Header Ads



கடற்படையில் இருந்து யோஷித இராஜினாமா, தந்தைக்காக பணியாற்றப் போகிறேன் என்கிறார்


தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அக்டோபர் 10ம் திகதி கடற்படையில் இருந்து விலகியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 14 வருடங்கள் கடற்படையில் பணியாற்றிய பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகம், அவரது விண்ணப்பம் அக்டோபர் 10ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக நியமிக்க அக்டோபர் 12ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும், இந்த நிலையில், அக்டோபர் 15 முதல் தனது புதிய பதவியை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றதாகவும் அவர் கூறினார்.

நான் அவருக்காக வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்பினார், எனவே அவரது வேண்டுகோளின் பேரில் எனது வாழ்க்கையை மாற்ற முடிவு செய்தேன் எனவும் யோஷித கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் நான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாக கடற்படையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது, ​​நான் எனது தந்தைக்கு வேலை செய்தேன்.

என் அனுபவத்தை வளர்த்துக் கொண்டேன். எனவே இந்த நிலை ஒரே இரவில் எனக்கு வரவில்லை எனவும் யோஷித ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.