Header Ads



அரசியல் சதுரங்க விளையாட்டில், பகடைக் காயாகும் பசு


- கலாநிதி அமீரலி,  அவுஸ்திரேலியா -


ராஜபக்சாக்களின் மந்திரிசபை இறைச்சிக்காகப் பசுமாடுகளை அறுப்பதைத் தடை செய்துள்ளது. ஜீவகாருண்யமுள்ள எவராவது அந்த மாடுகளை அறுவைக்காக இழுத்துக்கொண்டு போகும் முறையையும், அம்மாடுகள்படும் அவஸ்தைகளையும் நேரடியாகக் கண்ணுற்றால் எந்த அரசின் தடைச்சட்டமும் இல்லாமலேயே மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி விடுவார்கள். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி அந்தக் கொடுமையை அப்பட்டமாகக் காட்டியபோது நாடே அலறியது. அதனால், அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கம் அறுவைக்காக மாடுகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. ஆனால் மந்தை வளர்ப்பாளர்கள் அரசாங்கத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்து அந்த வழக்கில் வெற்றிகண்டு அரசாங்கத்திடமிருந்து பல கோடி டொலர்களை நஷ்டஈடாகப் பெற்றுக் கொண்டனர். இப்போது இலங்கையிலும் பசுவை வளர்ப்பவர்களுக்குப்பதிலாக அதன் இறைச்சியை உண்பவர்கள் அரசுக்கெதிராக வழக்குத் தொடரப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர். அவ்வாறு நடைபெற்றால் இலங்கையில் நிலவும் இன்றைய அரசியற் சூழலில் அவர்கள் தோல்வி அடைவது உறுதி.


அது ஒரு புறமிருக்க, அரசாங்கம் எந்தக் காரணத்துக்காக இத்தடையை விதித்துள்ளது என்பதை நோக்கின் அரசின் அரசியல் நாடகம் வெளியாகும். இலங்கை ஒரு பௌத்த நாடு. எனினும் பௌத்தர்களுக்கு மட்டுமே உரிய ஒரு நாடல்ல. பௌத்தம் ஜீவகாருண்யத்தைப் போதித்து உயிர்க் கொலையை வெறுக்கிறது. அந்த உயிர்க்கொலை பசுவை மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளையும் உள்ளடக்கும். இலங்கையிலே இறைச்சிக்காக பசுவை மட்டுமா கொல்கிறார்கள்? ஆடு, கோழி, பன்றி, மீன் என்றவாறு பல ஜீவராசிகள் மனித உணவுக்காகப் பலியாகின்றனவே. உண்மையிலேயே பௌத்தத்தின் அடிப்படையில் ஜீவராசிகளின் உயிர்க்கொலையைத் தடுப்பதே அரசின் ஒரே நோக்கமென்றால் ஏன் எல்லா இறைச்சி வகைகளையும் தடைசெய்து மீன் உண்ணுவதையும் நிறுத்தி பெரும்பான்மை இந்து மதத்தினர் கடைப்பிடிக்கும் மரக்கறி உணவைக் கட்டாயப்படுத்த முடியாது?


மாறாக, பசுவை மட்டுமே காப்பாற்றி அதன் மூலம் உண்ணாட்டுப் பாலுற்பத்தியைப் பெருக்குவோமென்று அரசு காரணம் கூறுகிறது. அவ்வாறு பாலுற்பத்தி பெருகினால் வெளிநாட்டிலிருந்து பால் மாவை இறக்குமதி செய்யத் தேவையில்லை என்றும் அதனால் அந்நியச் செலாவணி மிச்சமாகும் என்றும் மேலும் காரணம் காட்டுகிறது. உணவிலும் அத்தியாவசியத் தேவைகளிலும் தன்னிறைவு காணத்துடிக்கும் இந்த அரசின் பம்மாத்தை என்னவென்று சொல்வதோ தெரியவில்லை. அந்தப் பம்மாத்தை இரண்டு விடயங்கள் வெளிப்படுத்துகின்றன.


