Header Ads



முஸ்லிம் என்பதாலே ரிஷாத் மீது நெருக்குவாரங்கள் - நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவிப்பு

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது. 

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்று இந்த பிணை வழங்கப்பட்டது. 

அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டது. அதன்படி அவரது கடவுச் சீட்டை அடுத்த வழக்குத் தவணையில் மன்றில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்தல் அனுப்பியது. 

அத்துடன்  சி.ஐ.டி. விசாரணைகளுக்கு அழைக்கும் போது கண்டிப்பாக அந்த விசாரணைகளுக்கு செல்ல வேண்டும் எனவும்  நிபந்தனை விதித்தது. அதன்படியே, சுமார் 38 நாட்களின் பின்னர் ரிஷாத் பதியுதீனுக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின்  கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ரிஷாத் பதியுதீன் சார்பில் ஏற்கனவே இரு முறை பிணை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை நிராகரிக்கப்பட்டிருந்தன. 

இந் நிலையிலேயே நேற்றைய தினம், ரிஷாத் பதியுதீன் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி  கெளரி தவராசாவின்  ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளான  கே.வி.தவராசா, அனுஜ பிரேமரத்ன,  ராசிக் சரூக், சட்டத்தரணி ஆர்னல்ட் பிரியந்தன் உள்ளிட்டோருடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மூன்றாவது தவடவையாக விஷேட பிணைக் கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதனை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் ரிஷாத் பதியுதீனுக்கு பிணையளித்தது.

 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு பிணைக் கோருவதற்காக  கடந்த 18 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இன்று  (25) ஆஜராகி வாதாங்களை முன்வைக்க சட்ட மா அதிபர் தரப்புக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், குறித்த நகர்த்தல் பத்திரத்துக்கு தனது எதிர்ப்பை முன்வைத்ததுடன், அது தொடர்பில் தமக்கு எழுத்து மூலம் சட்ட ரீதியிலான விடயங்களை விளக்க சந்தர்ப்பம் வேண்டும் என்றார்.

இந் நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான  கே.வி.தவராசா, அனுஜ பிரேமரத்ன,  ராசிக் சரூக்,  உள்ளிட்டோருடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா  குறித்த நகர்த்தல் பத்திர விடயங்களை புறந்தள்ளி, தான் புதிதாக பிணைக் கோரிக்கை செய்யப் போவதாகவும், அவ்வாறு பிணை கோர எவ்வித  தடைகளும் இல்லை என்பதையும் இதன்போது மன்றில் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் ஏற்கனவே இரு முறை ரிஷாத்தின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீள நகர்த்தல் பத்திரம் ஊடாக அதே விடயங்களை வைத்து பிணைக் கோர முடியாது என பிணைக் கோரிக்கைக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் எதிர்ப்பு வெளியிட்டார்.

 எவ்வாறாயினும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா,  சாதாரண வழக்கொன்றில் ஒரு முறை பிணை நிராகரிக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் உருவாகும் நிலைமைகளுக்கு அமைய பிணை கோர எந்த தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், இந்த மன்றின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக இருப்பின் மட்டுமே மேல் நீதிமன்றை நாட வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். அதனால் தவறான நடை முறைகள் இந்த பிணைக் கோரிக்கையின் போது முன்வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், புதிதாக பிணைக் கோரிக்கையை முன்வைக்க அனுமதி கோரினார்.

 இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே அதற்கு அனுமதியளித்தார். அதன்படி புதிதாக பிணை கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வாதங்களை முன்வைத்தார்.

ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்று பரவிவருவதை மையப்படுத்தி அவரது பிணைக் கோரிக்கை அமைந்திருந்தது.  உலக நாடுகள் பலவும் கொவிட் 19 தொற்றினை விஷேட காரணியாக கருதி, நீதிமன்ற  நடவடிக்கைகளின் போது பிணை வழங்கியுள்ளமையை ஜனாதிபதி சட்டத்தரணி தனது வாதத்தின் போது ஆவணங்களுடன் மன்றுக்கு விளக்கினார்.

 அவுஸ்திரேலியவின் விக்டோரியா மற்றும்  நியூ சவூத் வேல்ஸ் பிராந்திய உயர் நீதிமன்றங்கள்,  கனடாவின் ஒன்டரியோ உயர் நீதிமன்றின் இரு வழக்குத் தீர்ப்புகள், இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை மையபப்டுத்தி   கொரோனா நிலைமையை விஷேட காரணியென  ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நிறுவினார்.

