Header Ads



புராதன இடங்களைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் பகிரங்கமாக முன்வர வேண்டும்


‘முஸ்லிமல்லாதவர்கள் வணங்குபவைகளை திட்டாதீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அல் குர்ஆன் அவ்வாறான இடங்களை சேதப்படுத்தவோ அழிக்கவோ இடமளிக்கவில்லை. அதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து பாதுகாக்க பகிரங்கமாக முன்வர வேண்டும். மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் உயிருடன் இன்று இருந்திருந்தால் அவ்வாறான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் சம்மாந்துரையில் நடைபெற்ற மர்ஹும் அஷ்ரஃப் ஞாபகார்த்த கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மாத்திரமல்லாமல் சிங்கள மக்களுடனும் ஐக்கியமாக வாழக்கூடிய சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த ஐக்கியமான வாழ்வு ஏற்படுவது எமது அணுகுமுறையில் தான் தங்கியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் இடங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தொல்பொருள் இடங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி அண்மையில் பத்திரிகைகளுக்கு விடுத்திருந்த ஒரு அறிக்கையில், ‘நீங்கள் பௌத்த புராதன சின்னங்களை மாத்திரம் பாதுக்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள். ஏன் கோணேஸ்வர ஆலயம் உள்ளிட்ட பல இந்து கோவில்கள் போர்த்துகேய ஜெனரல் திஸாவினால் சேதப்படுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. ஏன் இவைகளும் பாதுகாக்கப்படக்கூடாது எனக் கவனமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

