November 18, 2020

உலக அரசியலைப் புரட்டிப் போடுமா..? ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் - 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A. Promised Land) (வாக்களிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். 

 மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொருளாதார நகர்வுகளினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் சுயமரியாதைப் பாதிப்புகள் பற்றியே அதிகமாக விபரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உலகத் தலைவர்கள், அவர்கள் மேற்கொண்ட பூகோள அரசியல் செயன்முறைகள் பற்றியும் உலகத்துக்கு அமெரிக்கா ஓர் சிறந்த நாடு என்ற கருப்பொருளின் மையமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் அதிகாரத்தை எப்படிப் பண்முகப்படுத்துவது என்பதே இந்நூலின் பிரதான அவதானிப்பாகவுள்ளது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டுவரையான தனது ஆட்சிக்கால அனுபவங்கள் பற்றியும் அமெரிக்கா என்ற சக்தியின் பலம் பற்றியதாகவும், அமெரிக்கா அடக்கி ஆழும் சக்தியல்ல என்ற கருத்தை முதன்மைப்படுத்தியுமே இந்த நூல் அமைந்துள்ளது.

புறொமிஸ் லான்ட் என்ற இந்த நூல் தொடர்பாக  வெள்ளிக்கிழமை வெளியான நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கண்ணோட்டம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கும் அவருடைய ஜனநாயகக் கட்சிக்கும் ஆதரவான நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை, புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் என்ற நூல் உந்துசக்தியாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ளது.

உலகத் தலைவர்களில் இந்தியாவின் காங்கிராஸ் தலைவி சோனியா காந்தி, சிறந்த தலைவர் எனவும் ஆண் ஊழியர்களுக்கு எதிரான பெண் ஊழியாளர்களின் முறைப்பாடுகள் பற்றி நிதானமாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பவர் எனவும் ஒபாமாவின் நூலில் கூறப்பட்டுள்ளதாக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் கண்ணோட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளாரி கிளிங்டன் சிறந்த பெண் தலைமத்துவ அதிகாரியெனவும் கிளாரி கிளிங்ரனுக்குச் சோனியா காந்தியே சிறந்த வழிகாட்டியாக அமைந்திருந்தாரென்றும் ஒபாமா தனது நூலில் சித்தரித்துள்ளார்.

ஆனால் சோனியா காந்தியின் மகன் ராகூல் காந்தி அரசியல் செயற்பாடுகளில் நிதானமற்றவர் என்றும் பதற்றத்துடனேயே எப்போதும் அவர் காணப்படுவதாகவும் தனது நூலில் ஒபாமா விமர்சித்துள்ளார். ராகூல் காந்தி இந்தியாவின் அடுத்த தலைவர் என்ற கருத்து ஒபாமாவின் விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்த அளவுக்கு ராகூல் காந்தியை, ஒபாமா பலவீனமான அரசியல் செயற்பாட்டாளராகவே கருதுகின்றாரென்பது அவருடைய கருத்து வெளிப்பாட்டில் இருந்து தெரிகிறது.

டொனால்ட் ட்ரம் நரகத்துக்குப் போகட்டும் என்றுதான் செனட் சபை உறுப்பினரான ஹிறகாம் தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் பற்றிய விபரங்கள் செயற்பாடுகள் பற்றியும் ஆழமாகத் தனது நூலில் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்சி செய்த பராக் ஒபாமா, தன்டைய ஆட்சிக்கால நிகழ்வுகள், அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றித் தனது நூலில் விபரித்துள்ளார்.

அதேவேளை, இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் மற்றும் சீன ஆதிக்கம் பற்றியும் ஈழத் தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் தொடர்பாகவும், புறொமிஸ் லான்ட் என்ற நூலில் எழுதப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் கண்ணோட்டத்தில் கூறப்படவில்லை. 

ஆனால் எழுநூற்று 68 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் நிச்சயமாக இந்த விடயங்கள் எழுதப்பட்டிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

ஏனெனில் 2009ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே, அந்த ஆண்டு மே மாதம் இலங்கைத் தீவில் இறுதிப் போர் நடந்தது.

அதனால் ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூலில் நிச்சயம் ஈழப் போராட்டம் பற்றிய சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கும். ஆனாலும் நூல் வெளிவந்த பின்னரே அது பற்றி வாசித்து அறியக் கூடியதாக இருக்கும்.

சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சிக்கு சென்ற புதன்கிழமை 60 நிமிட நேர்காணல் ஒன்றை வழங்கிய ஒபாமா, இந்த நூலை எழுதுவதற்குக்கான காரணங்கள் பற்றியும் அமெரிக்காவின் தூய்மைச் செயற்பாடுகள். நோக்கங்கள் குறித்தும் உலக மக்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

டொனால் ட்ரம்பின் ஆட்சிக்குப் பின்னரான அமெரிக்கா எப்படி இருக்க வேண்டும் என்றும் ட்ரம்பினுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை அமெரிக்காவின் இருண்ட யுகம் என அமெரிக்க அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

768 பக்கங்களைக் கொண்ட புறொமிஸ் லான்ட் என்ற நூல் $27 அமெரிக்க டொலருக்கு (இலங்கைப் பெறுமதியில் 5 ஆயிரத்து 130 ரூபாவுக்கு) விற்பனை செய்யப்படவுள்ளது. 

இதுவரை மூன்று மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. எழுத்தாளரும் நூல் வெளியீட்டின் உரிமையாளரும் ஒபாமா என்றே அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-அ.நிக்ஸன்-

0 கருத்துரைகள்:

Post a comment