Header Ads



கொரோனாவை தடுக்க, களத்தில் குதித்துள்ள வியாழேந்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைத்து மாவட்டத்திற்குள் உள்நுழைபவர்கள், வெளி செல்பவர்கள் தொடர்பான விபரங்கள் பதிவது, கொரோனா தொற்று இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள சலூன்கள் முடிவெட்டுவதற்கு மாத்திரம் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி வழங்குதல் போன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்ததையடுத்து மாவட்ட கொரோனா செயலணி அவசரமாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு கூடியிருந்தது.

இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த 35 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியதாக கண்டறியப்பட்டதை அடுத்து, வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, கிரான் போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 1697 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வந்த 21 பேரும், கொழும்பில் இருந்து 689 பேரும், கம்பஹாவில் இருந்து 46 பேரும், களுத்துறையில் இருந்து 8 பேரும், அம்பாறையில் இருந்து 16 பேரும், திருகோணமலையில் இருந்து 56 பேருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய மாவட்டத்திற்குள் உள் நுழையும் எல்லைப்பகுதியான ரிதென்னை, வெருகல், நீலாவணை, புல்லுமலை, வெல்லாவெளி போன்ற பிரதான வீதிகளில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைத்து மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்துக்கு செல்பவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து உள் நுழைபவர்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்வது, கொரோனா தொற்று இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகளில் முடி மட்டும் வெட்ட சலூன்கள் திறக்க அனுமதிப்பதுடன், சலூன்களுக்கு வருபவர்கள் தொடர்பாக விபரங்கள் பதிவு செய்து சுகாதார அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படுமாறும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து பேருந்து தனியார் பேருந்துக்கள் தொடர்பான தகவல்கள் தினமும் செயலணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தல் அவ்வாறே மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தலும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.