் கூற மறுக்கிறார்கள்? இறந்த   கொரோனா நோயாளியை அடக்கம் செய்ய முடியாதென்றால் கொரோனா நோயாளி மலசலம் கழிப்பதையுமல்லவா தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வார்களா? செய்யத்தான் முடியுமா? 

அவுஸ்திரேலியாவில் இறந்த உடலில் 27 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம். என்னே ஒரு அபத்தமான விளக்கம் இது. புதைக்கப்பட்ட உடலைத் தோண்டியெடுத்து அதில் வைரஸ் இருந்திருந்தால் இக்கூற்றை நியாயப்படுத்த முடியும். ஆனால் புதைக்கப்படாமல் பிண அறையில் பாதுகாக்கப்பட்ட  உடலின் நுரையீரலில்தானே அந்த வைரஸ் காணப்பட்டது. அதுவும் இது நடந்தது அவுஸ்திரேலியாவில் அல்ல. பிரித்தானியாவில்.    Coronavirus can be found in dead human tissue after almost a month, scientists have found. After performing an autopsy on a COVID-19 victim 27 days after death, researchers in the U.K. found SARS-CoV-2 present in the lungs, despite a nasal and throat swab taken after death testing negative for the virus.  (Ref: 

https://www.newsweek.com/covid-virus-lungs-dead-body-month-1543968 )

  அப்படியிருந்தும் அவுஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவும் கூட கொரோனாவினால் இறந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதியளித்துள்ளனவே. சரி... கொரோனாவினால் இறக்கும் உடல்களை எரித்துத்தானாக வேண்டுமென்று சட்டம் போட்டிருக்கும் ஒரு நாட்டின் பெயரையாவது இந்த மேதாவிகள் கூறுவார்களா?

கொரோனா வைரஸ் ஏனைய பல வைரஸ்களைப் போன்றல்லாது உறை கொண்ட - Enveloped -வைரஸ் ஆகும். இந்த உறையானது உடைந்துவிடக்கூடிய சவ்வினாலானது. இந்த உறை உடையும் போதே வைரஸும் இறந்துவிடும். அதனால்தான் சோப் போட்டு, கை கழுவுகிறோம். சோப்பானது உறையை உடைத்து வைரஸைக் கொல்கிறது. அந்த வகையில் கொரோனாவினால் இறக்கும் உடல்களைத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீர்மக்கசிவேற்படாத பிளாஸ்டிக் உறைக்குள்ளிட்டு, உள்ளே ப்ளீச்சிங் அல்லது குளோரினோ, புரோமினோ இட்டு மூடி அடக்கம் செய்தால் இறந்த உடலிலிருந்து வெளியாகும்  வைரஸ் மண்ணையடையும் முன்னரே,பிளாஸ்டிக் உறைக்குள்ளேயே சில நாட்களுக்குள் இறந்துவிடுமே. இந்த முறைதானே தற்போது உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. அப்படியிருக்கையில் நமது நாட்டில் மட்டும் ‘நவீன விஞ்ஞானம்’ ஏன்? வேறொன்றுமில்லை. இறந்த உடல்களை எரித்து உயிரோடிருப்போரின் இதயங்களை வேதனைப்படுத்த வேண்டுமென்ற இனவாத சிந்தனை. அவ்வளவுதான். 

சரி... இந்த நேரத்தில் ஒரு சமுகமாக நாம் என்ன செய்யலாம். அல்லாஹ்விடம் பொறுப்பைச் சாட்டிவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் பாதுகாப்பை மட்டுமல்லாது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களின் பாதுகாப்பிலும் பன்மடங்கு கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி சோப் போட்டு இருபது செக்கன்கள் கைகளைக் கழுவுவதும் மாஸ்க் அணிந்தே வெளியில் போவதும் எந்த ஒருவரோடும் இரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணுவதும் கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இறந்தால் எரிக்கப்படுவோமென்பதற்காகவாவது நாம் சமூக அக்கறையுடன் செயற்பட்டேயாக வேண்டும். 

கூட்டமாக நின்று வெட்டிக் கதைகள் பேசுவதை விட்டுவிடுவோம். கூடி விளையாடும் விளையாட்டுகளைத் தற்சமயம் தவிர்ப்போம். அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்போம். இரவும் பகலும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நமது பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் மன நிம்மதிக்காகவும் அழுது மன்றாடுவோம். 

அந்த றப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவன். நிச்சயம் அவன் நமக்கு உதவி செய்வான்!

0 கருத்துரைகள்:

Post a comment