Header Ads



பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், குடிமக்களுக்கும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய 10 உண்மைகளை உள்ளடக்கிய கடிதம்


தமிழில்: முஹம்மத் பகீஹுத்தீன்

இது சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அவர்களால், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனையும் ஏனைய சர்வதேச அறிஞர்களையும் விழித்து எழுதிய பகிரங்க மடல்

பிரான்ஸ் தலைவர் மெக்ரோன் அவர்களே, 

மதிப்புக்குரிய பிரெஞ்சு குடிமக்களே, சர்வதேச தலைவர்களே, அரசியல் வாதிகளே, அறிஞர்களே, புத்திஜீவிகளே, ஊடகவியலாளர்களே!

உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான நீதியான உடன்பாடான விவகாரங்கள் பக்கம் வாருங்கள் என நான் அழைப்பு விடுக்கிறேன். எல்லோருக்கும் பொதுவான மனிதநேயம், பண்பாடுகள், ஒழுக்க மாண்புகள் பக்கம் வாருங்கள். உரையாடல்கள் மூலம் கருத்துப் பரிமாற வாருங்கள். இனவெறியை, வெறுப்புச் பேச்சுக்களை, தனிநபர் மனதை புண்படுத்தும் வெறித்தனத்தை விட்டு விட்டு மனித நேயம் காப்போம் வாருங்கள்.

நான் தனிப்பட் முறையிலும், சர்வதேச முஸ்லிம்கள் ஒன்றியத்தின் சார்பாகவும் பின்வரும் பத்து உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்

1) பயங்கரவாதம் உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களுக்கும் மதங்களுக்கும் இடையில் எத்தகைய தொடர்பும் கிடையாது. இறை வழிகாட்டல்களை கொண்டு வந்த மதங்கள் உலகில் பாதுகாப்பையும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டவே வந்தன. எனவே தெய்வீக மதங்களுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் சம்பந்தம் கிடையாது.

2) சிலர் செய்யும்  குற்றச் செயல்களுக்காக அவர் சார்ந்த மதத்தை பின்பற்றும் அனைவரையும் பொதுமைப்படுத்தி நோக்குவது தவறானது. ஒருவருடைய குற்றச் சுமையை இன்னொருவர் மீது சுமத்த முடியாது என்பது ஒரு பொது விதி. இஸ்லாம் மதமும் அதனையே வலியுறுத்திக் கூறுகிறது. அல்-குர்ஆனில் இந்த பொதுவிதி மூன்று தடவைகள் திருப்பித் திருப்பி கூறப்பட்டுள்ளது.

3) 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் மனிதர்களுக்கான மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் பற்றி வெளிப்படையாகவே பிரகடனம் செய்து விட்டது. இந்த உண்மையைத் தான் சூரா கஹ்பின் 29 ஆவது வசனத்தில் ‘விரும்பியவர் இறை விசுவாசம் கொள்ளலாம், விரும்பியவர் நிராகரிக்கலாம்’ என அல்லாஹ் கூறுகிறான். மேலும் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என சூரா பகரா 156 வது வசனம் குறிப்பிடுகிறது.

இஸ்லாம் மனித இனத்திற்கு ஆண் பெண் என்ற வேறுபாடின்றி கண்ணியத்தையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுத்த மார்க்கமாகும்.  மதீனாவிற்கு புலம் பெயர்ந்து சென்ற நபிகளார் பல்லின மக்கள் வாழ்வதற்கான ஒரு அரசியல் சாசனத்தை வரைந்தார்கள். முதன் முதலில் யூதர்களுக்கும் மதீனாவாசிகளுக்கும் குடியுரிமைக்கான உரிமைகளை வழங்கிய வரலாற்று புகழ்மிக்க அரசியல் யாப்பாக அது போற்றப்படுகிறது.

4) விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் பொதுவான சுதந்திரங்களில் உள்ளதாகும். ஆனால் மதங்களின் புனிதங்களை கொச்சைப்படுத்தல், அவமதித்தல், நிந்திக்கும் கேலிச்சித்திரங்கள் மூலம் மனங்களை புண்படுத்துதல் என்பன அறிவியல் விமர்சனங்கள் அல்ல. இந்த உண்மைகளை அறிந்து சுதந்திரம் எது இழிவுபடுத்தல் எது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம் எங்களையும் எங்கள் மதத்தையும் புரிந்து கொள்ளும்படி விநயமாக வேண்டிக்கொள்கிறோம்.

5)

அல்லாஹ்வைப் பற்றியும் தூதர்களைப் பற்றியும் நிராகரிப்பாளர்கள் முன்வைத்த விமர்சனங்களை அல்குர்ஆன் பல இடங்களில் எடுத்தியம்புகிறது. அப்போது அல்-குர்ஆன் நிராகரிப்போர்களின் மனம் புண்படாமல், அவர்களது கண்ணியத்திற்கு பங்கம் வராமல் அமைதியான உரையாடல்கள் மூலம் பதில் கூறுவதை காணலாம். மாற்றுக் கருத்துள்ள நிராகரிப்பாளர்களை அல்குர்ஆன் விளித்துப் பேசும் போது நீங்கள் அசத்தியத்தில் உள்ளீர்கள் என தீர்ப்புச் சொல்லாமல் சத்தியத்தை அடைவதற்கான தேடலின் பால் வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கிறது. 

உதாரணமாக சூரா ஸபாவில் வரும் ஒரு உரையாடலை கவனியுங்கள்: ‘நாங்களோ அல்லது நீங்களோ இருவரில் ஒருவர்தான் நேர்வழியிலோ அல்லது வெளிப்படையான வழிகேட்டிலோ இருக்கின்றோம். நபியே நீர் கூறும், நாங்கள் செய்த குற்றங்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள். நீங்கள் செய்த குற்றங்கள் குறித்து நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்’

6) எமது இன்றைய பிரச்சினை பிரஞ்சு அரசு சுதந்திரம் என்ற கருத்தியலுக்கு வழங்கும் பெறுமானங்கள் பற்றியது அல்ல. மாறாக முஸ்லிம்கள் தங்களது உயிரிலும் மேலாக மதிக்கும் கருணை நபியை நிந்தித்து அவமானப்படுத்துவதை தடுத்து நிறுத்தாது அதனை ஊக்குவிப்பதே இன்றுள்ள எமது உண்மையான பிரச்சினையாகும்.

சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மக்கள் மனங்கவரும்  சொற்பொழிவுகள் மூலம் உணர்ச்சிகளை தூண்டி கிளர்ச்சிகள் ஏற்படுத்துவதால் பயனில்லை. அவ்வாறே மேற்குலகு பொய்யான கற்பனையில் வடிவமைத்துள்ள இஸ்லாம் பற்றிய பீதிக்கு சேவை செய்வதன் மூலம் சிந்தனைசார் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.  பள்ளிவாசல்களில் மக்களை பயமுறுத்துவதாலோ அவற்றை இழுத்து மூடுவதாலோ பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. மாறாக ஆழ்ந்த சிந்தனை, துல்லியமான புரிதல், கண்ணியமான அணுகுமுறை, திட்டமிட்ட அமைதியான செயற்பாடுகள் மூலம் மாத்திரமே இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

7) அல்-காயிதா, ஐசிஸ் போன்ற ஆயுதக் குழுக்கள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்துள்ளன. அவர்களால் கொல்லப்பட்ட முஸ்லிமல்லாதவர்களை விட முஸ்லிம்களின் உயிர்ச் சேதங்கள் தான் அதிகம் என்பது எல்லோரும் தெரிந்த விடயமாகும். வழிகெட்ட இந்த ஆயுதக் குழுக்களின் உருவாக்கத்தில் வெளிநாட்டு மற்றம் பிராந்திய உளவுத்துறை பங்கேற்றுள்ளது என்றே பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஐரோப்பா உட்பட உலகில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் சபை அனைத்தும் இத்தகைய ஆயுதக் குழுக்களின் குற்றச் செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன. அவர்களின் வழிகெட்ட சிந்தனைகளுக்கு எதிராக அறிவியல் ரீதியாக தொடர்ந்தும் போராடுகின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது ஏன் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி குற்றம் சுமத்தப்படுகிறார்கள்?!

8) முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்தின் விமோசனத்திற்காக வந்த மகத்தான இறுதித் தூதர். சிலர் அந்தக் கருணை வடிவமான அன்புத் தூதரை அவமானப்படுத்தி தூசிக்க முயலுகின்றனர். வேறு சிலர் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் கருத்துக்களால் அதற்கு ஊக்கமளிக்கின்றனர். 

உண்மையில் நபிகளார் அறிவின் தூதர். வாசிப்பீராக! என்பதே அவர் கொண்டு வந்த தூதின் முதல் வார்த்தை. அவர் அகிலத்தாருக்கு அருளாய் வந்தவர். மகத்தான பண்பாடுகளின் வடிவமாய் அமைந்தவர். இன மத பேதங்கள் இன்றி அவருடைய நற்குணங்களுக்கு உலக அறிஞர்கள் சான்று பகன்றுள்ளனர். நூறு மாமனிதர்களின் வரலாற்றை எழுதிய மைக்கல் ஹார்ட் என்பவர் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் முதன்மையானவராக தெரிவு செய்தார். உலக மக்களில் சுமார் 200 கோடிப் பேர் தங்களது நபியாக ஏற்றுப் பின்பற்றும் தூதர் முஹம்மத் இவர் தான்.

மனிதம் காக்க வந்த தூதர் முஹம்மதை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரங்களை பரப்புவதன் மூலம் என்ன பயன் காணப்போகிறீர்கள்? பொதுமக்களையும் இளைஞர்களின் உணர்வுகளையும் பிரான்ஸுக்கு எதிராக தூண்டுவதன் மூலம் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு (ஹாலோகோஸ்ட்) குறித்து பிரான்ஸ் ஏன் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.

மேற்கத்தேய சிந்தனையில் இன, நிற பாகுபாட்டை மீறுவது குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மதத்தையம் அதன் புனிதங்கள் மீதும் அத்துமீறி அவமதிப்பது ஏன் குற்றமாக கருதப்படுவதில்லை? ஆகக் குறைந்தது அதனை தடைசெய்வதும் இல்லையே, அது ஏன்? இனவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சை தூண்டுவது ஒருபோதும் தனிநபர் சுதந்திரமாகாது. அதன் மூலம் பிளவும், பிரிவினையும் தான் உருவாகும். அதன் விளைவுகள் அனைவருக்கும் பயங்கர ஆபத்தாக அமையும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே. 

எனவே அடுத்தவர்களின் கண்ணியத்தையும் உணர்வுகளையும் கீறிக் கிழிக்கும் சுதந்திரம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். நபிகளார் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள அன்புணர்வு வலிமையானது. முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை விரும்புகிறார்கள். அவ்வாறுதான் ஏனைய அனைத்து நபிமார்களையும் நேசிக்கின்றார்கள். அதில் அவர்கள் வேறுபாடு காட்டுவதில்லை.

9) நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாறலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம். அழகான வழிமுறைகளைப் பேணி அறிவுசார் உரையாடலுக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைக்கின்றோம். மதங்கள், சிந்தனைகள், மனிதநேயங்கள் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் சீரான பரிகாரம் காண இதைத் தவிர வேறு வழியே கிடையாது. அமைதியான உரையாடல்கள் இல்லாதவிடத்து மோதல்களும், சண்டைகளும், பேரழிவுகளும் மட்டுமே அந்த இடத்தை நிரப்பும். அதில் தோல்வியடையப் போவது நாம் அனைவருமே.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பா இரண்டு உலகப் போர்களை சந்தித்தது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அதில் பலியாகின. அதனால் ஐரோப்பா கபளீகரமானது. அநீதி, இனவெறி, தேசவெறி, நாசிசம் மற்றும் பொருள் முதல் வாத சிந்தனைப் போராட்டங்கள் காரணமாகவே ஐரோப்பா இந்த அழிவை சந்தித்தது.