பாகிஸ்தான் முஸ்லிம் நாடு. அங்கு தக்ஸிலாவைப் பாதுகாத்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலை உள்ளது. அதனை அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பாதுகாத்துள்ளார்கள். அவை இன்று வணக்க வழிபாட்டு தளங்களாக இல்லை. பழைய காலத்தில் அவை வணங்கப்பட்டிருந்தாலும் இன்று அவ்வாறில்லை. அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் உல்லாசப் பயணிகளின் வருகை ஊடாக அவர்கள் நிறைய வருமானத்தை பெறுகின்றனர். அதனால் நாம் ஒன்றிணைந்து இந்நாட்டின் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்கள், அரசியல்வாதிகள் முன்பாக இந்த யோசனையை முன்வைக்க விரும்புகிறேன். அதன் மூலம் தொல்பொருள் உள்ள நிலங்களைப் பாதுகாக்க பெரும்பான்மையினரை கிழக்கில் குடியேற்றுவது என்ற அவசியம் ஏற்படாது. நாம் இந்நாட்டில் ஒறறுமையாக வாழ்வதற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்து தெளிவான ஐக்கிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 20 வது நினைவு தின நிகழ்வு சம்மாந்துறையில் மனித நேய நற்பணிப் பேரவை மற்றும் தேசமான்ய இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றம் என்பவற்றின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்திய இவ்வைபவத்தில் சம்மாந்துறை நகர சபைத் தலைவர் ஏ.எம். நெளஸாத். மர்ஹும் அஷ்ரஃபின் மைத்தினர் சட்டத்தரணி அப்துல்லாஹ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனிபா, சூரா சபை தவிசாளர் சத்தார், நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் நூர் மதனீ, வரலாற்றில் ஓர் ஏடு புகழ் புகாரி மௌலவி, வலயக் கல்விப் பணிப்பாளர் நஜீம், அத்தியட்சகர் டொக்டர் அஷார் ஹனிபா, பிரதம பொலிஸ் பரிசோதகர் நௌபர், டொக்டர் கபீர்உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சடடத்தரணி ஸுஹைர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்  ‘மர்ஹும் அஷ்ரஃப் மறைந்து 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரைப் பற்றி உரையாற்ற கிடைத்த முதல் சந்தர்ப்பம் இது. நான் 20 வருடங்களாகப் தலைவர் அஷ்ரஃபைத் தொடர்புபடுத்தி பல கட்டுரைகள் உள்ளிட்ட ஆக்கங்களை எழுதியுள்ளேன். ஆனால் அவர் பிறந்த ஊரில் மாத்திரமல்லாமல் முழுநாட்டிலும் முதன்முறையாக அவர் குறித்து உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பம் இதுவாகும். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்து எனக்கு இவ்வாய்ப்பை அளித்திருக்கும் மனித நேய நற்பணிப் பேரவை மற்றும் தேசமான்ய இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றம் என்பவற்றுக்கு இறைவன் அருள் கிடைக்கப் பிரார்த்தித்து நன்றிகளை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மர்ஹும் அஷ்ரஃப் சட்டக் கல்லூரியில் 1970 இல் முதல் வருட மாணவனாக சேர்ந்த பொழுது அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எனக்கும் அவருக்குமிடையில் உறவு ஏற்பட்டது. அந்த உறவு 40 வருடங்கள் நீடித்து நிலைத்தது. அவர் சட்டக்கல்லூரிக்கு பிரவேசிக்கும் போது நான் அக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவனாக இருந்தேன். ஆனால் அவர் சட்டக் கல்லூரிக்கு பிரவேசிக்க முன்னரே அவர் குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரது கவிதை ஆளுமை குறித்து பலர் இங்கு சுட்டிக்காட்டினார்கள்.  அவரது கவிதைகளை அன்றைய காலகட்டத்தில் மாளிகாவத்தையிலிருந்து வெளியான எமது ‘புதுமைக்குரல்’ பத்திரிகையில் பிரசுரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அப்பத்திரிகையில் முகாமைத்துவ ஆசிரியராக இருந்தேன். அக்காலப்பகுதியில் நான் அவரை சந்தித்து இருக்கவில்லை. ஆனால் அவரது கவிதைகளை எமது பத்திரிகையில் பிரசுரித்தேன். அவர் சட்டக் கல்லூரிக்கு வந்து சேர்ந்த பின்னர் எமக்கிடையிலான உறவு மிகவும் நெருக்கமாகியது. அவர் சட்டக் கல்லூரியில் படித்த காலப்பகுதியில் சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்த சம்பவங்களில் ஒன்று அவர் முதலாம், இரண்டாம் வருடங்களில் (First Class Honours) முதல் தரத்தில் சித்தி அடைந்தார். அவ்வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெறவில்லை. ஏனெனில் நான் உழைத்துக் கொண்டு படிக்கவேண்டி இருந்தது. அக்காலப்பகுதியில் நான் ‘சன்’ ஆங்கில தினசரிப் பத்திரிகைக்கு எழுதி கைச்செலவுக்கு பணம் தேட வேண்டிய காலப்பகுதியாக இருந்தது. முழு நேர மாணவனாக இருந்த போதிலும், நான் பிறந்த குடும்பமும் பெரிய குடும்பம். அவ்வாறான சூழலில் தான் எனக்கு படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அஷ்ரஃபின் தந்தை ஹுஸைன் விதானையார் எனக்கு பிற்காலத்தில் நன்கு பழக்கப்பட்டவர். அதேபோன்று அஷ்ரபின் தாயாரையும் சகொதரர்களையும் நான் அறிவேன். மிகவும் அன்பான பாசமான இரக்கம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அஷ்ரஃப் அவர்கள்.

அஷ்ரஃப் கல்லூரி காலத்திலேயே சமூக விடயங்களில் அதிக அக்கரையுடன் செயற்படக்கூடியவராக இருந்தார். அவர் பிற்காலத்தில் பெறுமதிமிகு அரசியல் தலைவராக வரக்கூடிய சான்றுகளை சட்டக் கல்லூரியில் இருக்கும் போதே எம்மால் ஊகிக்க முடிந்தது.