ஒன்று, மாட்டிறைச்சி உண்பவர்களுக்காக வெளிநாட்டிலிருந்து அதனை இறக்குமதி செய்து அதனை சகாய விலைக்கு விற்பதாகக் கூறும் அரசின் பொருளியல் நிபுணத்துவத்தை என்னவென்று வருணிப்பதோ? பால்மா இறக்குமதியால் மிச்சமாகும் செலாவணியைவிட அதிகமான செலாவணி விரயமாகும் இறைச்சி இறக்குமதியால். அதனைச் சகாய விலைக்கு விற்பதனால் ஏற்படும் மொத்த நட்டத்தை எந்தக் கணக்கில் எழுதுவது? அது மட்டுமல்ல, மாட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்பவர்கள் முஸ்லிம்கள். அவர்களுக்குத் தேவை ஹலால் இறைச்சி. உலக சந்தையில் சாதாரண மாட்டிறைச்சியின் விலையைவிட ஹலால் இறைச்சியின் விலை அதிகம் என்பதை அரசு உணருமா? ஆகவே இத்தடையால் அந்நியச்செலாவணி மிச்சமாகும் என்ற வாதம் அர்த்தமற்றதொன்று.


இரண்டு, மாட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்பவர்கள் முஸ்லிம்களென்றால் அம்மந்தைகளை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புறச் சிங்கள மக்கள். ஒரு பசு எல்லாக் காலத்திலும் பால் தரமாட்டா. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் அதன் பால்மடி வற்றிவிடும். அந்த மந்தைகளைத் தொடர்ந்தும் பராமரித்தால் அதற்குத் தேவையான தீனியை இடையர்கள் தேட வேண்டும். இருக்கின்ற புற்றரைகளில் பால்தரா மந்தைகளை மேயவிட்டால் பால்தரும் பசுக்களுக்கு உணவு போதாமல் போகலாமல்லவவா? இதனாலேதான் பகுத்தறிவுள்ள கிராமப்புற இடையர்கள் இறைச்சிக்காக அம்மந்தைகளை விற்கின்றனர். அவர்களும் பௌத்தர்களே. ஆனால் அரசாங்கமோ இந்த மந்தைகளை என்னசெய்வதென்று தெரியாமல் அதற்கான வழிவகைகளையும் ஆராயாமல் திடீரென்று அவ்விடையரின் வயிற்றில் அடித்துள்ளது. அதுமட்டுமல்ல, இத்தடையால் மாட்டுத்தோல் பதனிடுவோரும், தோலை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களும் பாதிப்படையும். இது என்ன பௌத்தமோ?


ஆகவே இந்தத் தடைக்கு உண்மையான காரணம் என்ன? அரசின் அரசியற் சதுரங்க விளையாட்டில் பசுவும் ஒரு பகடையாகிவிட்டது உண்மை. இந்த அரசுக்குப் பின்னால் அதன் வலது கையாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் பௌத்த பேராதிக்கவாதிகள். இவர்களின் பௌத்த அரசியல் உண்மையான பௌத்த கொள்கைக்கு முரணானது. மகுடத்தையும் மாளிகை வாழ்வையும் உதறித்தள்ளிவிட்டு, காவியுடை தரித்துத் துறவியாகி, போதிமர நிழலில் அமர்ந்து, அஹிம்சையை ஆயுதமாகக் கொண்டு உலகுக்கு வழிகாட்டிய உத்தம மாமுனி கௌதமரின் போதனைகளைக் கைவிட்டு, பௌத்தத்தை ஓர் அரசியல் ஆயுதமாகப் பாவிக்கும் இப்பேராதிக்கவாதிகள் இந்த நாட்டை முழுமையாகக் கட்டியாள்வதற்காக மற்ற இனங்களை நசுக்க எடுக்கும் நடவடிக்கைகளுள் ஒன்றுதான் இந்தத் தடையும். இவர்களை கௌதமரின் வில்லர்களென்று அழைப்பதில் தவறில்லை.


முஸ்லிம்களின் கடைகளைச் சிங்களமக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று சிங்கள இனவாதிகள் பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர். காரணம் அவர்களின் பொருளாதாரத்தை நசுக்க வேண்டுமென்பதே. அதன் ஓர் அங்கமே மாட்டிறைச்சித் தடையும். இதனால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம்கள். ஏனெனில் மாட்டிறைச்சி வியாபாரத்தைத் தனியுரிமையோடு இவர்கள் செய்கின்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இதுவே ஒரு தொழில். ஆகவே அத்தொழிலாளர்களுக்கு ஒரு மாற்றுத் தொழிலைக் காட்டாமல் செய்கின்ற தொழிலையே தடை செய்தல் முஸ்லிம் இனத்தைப் பழிவாங்குவதுபோல் இல்லையா?


இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ராஜபக்சாக்களின் ஆட்சி ஆரம்பமானதிலிருந்து இந்தியாவுடனான உறவு வலுவடையத் தொடங்கியுள்ளது. இதுவரை சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவை ஓரங்கட்டிய கோத்தாபய-மகிந்த குடும்ப ஆட்சி இப்போது சீன உறவைச் சற்றுக் குறைத்து இந்தியாவோடு நெருங்குவதற்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் சர்வதேச அழுத்தங்களுமே காரணமாகும். இதை வாசகர்கள் தெளிவாய் விளங்கவேண்டும்.


இலங்கையின் பொருளாதாரம் நல்லாட்சியினரின் காலத்திலிருந்தே சரிவடையத் தொடங்கினாலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவமும், கடந்த சுமார் எட்டு மாதங்களாக உலகத்தையே மரண கோலத்தில் மாற்றிய கொவிட்-19 கொள்ளை நோயும் சேர்ந்து தவிர்க்கொணாத பாரிய பொருளாதார மந்தத்தைத் தோற்றுவித்துள்ளது. கொள்ளை நோயை ஒருவாறு கட்டுப்படுத்தி வெற்றிகண்ட இலங்கை அரசால் பொருளாதார மந்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. உலகையே பற்றிக்கொண்ட பொருளாதார மந்தத்திலிருந்து திறந்த பொருளாதார அமைப்பைத் தழுவிய இலங்கை எவ்வாறு தப்ப முடியும்?


ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, சுற்றுலாத்துறையின் வரட்சி, அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு, அரசாங்க நிதி நிலையில் பற்றாக்குறை, சென்மதி நிலுவையில் பற்றாக்குறை, கடன் பளு, நாணய மதிப்பிறக்கம், தொழில் வாய்ப்பின்மை, விஷம்போல் ஏறும் வாழ்க்கைச் செலவு என்றவாறு பொருளாதார நெருக்கடிகள் கூடிக்கொண்டே செல்வதால் எங்கிருந்தாவது உதவி கிடைக்காதா என்று ஏங்குகின்றது இலங்கை.

சீனாவோ உதவிசெய்ய எப்போதும் தயார். ஆனால் அந்த உதவியின் பின்னால் அதன் பிராந்திய வல்லரசு எழுச்சிக்கு இலங்கையை ஒரு கேந்திரத்தலமாக மாற்றி இந்து சமுத்திரத்தை ஆக்கிரமிப்பதே அதன் நோக்கம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் நல்லாட்சி அரசு அடகு வைத்துள்ளமை சீனாவுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதனால் இந்திய ராஜதந்திரிகளுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் சொல்லும் தரமன்று. சீனாவின் எழுச்சியையும் அது இந்து சமுத்திரத்தை ஆக்கிரமிப்பதையும் எவ்வாறாயினும் தடுக்கவேண்டுமென்பது உலக வல்லரசான அமெரிக்காவின் நீண்டகாலக் கனவு. அதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கிய உறவுபூண்டு ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்து ஒரு சீன எதிர்ப்பு அணியை ஏற்படுத்தி அதன்மூலம் சீனாவுடன் உறவுகொள்ளும் மற்ற நாடுகளுக்குப் பல வழிகளிலும் அழுத்தம் கொடுக்கின்றது. இந்தப் பின்னணியிலேதான் தாங்கொணாத பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்ட இலங்கை இப்போது இந்திய அரசுடன் தனது உறவை வலுப்படுத்துகின்றது. இந்தியாவுக்கோ இந்த மாற்றம் பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி.


இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இவர் முஸ்லிம்களின் பரம வைரி. இவரும் இவரது இந்துத்துவவாதிகளும் ஆட்சியிலிருப்பதற்கு இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு இனவாதம் ஒரு முக்கிய காரணம். மோடியின் தூண்டுதலினால் 2002இல் குஜராத்தில் சுமார் 2000 முஸ்லிம்களை இந்துத்துவவாதிகள் கொன்று குவித்தமையை யார்தான் மறப்பர்?


