Header Ads



உணர்வுபூர்வமாக சாட்சியம், வழங்கிய றிஸ்வி முப்தி - முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மீது விமர்சனம்


(எம்.எப்.எம்.பஸீர்)

அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட மூதூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமது சபை ஊடாக பாதுகாப்புத் தரப்புக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடி சாட்சி எனவும் குறித்த சபையின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டே அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயங்கள் தொடர்பில் தமது சபை  தகவல்களை  உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தும் கூட,  மக்களின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனமை தொடர்பில் தான் கவலையடைவதாக இதன்போது உணர்வுபூர்வமாக  சாட்சியம் வழங்கினார். ஆணைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை தாம் நல்குவதாகவும், எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும்  சாட்சியங்களை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் இதன்போது ஆணைக் குழுவின் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில்  அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, சிரேஸ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில்  சாட்சியம் அளித்தார்.  இதன்போது உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி ஜாவிட் யூசுப் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையில்,  உலமா சபை தலைவரிடம் சாட்சிப் பதிவுகள் ஹலால் சான்றிதழ் விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறே அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி,  ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது எனவும் ஹராம் என்பது விலக்கப்பட்டது எனவும் சாட்சியமளித்து அது தொடர்பில் நீண்ட விளக்கத்தை ஆணைக் குழுவுக்கு அளித்தார். அத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆணைக் குழுவுக்கு கையளித்த  அவர், அதன் பிரகாரம் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்க சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறினார்

 அரச சட்டவாதி : ஹலால் என்றால் என்ன?

றிஸ்வி முப்தி: ஹலால், ஹராம் என இரு  விடயங்கள் உள்ளன. ஹலால் என்றால் ஆகுமானவை. சட்ட ரீதியானவை. ஹராம் என்றால் கூடாதவை. சட்ட விரோதமானவை. முஸ்லிம்களின் அன்றாட நடவடிக்கைகள்,  குடும்ப வாழ்க்கை, உணவு, பாவனைகள் அனைத்திலும் ஹலால் ஹராம் தாக்கம் செலுத்தும். உதாரணமாக தங்கம், முஸ்லிம்களை பொறுத்தவரை ஆண்களுக்கு ஹராம். அது பெண்களுக்கு ஆகுமானது. பன்றி முற்றிலும் ஹராம். ஹலால் என்பதன் வரை விலக்கணம் நீண்டது. உணவு, பான வகைகளுக்கும் அவ்வாறே ஹலால் விடயம் பொருந்தும்.

எவ்வாறாயினும்  ஏற்பட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமது சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்திக் கொண்டதாகவும், தற்போது அந்த செயற்பாட்டை  எச்.ஏ.சி. நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.

அரச சட்டவாதி : வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஜம்இய்யதுல் உலமாவுக்கு உணவு, பான வகைகளுக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் பல் துலக்கும் தூரிகைகளுக்கு எதற்கு ஹலால் சான்றிதழ்?

றிஸ்வி முப்தி:  உண்மையில்  நான் ஏற்கனவே கூறியதை போல, பன்றியின் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராம். பல் துலக்கும் தூரிகைகளில் பன்றியின் மயிர்கள் பயன்படுத்தப்படுவதாக அறிகின்றோம். அப்படியான சந்தர்ப்பங்களில் எமக்கு அவ்வாறான பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் தேவை. எவ்வாறாயினும் ஜம்இய்யதுல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் போது  பற் தூரிகைகளுக்கு வழங்கியதா என ஞாபகம் இல்லை. அதனை தேடிப் பார்த்து கூறுகின்றேன்.

அரச சட்டவாதி : சுமார் 1400 வருடங்கள் வரை முஸ்லிம்கள் இந் நாட்டில் வாழ்கின்றனர். ஏனைய மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு திடீரென ஹலால் சான்றிதழ் தேவைப்பட்டதன் பின்னணி என்ன?

றிஸ்வி முப்தி: ஆம், 1977 ஆம் ஆண்டின் திறந்த பொருளாதார கொள்கையின் பின்னரேயே அதற்கான தேவை ஏற்பட்டது. அதுவரை உதாரணமாக எமக்கு இலங்கையில் எங்கு சென்றாலும் உடன் பழச்சாறினை பெற முடிந்தது. எனினும் திறந்த பொருளாதார கொள்கையின் பின்னர் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவைகளையே நாம் பெறுகின்றோம். இவ்வாறு அவற்றை பதப்படுத்த மூன்று வகையான ஜெலடின்களை பயன்படுத்துகின்றனர்.  அதில் ஒன்று பன்றியில் இருந்து பெறப்படுகின்றது. பன்றியிலிருந்து பெறப்படும் ஜெலட்டின் கலந்தவை முஸ்லிம்களுக்கு ஹராம். எனவே தான் முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழுக்கான அவசியம் உள்ளது.

முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி  ஏனைய நாடுகள் கூட நுகர்வோரின் தேவையை கருதி ஹலால் சான்றிதழை கண்டிப்பாக அமுல் செய்கின்றன. உலகின் மிகப் பெரிய பெளத்த நாடாக கருதப்படும் தாய்லாந்திலேயே ஹலால் தொடர்பில் பல்கலைக் கழக பீடம் ஒன்றே உள்ளது.

இலங்கையில் இருந்து தென் ஆபிரிக்காவுக்கு ( அங்கு 6 வீதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர்) தேங்காய் மா ஏற்றுமதி செய்ய முற்பட்ட போது அந் நாடு கண்டிப்பாக ஹலால் சான்றிதழை கோரியிருந்தமை எனக்கு ஞாபகம் உள்ளது.

அரச சட்டவாதி : இலங்கையில் முதன் முதலில் ஹலால் சான்றிதழ் எப்போது விநியோகிக்கப்பட்டது?

றிஸ்வி முப்தி: நான் நினைக்கின்றேன், 2000 ஆம் ஆண்டு முதல் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்பட்டது. அதுவும் பிரீமாவுக்கே அந்த சான்றிதழ் விநியோகிக்கப்ப்ட்டது. பிரீமாவும்,  மெக்ஸிஸ்  கோழி இறைச்சிக்கும் ஹலால் சான்றிதழ் தருமாறு அவர்களிடம் இருந்தே முதலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு அமையவே அப்போது அந்த சான்றிதழ் அவ்விரு நிறுவங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

இந் நிலையில் சிரேஷ்ட அரச சட்டவாதியால், கையளிக்கப்பட்ட சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான கட்டுரை ஒன்றின் மீது அவதானம் செலுத்திய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, (தற்கொலை தாக்குதல்கள் குறித்த அஷ் ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியின் கூற்று) அத்தகைய கூற்றுக்கள் இலங்கையின் சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாது எனவும், அந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போதான தொடர் சாட்சியத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டளவில் யுத்த காலத்தின் போது,  எந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பாதுகாப்புத் தரப்பினருக்கு உதவியது என்பதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே சாட்சி என சுட்டிக்காட்டிய அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, மூதூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கூட பாதுகாப்புத் தரப்புக்கு தமது பங்களிப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் சில குறித்தும் விரிவாக விளக்கிய அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றும் உலமாக்களே  பெரும்பான்மையாக உள்ளதாக ஒவ்வொருவரின் பெயராக குறிப்பிட்டு விளக்கினார். காதியானிகள், காத்தான்குடியில் அப்துர் ரவூபின் குழுவினர், ஷீயாக்களை தவிர இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து முஸ்லிம்களும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என இதன்போது அவர் விளக்கினார். அவர்கள் அனைவரையும் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

அத்துடன் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் யாப்பினையும் ஆணைக் குழுவுக்கு அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி கையளித்தார்.

இதனையடுத்து மிக உணர்வுபூர்மவாக சாட்சியமளித்த அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, 2014 முதல் தேவையான தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்த நிலையில், குறித்த தாக்குதலை தடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனமை தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 2013 ஆம் ஆண்டு 33 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கொழும்பு – கலதாரி ஹோட்டலில் ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்திய  அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, அதில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிப்பதாக கூறினார்

இந் நிலையில் மத்ரஸாக்கள் தொடர்பிலும் விஷேடமாக விளக்கிய அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி,  அவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்து ஒரு முறையான மேற்பார்வை செய்யப்படுவதை வரவேற்றார்.

இதனைவிட முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தொடர்பில் தனது அதிருப்திகளை பதிவு செய்த அவர், அத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி அரசியல்மயப்படுத்தப்பட்டது என வர்ணித்தார். இந் நிலையில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சுக்களை ஏற்படுத்தாது அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வைத்திருப்பது சிறந்தது எனவும், ஏனைய மதத்தவர்களுடன் இணைந்தே  பணியாற்ற தாம் எதிர்பார்ப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. I worked with him for two days, and I bare witness that he is intellingent enough.

    ReplyDelete
  2. Rizvi Mufthi, after complaining that the appointment of the Director of Muslim Religious Affairs has been politicized, goes on to recommend the maintenance of One Ministry for All Religions. Obviously, there will have to be separate Departments for each Religion which will come under separate Directors who will have to be appointed by the Govt. Wouldn’t such appointments be Politicised?

    He has also welcomed the Madrasahs being brought under the supervision of the Ministry of Education. Leaving aside the practical issues involved, wouldn’t this necessitate the appointment of different Officials for different Religions and wouldn't such appointments also amount to Politicisation?

    Isn’t the Mufti Contradicting himself Big time?

    ReplyDelete

Powered by Blogger.