சட்டக் கல்லூரியில் படிக்கும் போது அவர் இரண்டு விடயங்களில் பிரபல்யமானார். ஒன்று முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம். இது சம்பந்தமாக 1971 இல் முஸ்லிம் மஜ்லிஸின் பொதுச்செயலாளராக அவரும் அதன் தலைவராக நானும் இருந்த போது அகில இலங்கை ரீதியிலான இரண்டு நாட்கள் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது. அக்கலந்துரையாடலின் போது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான சட்டம். நீதிபதி எம்.ரி அக்பர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம். இதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது. ஆனால் திருத்தங்களும் அவசியமானது.  இந்த சீர்திருத்தக் கருத்தரங்கை நாம் வெற்றிகரமாக நடாத்தினோம்.

அடுத்த விடயம் அவர்  சட்டக் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கற்றுக்கொண்டிருக்கும் போது அவர் உட்பட சட்டக் கல்லூரி மாணவர்கள் வேறு சிலரும் நான் அடங்கலாக சில சட்டத்தரணிகளும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டோம். இதனை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். 1971ல் மாபெரும் இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் உருவானது. அந்த யுத்தமே பின்பு பங்களாதேசம் உருவாகக் காரணமாக அமைந்தது. அந்த யுத்தத்தில் பாகிஸ்தானின் விமான மற்றும்  இராணுவ வீரர்கள் 90 ஆயிரம் பேர் இந்தியாவினால் கைது செய்யப்பட்டனர். அச்சமயம் அவர்களை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஒரு பெருங்கூட்டம் நடாத்தப்பட்டது. அது முஸ்லிம் ஐக்கிய முன்னணியால் நடாத்தப்பட்டது. அதன் முக்கிய பங்காளியாக அஷ்ரப் விளங்கினார். அவர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.  ஆனால் அது அவசரகாலச்சட்டம் அமுலில் இருந்த காலம். பொலிஸார் கூட்டத்திற்கு அனுமதி தருவதாகக் கூறினார்கள். அனுமதி கிடைக்கவில்லை. அதனால் கூட்டத்தை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடாத்தாது கபூர் மண்டபத்தில நடாத்தினோம். இதற்காகவே கைது செய்யப்பட்டோம். முன்னணியின் தலைவர் என்ற முறையில் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு அஷ்ரஃப் உட்பட ஏனையவர்கள் சி.ஐ.டி.யினரால் விடுவிக்கப்பட்டனர். எனக்கு எதிரான கோவையை  சிஐ.டி இனர் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நான் விடுதலையானேன்.

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் எனக்கு முன்பு இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுதந்திரன் வலியுறுத்தினார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.  அத்தோடு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இக்கருத்தை முழுமையாக  வரவேற்கும் அதேவேளையில் இந்நாட்டு முஸ்லிம்களில் ஒரு பகுதியினர்  கிழக்கு மாகாணத்தில் வாழுகின்றனர். முஸ்லிம்களில் மூன்றிரண்டு பங்கினர் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ளனர். ஆனால் இந்நாட்டில்  பெரும்பான்மை சமூகம் திருப்தி அடையாமல் சிறுபான்மை மக்கள் திருப்தியான நிலையில் வாழ்வது கஷ்டமான ஒரு விடயமாக மாறலாம். அதன் காரணத்தினால் நாம் சில விடயங்களில் விட்டுக்கொடுத்து எங்களது அடிப்படை உரிமைகளை இணைந்து பாதுகாப்பது மிக முக்கிய காரியம்.