ஏற்கனவே 960 மில்லியன் டொலருக்கு இந்தியாவிடம் இலங்கை கடன்பட்டுள்ளது. அண்மையில் மேலும் 400 மில்லியன் டொலருக்கு இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பணமாற்று ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளன. இன்னும் சுமார் 1000  மில்லியன் டொலர் பெறுமதியான மேலும் ஒரு ஒப்பந்தம் பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இவற்றிற்கு மத்தியில் 15 மில்லியன் டொலர் உதவியை பௌத்த வளர்ச்சிக்காக மோடி வழங்கியுள்ளார். அது மட்டுமா? சில மாதங்களின் முன்னர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் குஷிநகர் விமானநிலையத்தைத் திறந்தபோது இலங்கைப் பயணிகளை முதன்முதலாக அங்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு தயாளமுள்ள மோடியின் அரசைத் திருப்திப்படுத்தி மேலும் பொருளாதார சலுகைகளைப்பெற என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லம் செய்ய ராஜபக்ச அரசாங்கம் முனைகிறது. அவற்றுள் ஒன்றுதான் மாடறுப்புத் தடையும்.


இந்தத் தடையால் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே. அதனால் சந்தோஷப்படுவது மோடி. ராஜபக்ச ஆட்சி அதன் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகக் கையாளும் ஓர் அரசியல் தந்திரம் என்னவெனில் சிறுபான்மை இனங்களை நசுக்கி பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவது. இந்தியாவிலே முஸ்லிம்களை நசுக்கி இந்துக்களை மோடி கவர்வதுபோல் இலங்கையிலேயே ராஜபக்ச அரசு தமிழினத்தையும் முஸ்லிம்களையும் நசுக்கிச் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர்கிறது. முஸ்லிம்களை நசுக்குவதால் மோடியின் மனசு இளகி அவரின் பொருளாதார உதவிகளும் பெருகுமாகையால் மாடறுப்புத்தடை பௌத்தத்தின்மேலுள்ள பற்றினாலல்ல அரசியல் இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தினலேயே என்பது திண்ணம். – Vidivelli

5 comments:

  1. அரசின் மாட்டு வெட்டு தடையை எதிர்த்து ஏன் முஸலிம்கள் போராட பயப்படுகிறார்கள்?

    ReplyDelete
  2. இலங்கையின் புத்திஜீவிகள் மத்தியில் கலாநிதி அமீர் அலி அவரகளது பெயர் மிக மிகப் பிரபல்யம் பெற்றதாகும். 1964ல் இலங்கைப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் முதற்றர பட்டம் பெற்று இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் தொடர்ந்து பேராசிரியராகவும் கடமையாற்றி பின்னர் லண்டன் பொருளியல் பாடசாலையில் (London School of Economics) பொருளியல் துறைக்கான உயர் பட்டத்தினையும் மேலும் பின்னர் University of Western Australia ம்ற்றும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து Murdoch University, the University of Brunei and the University of Western Australia போன்ற பல்கலைக் கழகங்களில் போன்ற பல்கலைக் கழகங்களில் பொருளியல் துறைக்கான பேராசிரியராகவும் கடமை புரிந்து இலங்கை நாட்டிற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பெருமை தேடித்தந்தவரகளாவர். தமிழில் பெரும் ஆற்றல் உள்ளவரகள் என்பது அவரகளது இவ் ஆக்கததினைப் படிப்பவரகளுக்கு நன்கு புரியும். பேராசிரியர் அவரகள் கல்வித்துறைக்கு மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம்களின் வளர்ச்சிக்கும் அதிக தொண்டாற்றியுள்ளார்கள். மிகவும் அதிகமான நூல்களையும் ஆihய்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள மாமேதை. அவரகள் தற்போது அவுத்திரேலியாவில் தம் குடும்பததினருடன் வசித்து வந்தாலும் இலங்கையையும் அவரகள் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் தம் நெஞ்ஞில் எப்போதும் சுமந்தவரகளாகவே காணப்படுகின்றார்கள்.

    அவரகள் மேலும் மேலும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் அவரதம் நாட்டிற்காகவும் முடிந்தளவு அர்ப்பணிப்புகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் அவரகளது கல்வியோடு சம்பந்தமான எளர்ச்சிக்காகவும் முடிந்தளவு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அவரகளுக்கு நல்ல சுகத்துடன் கூடிய நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹவினைப் போற்றிப் பிரார்த்திக்கின்றேன். ஆமின்.

    ReplyDelete
  3. தன் வினை தன்னைச் சுடும்.

    ReplyDelete
  4. மாட்டு மூத்திரம் குடிக்கும் அஜனின் மூளையும் இதயமும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தாக்குதலால் சிதைந்துவிட்டதோ?

    ReplyDelete

Powered by Blogger.