Header Ads



குறுகிய காலத்திலே ஆட்சியை கைப்பற்றிய மொட்டு - 4 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் பொதுஜன பெரமுன - மஹிந்தவின் மக்கள் ஆதரவால் பலம் பெற்ற கட்சி


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று தனது நான்காவது பிறந்த தினத்தை (நவம்பர் 1 முதலாம்) கொண்டாடியது. மொட்டு என அனைவராலும் கூறப்படும் பொதுஜன பெரமுன தற்போது நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விகிதாச்சார தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் தனிக்கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அக்கட்சி சாதனை படைத்துள்ளது. நாட்டில் 70 வீதமான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் மொட்டு கட்சிக்கே உள்ளது. அதனால் மிகக் குறுகிய வயதில் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சியின் திரைக்குப் பின்னால் உள்ள கதையை அனைவரும் நன்கு அறிவார்கள்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்த பின்னர் அவரைச் சுற்றி இருந்த மக்கள் ஆதரவை அடிப்படையாகக்கொண்டு மொட்டு கட்சி உருவாகியது. அதன் ஆரம்ப அங்கத்தவர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற, மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களும் காணப்பட்டார்கள். விமல் கீ கயனகே தலைமையிலான பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா தேசிய முன்னணி மற்றும் எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்னும் கட்சிகளை அடிப்படையாகக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது.

தாமரை மொட்டை உத்தியோகபூர்வ இலச்சினையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் தற்போதைய தலைவர் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆவார். கட்சியின் தவிசாளர் தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆவார். கட்சியின் செயலாளர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஆவார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிப்பதற்கு வித்திடப்பட்டது 2015 பாராளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஆகும். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிட்டது. அவ்வேளையில் வெற்றிவாய்ப்பு காணப்பட்டபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றாலும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் பதவியை அளிக்க மாட்டேன் என்று கூறினார். அந்நிலையில் தேர்தலில் 96 பாராளுமன்ற உறுப்பினர்களே வெற்றி பெற்றதால் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அன்று தொடக்கம் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என கூறினார்கள். அதற்கமைய புதிய கட்சியை உருவாக்கும் பொறுப்பை தனது சகோதரரான பசில் ராஜபக்‌ஷவுக்கு வழங்கினார். உண்மையில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்த ஆதரவை சரியான முறையில் பயன்படுத்தி ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியை உருவாக்கும் முயற்சியில் திரையின் பின்னால் நின்று செயற்பட்டவர் பசில் ராஜபக்‌ஷ ஆவார் .

2015 ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் பசில் ராஜபக்‌ஷ என மோசமான குற்றச்சாட்டு எழுந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு சென்றவர் மீண்டும் இலங்கைக்கு வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளிக்கும் போது தன்னால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தார் என யாராவது கூறுவார்களாயின் மஹிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் பொறுப்பை தான் ஏற்றுக்ள்கொள்வேன் என கூறினார். அவரின் திறமையை அறிந்து நல்லாட்சி அரசாங்கம் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பல தடவைகள் அவரை சிறையில் அடைத்தது.

அவர் சிறையில் இருந்தபோதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலச்சினையை உருவாக்கினார்.மேலும் நெலும் மாவத்தையில் உள்ள உள்ள கட்சித் தலைமையகத்தில் இருந்து தனது கட்சிய பணியை ஆரம்பித்தார். அவ்வேளையில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்கு பெரும் பணியாற்றினார்.

இன்று நாட்டின் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சுற்றியே உள்ளன.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களில் பின்னர் வந்த மேதினத்தில் காலிமுகத்திடல் மக்களால் நிரம்பியிருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததை விட மும்மடங்கு அதிகமானோர் அங்கு வருகை தந்திருந்தார்கள்.

அன்று தொடக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் ஆதரவு அதிகளவு கிடைத்தது.பல போராட்டங்களுக்கு மத்தியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டார்கள். அதன்படி 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் 51 நாட்களாக இருந்தாலும் மொட்டு கட்சியின் பலத்தை நாட்டு மக்களுக்கு நிரூபிக்கக் கூடியதாக இருந்தது .

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. 2019ஆம் ஆண்டு கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவுசெய்யப்பட்டார். ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாடு பூராவும் சிறப்பாக நடைபெற்றன.

இறுதியில் மொட்டு கட்சியின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் 19 இலட்சம் மேலதிக வாக்குகளால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். சாதாரணமாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் தனக்கு ஆதரவான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க முடியும்.

ஆனால் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அதனை அவர்களால் செய்ய முடியாது போனது. பாராளுமன்றம் நாலரை ஆண்டுகளில் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தினம் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மொட்டு கட்சிக்கு கிடைத்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு வருட காலத்தில் பெற்ற 70 வீத உள்ளூராட்சி மன்ற அதிகாரம், நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரதமரை உருவாக்கிய வெற்றியின் பிரதானி பசில் ராஜபக்‌ஷ என்றால் மிகையாகாது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து தனது சகோதரர்களான ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பலமாக அமைவதை காண்பதே மக்களின் எதிர்பார்ப்பு என உறுதியாக கூறலாம்.

சந்தன பண்டார - தமிழில்: வயலட் 


No comments

Powered by Blogger.