இஸ்லாம் கருணையின் மதம். அது அமைதியின் மார்க்கம். உலகத்திற்கு பாதுகாப்பு அரண். எனவே இஸ்லாம் பயங்கரமானது என்றோ இனவாதம் கொண்டது என்றோ தேசியவாதம் பேசும் மதம் என்றோ வர்ணிப்பது அபத்தமானது. திருக்குர்ஆனை படிக்கும் யாரும் அப்படி கூறமாட்டார்கள். இஸ்லாம் இயற்கையின் மார்க்கம். இயல்புகளுக்கு முரண்படாத இனிய மார்க்கம். அதனால் தான் ஆயிரமாயிரம் சவால்கள் வந்த போதிலும் பந்தலில் கொடி படர்வது போல் இஸ்லாம் பரவுகிறது.

இறுதியாக பின்வரும் விடயங்களை வலியுறுத்த விரும்புகிறேன்.

கடந்த 20.10.2020 செவ்வாய் மாலை இரண்டு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் ஈபிள் கோபுரத்தை சுற்றி உலா வரும் போது இரண்டு ஐரோப்பிய பெண்களின் வெறித்தனமான கத்திக் குத்துக் தாக்குதல்களுக்கு உட்பட்டார்கள். இந்த வன்முறை தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள் அரபு இனத்தையே இழுத்து திட்டித் தீர்த்தார்கள் என தாக்கப்பட்ட பெண்மணியின் வாக்கு மூலம் கூறுகிறது. இந்த தீவிரவாத செயற்பாட்டிக்கு பின்னால் தூண்டல் காரணியாக இருந்தது கிறிஸ்தவம் என்றோ அல்லது மதச்சார்பின்மை கொள்கை என்றோ முஸ்லிம்களாகிய நாம் குற்றம் சாட்ட மாட்டோம். அப்படி குற்றம் சாட்டுவதும் கூடாது.

இதே போன்றுதான் நபிகளாரை அவமானப்படுத்தும் கேலிச்சித்திரங்கனை வகுப்பறையில் காண்பித்த ஜீன்-மைக்கேல் பிளாங்கர் எனப்படும் ஆசிரியரைக் கொலை செய்தவர் ஒரு முஸ்லிம் வாலிபன் என்பதற்காக இஸ்லாத்தை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதையும் நாம் மறுதலிக்கின்றோம். 

இது எந்தநிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாக அமையாது. ஏன் எதற்காக இது நடந்தது என அதற்கான காரணங்களை தேடுவது அவசியமானதே. ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடுகள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டித்துள்ளன. மேலும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுமாறும் அறைகூவல் விடுத்துள்ளன.

நாம் மீண்டும் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புவது இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் இணைத்துப் பார்க்காதீர்கள். உலகளவில் எதாவது ஒரு நெருக்கடி வரும்போது அதனை மதத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்க்காதீர்கள். இஸ்லாத்தை அல்லது ஏனைய மதங்களை பயங்கரவாதத்துடன் பட்டியல்படுத்தி பார்க்காதீர்கள். இவை யாவும் பிழையான போக்காகும். இத்தகைய பிழையான பார்வைகள் குறிப்பிட்ட அந்த மதத்தை நிந்தித்து அவமதிப்பதாகவே அமையும். மேலும் அது சமூகத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததாகவே கருதப்படும்.

இத்தகையை பிரச்சினைகள் குறித்து உங்களுடன் இணைந்து ஒரு தீர்வை கண்டடைவதற்கான தேடலில் முனைப்போடு இறங்க நாம் தயாராகவுள்ளோம். 

