Header Ads



முதலில் தொற்று இல்லை, 2து சோதனையில் தொற்றுறுதி - உயிரிழந்த கைதி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்


மஹர சிறைச்சாலையில் இருந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த கைதி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு மனித கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 82 வயதான கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கினிகத்தேனை பகுதியை சேர்ந்த அவர், மேலும் 112 கைதிகளுடன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது 2 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பின்னர் அவர்கள் கந்தகாடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பட்டிருந்த நிலையில் ஏனையவர்கள் 2 சிகிச்சை அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதி ஒருவரே உயிரிழந்ததுடன் சிறைச்சாலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்றுறுதியாகவில்லை.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.