Header Ads



ஒன்றரை இலட்சம் தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படலாம் - பீதியை கிளப்பும் நளின் பண்டார Mp


(எம்.மனோசித்ரா)


மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் சமூகத்தில் காணப்படலாம். எனவே அரசாங்கம் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,


குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி பிரதேசத்தில் வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த பெண்ணொருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து 12 வைத்தியர்கள் உள்ளிட்ட 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வைத்தியசாலைக்கு அண்மையில் நானும் சென்றிருந்தேன்.


தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு அங்கு போதுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. வைத்தியசாலைக்கு வந்து சென்றோர் குறித்து தகவல்களைப் பெற்று அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுகிறது.


பி.சி.ஆர். பிரிசோதனைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் இவ்வாறான விடயங்கள் குறித்து கேள்வியெழுப்பினால் அவர் பதில் கூற முடியாமல் தடுமாறுகின்றார். சபாநாயகர் சபையை ஒத்தி வைக்கின்றார். அமைச்சர் பந்துல குணவர்தன பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டதாகக் கூறிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலுள்ள பலர் இடையில் சென்று விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பி.சி.ஆர். பரிசோதனை குறித்து அரசாங்கத்திற்குள்ளேயே இவ்வாறான நிலைமை என்றால் , பொது மக்கள் மத்தியில் எந்த நிலையில் இருக்கும் ?


மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் சுமார் 1500 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் 10 பேருடனாவது தொடர்புகளைப் பேணியிருப்பார்களாயின் 15 000 தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பார்கள். அந்த 15 000 பேரில் ஒவ்வொருவரும் தலா 10 பேருடன் தொடர்பினைப் பேணியிருந்தால் சமூகத்தில் 1 இலட்சத்து 50 000 தொற்றாளர்களேனும் இருக்கக் கூடும். எனவே பி.சி.ஆர். பரிசோதனைகளை முறையாக முன்னெடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம் என்றார். 

No comments

Powered by Blogger.