எத்தகைய நெருக்கடி நிலைமைகள் வந்த போதும் இரட்டை நிலைப்பாடுகள் எடுப்பதை இஸ்லாம் வெளிப்படையாகவே  தடுத்துள்ளது. ஒரு குற்றச் செயல் நிகழும்போது இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒரே நிலைப்பாட்டில் தான் இருப்போம். நபி (ஸல்) அவர்களின் முழு வாழ்வும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் போர்க்களமாகவே இருந்ததுள்ளது. இதுவே எங்களுக்கும் முன்மாதிரியாகும். எமது தீனில் மத சுதந்திரம், நம்பிக்கை சுதந்திரம், மத மாற்றத்திற்கான சுதந்திரம் பூரணமாகவே உள்ளது. 

எனவே இத்தகைய மிருகத்தனமான அத்துமீறல்கள் அனைத்தையும் இன, மத, தர வேறுபாடுகள் பாராது நிராகரிப்பதே எமது நிலையான நிலைப்பாடாகும்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படாமல் கட்டுப்பாட்டுடனும் விவேகத்தோடும் நடந்து கொள்ளுமாறும் முஸ்லிம் பெண்மணிகளை கத்தியால் தாக்கியவர்களை அவர்களின் மதத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டாம் எனவும் முஸ்லிம் சமூகத்தை விநயமாக வேண்டிக் கொள்கிறேன்.

அவ்வாறே குற்றவாளிகளின் மதத்தை பார்க்காமல் பக்கச்சார்பின்றி சட்டத்தை அமுல்படுத்தும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு திரு மெக்ரோனை அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன். இத்தகைய செயற்பாட்டால் மாத்திரமே நாட்டில் வெறுப்பும் இனவெறியும், பதற்றமும் ஏற்படாமல் பாதுகாப்பான அமைதி சூழல் உருவாகும் என்ற உண்மையையும் நினைவு கூர்கின்றேன்.

ஜனாதிபதி மெக்ரோன் அவர்களே!

நீங்கள் இன்று (01.11.2020) அல்-ஜசீராவில் உங்கள் முதல் உரையில் கூறிய விடயம் நிச்சயமாக வித்தியாசமான எதிரொலியை தரும். மேலும் நீங்கள் எங்கள் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது உங்களை வரலாற்றில் நிலைத்து வைப்பதற்கான துணிவை வேண்டி நிற்கும் சந்தர்ப்பமாகும்.

இறுதியாக, 

பிரான்ஸில் உள்ள முஸ்லிம்களிடையேயும் மற்றவர்களிடையேயும் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் ஆழமாக வேரூண்றச் செய்வதற்கு நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். மேலும் முஸ்லிம்களுக்கும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடங்குவதற்கு மிக்க மகிழ்ச்சியோடு ஆர்வமாக எதிர்பார்த்து நிற்கின்றோம். அதன் விளைவாக சமூக அமைதி ஏற்பட்டு அனைத்து பிரெஞ்சு மக்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

பொறுப்புக்களை தள்ளிப்போட முடியாத ஒரு தருணத்தில் உள்ளோம். தீவிரவாதம் எந்த வழியில் எந்த திசையில் இருந்து வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக காத்திரமான சகல முயற்சிகளையும் எடுப்பதற்கு அரச மற்றும் அரசசார்பற்ற அனைத்து துறைகளிலும் உள்ள வகை கூறும் பொறுப்புதாரிகள் ஈடுபாட்டோடு முன்வருவது அவர்கள் மீதுள்ள தார்மீகக் கடமையாகும்.

கலாநிதி அலி முஹியத்தின் கரதாகி

பொதுச் செயலாளர்

சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம்.


1 comment:

  1. இப்படி பேக்கப் பக்கமாக மற்றவர்களுக்கு எழுதுவதற்கு பதிலாக பயங்கரவாதத்தில்/அடிப்படைவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை திருத்த முயற்சி செய்யலாமே? பிரெஞ்சு ஆசிரியர் கொல்லப்பட்டதற்கு கொலையாளிக்கு அவருக்கும் என்ன தனிப்பட்ட தகராறா ?

    ReplyDelete

Powered by Blogger.