Header Ads



இலவசமாக கிடைத்த கூகுள் பலூன் திட்டத்தை, அரசியல் வைராக்கியத்தினால் மைத்திரி இல்லாமலாக்கினார்: ஹரீன்


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கூகுல் பலூன் தொழிநுட்பத்தை அன்று ஆரம்பித்திருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள தனிமைப்படுத்தல் காலத்தில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். இவ்வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்வதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே இல்லாமலாக்கினார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -23- இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் நவீன டிஜிட்டல் தொழிநுட்பத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அன்று அமைச்சரவையில் இருந்த இளம் அமைச்சர் என்றவகையில் எனக்கு டிஜிட்டல் அமைச்சு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக முன் அனுபவம் இல்லாவிட்டாலும் அதனை கிராமத்துக்கு கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கையை மேற்கொண்டேன். குறிப்பாக கூகுல் பலூன் வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானதொன்றாகும். எமது நாட்டுக்கு அது இலவசமாக கிடைக்கப்பெற்றதொன்றாகும். என்றாலும் அரசியல் வைராக்கியத்தினால் அதனை மேற்கொள்ள முடியாமல்போனது.

என்றாலும் தற்போது தகவல் தொடர்பாடல் பிரிவு ஜனாதிபதிக்கு கீழ் இருக்கின்றதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். வரவு செலவு திட்டத்தில் 4ஜீ தொழிநுட்பத்தை ஏற்படுத்துவதற்கு 15பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் அன்று நாங்கள் ஆரம்பித்த கூகுல் பலூனை செயற்படுதியிருந்தால், நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் 4ஜீ தொழிநுட்பத்தை இலவசமாக வழங்கி இருக்க முடிந்திருக்கும். இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை செயற்படுத்த இடமளிக்காமல் இல்லாமலாக்கிவிட்டார்.

எமக்கு இலவசமாக கிடைத்த இந்த வேலைத்திட்டத்தை  நாங்கள் கைவிட்டதால், இன்று அது கென்னியாவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நாடு பூராகவும் இன்று 4ஜீ தொழிநுட்பம் இருக்கின்றது. எமது நாட்டில் அதனை செயற்படுத்தியிருந்தால், தற்போதைய தனிமைப்படுத்தல் காலத்தில் சூம் தொழிநுட்பத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். மாணவர்கள் வீடுகளில் இருந்தே இணைய வசதியுடன் கல்வியை தொடர்ந்திருக்கலாம். இந்த வருடத்தில் 60 நாட்களே பாடசாலை இடம்பெற்றிருக்கின்றது. 

அதேபோன்று நவீன தொழிநுட்ப வகுப்பறைகளை நாங்கள் ஏற்படுத்தினோம். கொழும்பில் பிரபல பாடசாலையில் இல்லாத தொழிநுட்ப வசதியை பதுளையில் இருக்கும் பாடசாலையில்  அறுமுகப்படுத்தி, டெப் வசதிகளை மாணவர்களுக்கு வழங்கினோம். இவை அனைத்தும் அரசியல் வைராக்கியத்தினால் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் வரையான அனைத்து மாவட்ட செயலகங்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்து செயற்படுத்துவதற்கு முடியுமான தொழிநுட்ப வசதியை நாங்கள் ஏற்படுத்தினோம். இதனை முன்கொண்டு சென்றிருந்தால் அதிகாரிகளை கொழும்பு அழைத்து கலந்துரையாடவேண்டிய தேவை இருந்திருக்காது. செலவுகள் குறைந்திருக்கும்.

எனவே அன்று நான் டிஜிட்டல் அமைச்சராக இருந்தபோது ஏனைய அமைச்சுக்களில் இருந்து எனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இந்த அமைச்சு ஜனாதிபதிக்கு கீழ் இருக்கின்றது. ஜனாதிபதிக்கும் இதுதொடர்பான நல்ல அனுபவம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதனால் நவீன டிஜிட்டல் தொழிநுட்பத்தை நாடுபூராகவும் ஏற்படுத்த விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

1 comment:

  1. அந்த மனுஷன் ஜனாதிபதியாக இருந்து எதைத்தான் சரியாக செய்தார். நாட்டிடை குட்டி சுவரக்கிப்போட்டு போனதே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை. அந்த காலம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.

    ReplyDelete

Powered by Blogger.