அது மாத்திரமல்லாது காணிப் பிரச்சினை  குறித்து கவனம் செலுத்தும் போது நாம் கையாள வேண்டிய ஒரிரு வழிமுறைகள் உள்ளன. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் ஒர் இலங்கை முஸ்லிம் என்ற பார்வையை நான் கொண்டிருக்கின்றேன். இந்நாட்டில் இரண்டு பெரும்பான்மை சமூகங்களும் கவலையான நிலைமையில் பல தடவைகள் இருந்துள்ளன. ஒன்று 1961 இல் ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடைபெற்றது. அது ஒரு கத்தோலிக்க சதியாகப் பார்க்கப்பட்டது. அது தோல்வி அடைந்தது. 1972 இல் ஆட்சிக்கு எதிராக மாபெரும் சிங்கள இளைஞர் கிளர்ச்சி இடம்பெற்றது. அதேபோன்று 1979 இல் மற்றுமொரு சிங்கள மக்களின் பெரும் புரட்சி அரசாங்கத்திற்கும் ஆட்சிக்கும் விரோதமாக நடந்தேறியது. அதற்கிடையில் 30 வருடகால யுத்தம் புலிகள் இயக்கத்தினரால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. இந்த அனைத்து ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம்கள் பங்காளர்களாக ஆகவில்லை.நாம் நாட்டுபற்றுள்ள ஒரு சமூகம் என்று உறுதியாகவும் பகிரங்கமாகவும் கூறிக்கொண்டிருந்தவர்கள்.  . நாம் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மை சமூகம் என்ற அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்தினருடனும், தமிழ் சமூகத்தினருடனும் நாட்டுபற்றாளர்களுடனும் ஐக்கியமாகவும் வாழ வேண்டும என்பதில் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார்.

அந்த வகையில் தான் அவர் அதிகாரப் பரவலாக்கததிற்கு நூறு வீதம் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதில் அவருக்கு இரு நிலைப்பாடுkal இருக்கவில்லை.   ஆனால் பிரிவினை வாதத்தையும் நாடு பிளவுபடுவதையும் அவர் விரும்பவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையால் இன ரீதியாக உலகில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு நாடு இஸ்ரேல். அந்நாட்டில் வேறு சமூகங்களுக்கு இடமில்லை. அது ஒரின நாடு. அவ்வாறான ஒரு நாடு உருவாவதை இந்நாட்டு முஸ்லிம்கள் விரும்பவிலை.

மர்ஹும் அஷ்ரஃப் புலிகள் இயக்கத்தினரின் போராட்டத்திற்கு எதிராகச் செல்லவும் இல்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக இருக்கவும் இல்லை. அவர் தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவை வைத்திருந்தார். அவர் சட்டக் கல்வியை நிறைவு செய்து சிறிது காலம் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் வேலை செய்தார். அங்கிருந்து வெளியேறி சட்டத்தரணியாகத் தொழிலை ஆரம்பித்த காலப்பகுதியில் அவர் தந்தை செல்வாவின் சமஷ்டி கட்சி பின்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்து, தந்தை செல்வாவுடன் நெருக்கமாகச் செயற்பட்டார். ஆனால் அவர் வட்டுக்கோட்டை  பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அது தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றில்லாமல் தமிழ் மக்களின் தாயகம் என்று வந்ததே காரணம். ஆனாலும் தந்தை செல்வாவினதும் தமிழர் கூட்டணியினதும் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற ஆழமான நம்பிக்கை அவரிடமிருந்தது.

1986 இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாக்கும் வரையும் அவர் அம்முயற்சியிலிருந்து விலகவில்லை. ஆனால் காலம் கடந்த பிறகு இப்பிரச்சினை நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் உறவைப் பிரித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் நாம் தெளிவாக உள்ளோம். அவ்விடயத்தை எங்கள் பிரச்சினையாக இங்கு எடுக்க இன்று நான் வரவில்லை. அஷ்ரஃப் அவர்கள் இணைப்பு விடயத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டார். பகிரங்கமாக எதிர்க்காவிட்டாலும் அவர் இவ்விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்டார். அவர் ஒரு கட்டத்தில கிழக்கு மாகாணம் தனித்தியங்கினால் நல்லது என்ற நிலைப்பாட்டில் இருந்தார். ஜனாதிபதிஜே.ஆர் ஜயவர்தன அவர்கள், 1987 ஜுலையில் மேற்கொண்ட வடக்கு கிழக்கு இணைப்பு நடவடிக்கையால் சில மாற்றுக்கருத்துக்கள் உருவாகியதை நாம் ஏற்றுக்கொள்ளுகின்றோம்.

