Header Ads



உயர் நீதிமன்றின் 7 ஆவது, முஸ்லிம் நீதியரசராகிறார் நவாஸ்


- றிப்தி அலி -

சுமார் 200 வருட வரலாற்றினைக் கொண்ட இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் ஏழாவது முஸ்லிம் நீதியரசராக ஏ.எச்.எம். திலீப்  நவாஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 17ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய நீதியரசர்களாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் திலீப்  நவாஸ், நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, சிரான் குணரத்ன, அஷலா வென்ஹபுலி, மஹிந்த சமயவர்த்தன மற்றும் ஜானக டி சில்வா ஆகியோரை நியமிப்பதற்கான சிபாரிசினை பாராளுமன்ற சபையிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தலைமையில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்ற சபை இந்த நியமனத்திற்கான அனுமதியினை ஏகமனதாக வழங்கியது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் ஜனாதிபதி முன்னைலையில் அடுத்த வாரம் சத்தியப்பிரமானம் செய்துகொள்ளவுள்ளனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ஏ.எச்.எம். திலீப்  நவாஸ், இந்த நியமனத்தின் மூலம் இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் ஏழாவது முஸ்லிம் நீதியரசராக நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1801ஆம் ஆண்டு முதல் செயற்படும் உயர் நீதிமன்றத்தில்  மாஸ் தாஜுன் அக்பர், இஸ்டீன் முஹம்மது இஸ்மாயில், அப்துல் காதர், அமீர் இஸ்மாயில், சலீம் மர்சூப் மற்றும் எஸ்.ஐ.இமாம் ஆகிய முஸ்லிகள் மாத்திரமே நீதியரசர்களாக செயற்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீதியரசர் சலீம் மர்சூப், கடந்த 2014ஆம் ஆண்டு  ஓய்வுபெற்றதிலிருந்து, இதுவரை முஸ்லிம் நீதியரசரொருவர் நியமிக்கப்படாத நிலையில்லேயே துலிப் நவாஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் பிரதேசத்தினை சேர்ந்த நீதியரசர் நவாஸ், கல்முனை ஸாஹிரா கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரார்.

சட்டக் கல்லூரியிலிருந்து முதல் தர சித்தியுடன் வெளியேறிய இவர், 1990ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இளம் அரச சட்டவாதியாக இணைந்துகொண்டார். மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசராக 2014ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்படும் வரை, சுமார் 24 வருடங்கள் சட்டமா அதிபர்  திணைக்களத்தில் அரச சட்டவாதி, சிரேஷ்ட  அரச சட்டவாதி,  பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

இங்கு கடமையாற்றிய காலப் பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில்; குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் அரச சார்பில் ஆஜராகி மும்மொழிகளில் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பல சட்டமா அதிபர்களின் நன்மதிப்பினை வென்ற  இவர் பிரித்தானியாவின் கிங்ஸ் கல்லூரி, அமெரிக்காவின் வொஷிங்கடன் சட்டக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சட்ட முதுமானி பட்டத்தினை பெற்றுள்ளார்.

3 comments:

  1. நீதியரசர் மர்ஹூம் எம்.எம். ஜெமீல் அவர்களை மறந்தது ஏன்?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.