Header Ads



பாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள்


பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்துள்ள லக்னெள சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு, இந்திய நீதித்துறையில் ஒரு கறுப்பு தினமாக இருக்கும் என்று கருதுவதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தள்ளார்.

தீர்ப்பு வெளிவந்த பிறகு தனது முழுமையான கருத்தை அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சகோதரத்துவத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் யாராயினும் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த முடிவால் இன்று நிச்சயமாக மனம் வருந்துவர்," என்று அவர் கூறினார்.

"சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் நீதித்துறையில் ஒரு கறுப்பு தினம். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி, சிவில் டிஸ்ப்யூட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால், 'It is an agrarius violation of rule of law' என்று சொல்லியிருந்தது. அது மட்டுமல்ல, 'calculated act of destroying a public place of worship.' என்றும் சொல்லியிருந்தது.

உச்ச நீதிமன்றம் agrarius violation of rule of law என்று சொல்லியிருக்கும் பட்சத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி சம்பவத்தில், அந்த மசூதி மாயமாக மறைந்து விட்டதா? உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் எதிராக இன்று இந்த முடிவு வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியாக வன்முறையை விதைத்தால் வன்முறை தான் அறுவடை செய்யப்படும், violence pays for you politivally. என்று சொல்லும் கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

"அத்வானியின் ரத யாத்திரை இந்தியாவில் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடியது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் அழிக்கப்பட்டன, வம்சங்கள் அழிக்கப்பட்டன, சேதம் ஏற்பட்டது. இன்று சிபிஐ நீதிமன்றம் இது திட்டமிடப்பட்டது இல்லை என்று தீர்ப்பு கூறுகிறது."

பாபர் மசூதி தீர்ப்பு: "நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி" - தமிழக தலைவர்கள்

அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய "வலிமை பெண்கள்" - சர்ச்சைகளுடன் போராடிய கதை தெரியுமா?

ஒரு விஷயம் திட்டமிடப்பட்டது என தோன்றுவதற்கு எத்தனை நாள், எத்தனை மாதங்கள் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்? உமாபாரதி, இன்னொரு அடி எடுத்து வையுங்கள் பாபர் மசுதியை இடியுங்கள் என்று கூறியது உண்மையா இல்லையா?

மசூதி இடிக்கப்பட்ட போது இனிப்பு வழங்கி மகிழ்ச்சி பரிமாறப்படவில்லையா? இதை உலகம் பார்க்கவில்லையா? எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி இவர்களெல்லாரும் இனிப்புகள் உண்டு மகிழ்ந்தனர். இப்போது தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?இறுதியில் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் வழங்கும் செய்தி என்னவென்றால், violence pays, mass violence pays.

1950-ல் இருந்து இன்று வரை இஸ்லாமியர்களுக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. இன்று, இந்த தீர்ப்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. அன்று மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், நவம்பர் 9 தீர்ப்பு வந்திருக்குமா? அங்கே கூடி மக்களைத் தூண்டும் விதமாக உரையாற்றியவர்கள் யார் என்று உலகமே பார்த்தது. இதை மறுக்க முடியுமா?

சிபிஐ குற்றப்பத்திரிகையில், டிசம்பர் 5 ஆம் தேதி இரவு அத்வானி, வினய் கட்டியார் வீட்டில் கூடிச் சதித் திட்டம் தீட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய்யா? அத்வானி, கல்யாண் சிங்கிடம், மசூதி இடிக்கப்படும் வரை நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டாம், அப்போது தான் அரசு கலைக்கப்படாது என்று கூறவில்லையா?

மசூதியைப் பாதுகாப்பதாக பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்னைப் பொருத்தவரை, இந்த தீர்ப்பு ஹிந்துத்துவவாதிகளைத் திருப்திப்படுத்தும்.

மசூதியை இடித்தது யார்?

யார் மசூதியை இடித்தார்கள்? 1992, டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட போது நான் மிகவும் சக்தியற்றவனாக, பயனற்றவனாக, அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மசூதியைக் காப்பாற்ற முடியவில்லை என்று நான் வெட்கப்பட்டேன்.

இன்று இப்படி ஒரு தீர்ப்பு வருகிறது. அப்போது இத்தனை நாட்கள் விசாரணை எப்படி நடந்தது? என்ன நடந்தது. இன்னொரு விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்வானிக்கு உயரிய குடிமகன் விருது வழங்கியது பாஜக அரசு. அன்றே நான் செய்தியாளர் சந்திப்பை நடத்தி இதை எதிர்த்தேன்.

உமா பாரதி பற்றி குறிப்பிடும் முன் இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். பக்வான் கோயல், நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று தீர்ப்புக்கு முன்னர் ஒப்புக்கொள்கிறார் நான் இந்த மசூதி இடிப்பில் பங்கெடுத்தேன் என்று. அவர் அந்த நேரத்தில் வட இந்தியாவின் சிவ சேனா பொறுப்பாளராக இருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரையும் விடுவிக்கிறது.

நான் 1992-வில் உணர்ந்த அதே அவமானத்தை இன்றும் உணர்கிறேன். ஒரு இந்திய முஸ்லிமாக இதை உணர்கிறேன். இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கிரிமினல் செயல் என்று கூறிய குற்றம் யாருடைய தலைமையில், யாருடைய ஊக்கத்தில் நடந்தததோ அவர்கள் அனைவரும் இன்று குற்றமற்றவர்களாக இன்று வெளியில் வருகிறார்கள்.

சிபிஐ தனது சுதந்தரமான செயல்பாட்டை நிலை நிறுத்த மேல் முறையீடு செய்யுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

அப்படியே மேல் முறையீடு செய்தாலும் எவ்வளவு காலம் ஆகும் விசாரணைக்கு வர என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், மேல் முறையீடு செய்ய வேண்டும். இது ஒரு அநீதியான தீர்ப்பு. நிச்சயமாக இது அநீதிதான். மக்கள் கேள்வி எழுப்புவார்கள், இதில் நீதி எங்கே இருக்கிறது என்று. மக்களுக்குத் தெரியும், உலகுக்கே தெரியும்.

பாஜக, ஆர் எஸ் எஸ், வி ஹெச் பி, சிவசேனா இவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இதற்குக் காரணம். இதன் மூல காரணமே காங்கிரஸ் கட்சி தான்.இவர்களின் உத்தரவுப் படிதான் சிலைகள் வைக்கப்பட்டன, இவர்களின் உத்தரவுப் படி தான் பூட்டுகள் திறக்கப்பட்டன, அடிக்கல் நாட்டப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட போதும் இவர்களின் ஆட்சி தான் நடந்தது. அதனால் தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன், இது இந்தியாவின் நீதித் துறையில் இது ஒரு கறுப்பு தினம் என்று ஒவைஸி தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.