தற்போதைய சூழலில் தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள மக்களுடனும் ஐக்கியமாக வாழக்கூடிய வசதியை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை வெற்றிகளமாக உருவாக்கிக் கொள்வது எமது அணுகுமுறையில் தான் தங்கியுள்ளது. தொல்பொருள் இடங்கள் தொடர்பில் ஒரு ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தொல்பொருள் இடங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி அண்மையில் பத்திரிகைகளுக்கு விடுத்திருந்த ஒரு அறிக்கையில், ‘நீங்கள் பௌத்த புராதன சின்னங்களை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள். ஏன் கோணேஸ்வர ஆலயம் உள்ளிட்ட பல இந்து கோவில்கள் போர்த்துகேய ஜெனரல் திஸாவினால் தரைமட்டமாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. ஏன் இவைகளும் பாதுகாக்கப்படக்கூடாது எனக் கவனமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

போர்த்துக்கேயர் காலத்தில்,1626 இல் இந்நாட்டு முஸ்லிம்கள் மேல், தென் மாகாணங்களில் இருந்து விரட்டப்பட்ட போது செனரத் மன்னரால் கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அவர்களது பள்ளிவாசல்களும் அன்று நிச்சயம் அமைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் ஏன் பாதுகாக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டைத்தான் சம்பந்தன் ஐயா எடுத்தார். புராதன இடங்களைப் பாதுகாக்கும் போர்வையில் எங்கள் காணிகளை அபகரிக்கத் தேவையில்லை. அதற்குரிய இடங்களை மாத்திரம் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இங்கு நான் கூறவருவது யாதெனில் அல் குர்அனில் ‘அல் அந்ஆம்’ என்ற அத்தியாயத்தின் 108 வசனத்தில், ‘(நம்பிக்கையாளர்களே..) அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கின்றது. அப்படியெனில்  திட்டக்கூடாத அவ்வாறான இடங்களை தேசப்படுத்துவதற்கோ, தகர்ப்பதற்கோ, அகௌரவப்படுத்துவதற்கோ அல் குர்ஆன் இடமளித்ததில்லை என்பது தெளிவாகிறது. அதனால் அவற்றை முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து அகௌரவப்படுத்துவதில் இருந்து ஏன் பாதுகாக்கக்கூடாது? மர்ஹும் அஷ்ரஃப் உயிருடன் இன்று இருந்திருந்தால் அந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை முஸ்லிம் நாடு. அங்குள்ள புராதன புத்த தக்ஸிலாவை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது.  ஆப்கனிஸ்தானில் பாமியன் புத்தர் சிலை உள்ளது. அதனை அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பாதுகாத்து வருகின்றார்கள். அவை இன்று வணக்க வழிபாட்டு தளங்களாக இல்லை. பழைய காலத்தில் அவை வணங்கப்பட்டிருந்தாலும் இன்று அவ்வாறில்லை.  அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் உல்லாசப் பயணிகளின் வருகை ஊடாக அவர்கள் நிறைய வருமானத்தை பெறுகின்றனர்.

அதனால் நாம் ஒன்றிணைந்து இந்நாட்டின் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்கள், அரசியல்வாதிகள் முன்பாக இந்த யோசனையை முன்வைக்க விரும்புகிறேன். நாம் இந்நாட்டில் ஒறறுமையாக வாழ்வதற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்றார்.

2 comments:

  1. Mr. Zuhair, you have stated that you got to know Mr. Ashroff 50 years back in 1970 and that your friendship lasted 40 years. How could your friendship have lasted 40 years when he passed away in 2000, which is 30 years after you got to know him?

    ReplyDelete
  2. @Muhandiram: It could also have been a tongue stumbling block. It might be the mistake of the correspondence or the person who delivered the news to our Jaffna Muslim. Mr. Zuhair might be not a good arithmetician. It is better not to see such things and to disappear.

    ReplyDelete

Powered by Blogger.