 இதனைவிட கம்பஹா நீதிவான் நீதிமன்றில் 302 மில்லியன் அரச பணத்தை தவறாக பயன்படுத்திய விவகாரத்திலும் (கம்பஹா நீதிமன்ரம் ),  ரிஷாத் தொடர்புபட்ட வழக்கின் 2 ஆவது சந்தேக நபருக்கு கொடுக்கப்பட்ட பிணையின் போதும் (எவ்வாறாயினும் அவருக்கு கொரோனா உறுதியானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்)  கொரோனா நிலைமை விசேட காரணியாக ஏற்கப்பட்டதை ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தொட்டுக் காட்டினார்.

இதனைவிட ரிஷாத் பதியுதீன் நோய் நிலைமைகளையும் அவர் 2004 முதல் 2020 வரை சிகிச்சைப் பெற்ற விபரங்களையும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மன்றில் முன்வைத்தார்.

 இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த வைத்திய அறிக்கைகள் முன்வைக்கப்படுவதற்கும் அதனை மையப்படுத்திய  பிணை கோரிக்கைக்கும் எதிர்ப்பு வெளியிட்டார். இதன்போது கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் என்பதாலேயே அவர் இவ்வாரு நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்படுவதாக திறந்த மன்றில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அவரின் நோய் நிலைமை தொடர்பிலான அறிக்கைகளை நீதவானின் ஆலோசனைக்கு அமைய மீளப் பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா,  கொவிட் நிலைமையை விஷேட காரணியாக ஏற்று பிணைக் கோரினார்.

இதனையடுத்து அப்பிணைக் கோரிக்கைக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் எதிர்ப்பு வெளியிட்டார். சி.ஐ.டி. பனிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸா,  உதவி பொலிஸ் அத்தியட்சர் அஜந்த, விசாரணை அதிகாரி காமினி ஆகியோருடன் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,  33 பாரிய மோசடிகள், கல்லாறு காட்டினை அழைத்து அது தொடர்பில் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு பிணையைப் பெற இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக கூறினார். 

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், 33 பாரிய மோசடிகள் என்பதை திருத்தி பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அடையாளப் படுத்தினார். 

அத்துடன் 1800 பேர் வரை உள்ள மெகசின் சிறைச்சாலையில் 13 பேருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டில் நால்வரே உள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் திலீப பீரிஸ் வாதிட்டார்.

 அத்துடன் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய முயன்ற போது அவர் பல நாட்கள் மறைந்திருந்தையும் ஞாபகப்படுத்திய அவர்,  பிணைப் பெறுவதர்காக ரிஷாத் பதியுதீன் திட்டமிட்ட வகையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அதனால் அவருக்கு பிணையளிக்க கூடாது என அவர் வாதிட்டார்.

 எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே,  ரிஷாத் சார்பில் முன்வைக்கப்பட்ட கொவிட் நிலைமையை விஷேட காரணியாக ஏற்பதாக அறிவித்தார். 

அத்துடன் ரிஷாத்தை கைது செய்ய பலநாட்கள் தேடிய போது அவர் மறைந்திருந்தார் என்பதற்காக, தொடர்ச்சியாக அவரை, தண்டிக்கும் வண்ணம் விளக்கமறியலில் வைப்பது நியாயமானதாக அமையாது என சுட்டிக்காட்டிய நீதிவான், மெகசின் சிறையில் கொவிட் பரவுவதை சந்தேக நபர் தரப்பும் முறைப்பாட்டாளர் தரப்பும்  ஏற்பதை சுட்டிக்காட்டி பிணையளிப்பதாக அறிவித்தார். 

அதன்படி  இந்த விவகாரத்தில் பிணையளிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 2021 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 3 ஆம் சந்தேக நபரான கணக்காளர் மனோ ரஞ்சன் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.

2 comments:

  1. கொலை குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட கடூழிய சிறைக்கைதிகள் சாதாரணமாக உள்ளே வெளியே என்று வந்து செல்லும்போது, அரசாங்கம் பொது மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதியை செய்து கொடுத்த (அதுவும் அரச செலவுலயே) ஒருவருக்கு இவ்வளவு கெடுபிடி என்றால் இவர் முஸ்லீம் என்பது தான் காரணம் என்பதை விளங்க அடிப்படை அறிவே போதும் .

    ReplyDelete
  2. மக்கள் வசிக்கும் இடங்களில் தான் வாக்குகள் போடவேண்டும். புத்தளத்திலுருந்து கூட்டுச்சென்றது சட்டப்படி குற்றம். காடுகள் அழிப்பதும் குற்றம்

    ReplyDelete

Powered by Blogger.