October 28, 2020

இஸ்லாத்தை கற்றுக்கொள்ள ஆர்வமா..? நான் செய்த தவறை செய்யாதீர்கள், மீடியாக்களை நம்பாதீர்கள்..!!


2008 காலக்கட்டம். மேற்கத்திய நாடுகளில் ஒரு டிவிடி இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. அந்த டிவிடி-யில் இருந்தது 'பித்னா*' என பெயரிடப்பட்ட தீவிர இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார குறும்படம். முஹம்மது நபியை (அமைதி உண்டாவதாக) மோசமாக சித்தரிக்கும் படங்களையும் கொண்டிருந்த இந்த குறும்படம் வலைத்தளங்களிலும் வெளியாக, உலகம் முழுக்க முஸ்லிம்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இந்த படத்தை தயாரித்தது நெதர்லாந்து நாட்டின் நன்கறியப்பட்ட தீவிர வலதுசாரி அமைப்பான சுதந்திர கட்சி. இக்கட்சியின் நிறுவனரான கீர்ட் வில்டர்ஸ்-சை நெதர்லாந்து இஸ்லாமிய கழகம் நேரடி விவாதத்திற்கு அழைக்க அவரோ முடியவே முடியாது என மறுத்தார். இங்கிலாந்து, வில்டர்ஸ்-சை தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என தற்காலிக தடை விதித்ததென்றால் இந்த படத்தில் இஸ்லாமிய வெறுப்பு எவ்வளவு மோசமாக விதைக்கப்பட்டிருந்தது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். 

நெதர்லாந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்ற பிரச்சாரம் முஸ்லிம்களிடையே வலுப்பெற்றது. இந்தோனேசியா, யூட்யூப் போன்ற வலைத்தளங்களை தற்காலிகமாக தடைச்செய்தது. ஆக, நான் இதுவரை கூறியதை வைத்து அன்றைய சூழல் எப்படியாக இருந்தது என்பது நீங்கள் யூகித்துக்கொள்ளலாம். 

இந்த குறும்படத்திற்காக தீவிரமாக பணியாற்றியவர்களில் முதன்மையானவர் அனார்ட் வென் தொர்ன் (Arnoud van Doorn). சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர்,  படத்தின் வினியோகஸ்தராகவும்,  விளம்பரதாரராகவும் செயல்பட்டார். தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர். 

இச்சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர கட்சியில் இருந்து விலகுகிறார் அனார்ட். அடுத்த சில மாதங்களில் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார். அவ்வளவு தான்.  வானமே இடிந்து விழுந்தது போன்ற அதிர்ச்சியை நெதர்லாந்து ஊடகங்கள் பிரதிபளிக்கின்றன. தலைப்பு செய்தியாகிறார் அனார்ட். எப்படி இது சாத்தியம் என அங்கலாய்க்கின்றன உலக ஊடகங்கள். தீவிர இஸ்லாமிய எதிர்ப்பில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் ஐக்கியமானவர்களின் முடிவில்லா பட்டியலில் தானும் இடம்பிடிக்கிறார் அனார்ட்.  

ஆம், எப்படி இது சாத்தியமானது? 

"உண்மையில், அந்த காலக்கட்டத்தில், மீடியாக்கள் மூலம் எனக்கு ஊட்டப்பட்டிருந்த அறிவின் மூலம் இஸ்லாம் மோசமான மதம் என்றே உளமாற நம்பினேன். ஆகையால் இம்மதம் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். அந்த குறும்படத்திற்கு வந்த எதிர்ப்பை பார்த்த போது, இஸ்லாம் தவறானது என்றால் எப்படி கோடானுகோடி மக்கள் இவ்வளவு தீவிரமான பற்றை அதன் மீது கொண்டிருக்க முடியும் என்ற எண்ணம் நாளடைவில் வலுவடைந்தது. 

நெதர்லாந்தில் பனிரெண்டு இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இஸ்லாம் ஆபத்தானது என்றால் இவர்கள் அனைவரும் தவறானவர்களா? இல்லை இது அறிவுக்கு ஒத்துவரவில்லை. குர்ஆனை படிப்போமா என்ற ஆர்வம் அதிகரித்தது. என்னுடைய நண்பருடன் இணைந்து குர்ஆனை இரகசியமாக படிக்க ஆரம்பித்தேன். என் அம்மா மட்டுமே இதனை அறிந்திருந்தார். 

என்னுடைய கேள்விகள் அனைத்திற்கும் இஸ்லாமில் பதில் இருந்தது. காலப்போக்கில் இஸ்லாம் தவறானது அல்ல என்பது புரிய ஆரம்பித்தது. மிகுந்த அமைதியை எனக்குள் குர்ஆன் கொண்டு வந்திருந்தது. இருப்பினும், என் மனதிற்குள் சைத்தான் குழப்பத்தை விளைவித்துக் கொண்டே இருந்தான். 'இல்லை, இதனை நம்பாதே, உன்னை இந்த நூல் மூளைச்சலவை செய்கிறது' என்பதான குழப்பங்கள் அவை. 

அப்படியான சூழலில் குர்ஆனை மூடிவைத்து விடுவேன். ஒரு வாரத்திற்கு பிறகே மறுபடியும் திறப்பேன். கேள்விகளை பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசலுக்கு சென்று கேட்டு தெளிவு பெறுவேன். ஆக, நான் இஸ்லாமை கற்றுக்கொண்டிருந்த காலம் முழுக்க ஒரு மிகப்பெரும் மனப்போராட்டத்தையே நடத்திக்கொண்டிருந்தேன். இஸ்லாம் மதம் அல்ல, இது மார்க்கம், இது வாழ்வியல் நெறி. தீவிரமான ஆய்விற்கு பிறகு மார்ச் 2013-ல் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். 

எல்லோருக்குமே என் முடிவு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இருபது முப்பது ஆண்டுகளாக என்னுடன் இருந்த நண்பர்கள் விலகிச் சென்றார்கள். என் உறவினர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. வேலை பறிபோனது. கடன் கட்ட முடியாமல் திணறினேன். மிக சோதனையான காலக்கட்டம் அது. தனித்து விடப்பட்டவனாக உணர்ந்தேன். இருப்பினும் இவற்றை எதிர்க்கொள்ளும் வலிமையை இறைவன் கொடுத்திருந்தான். 

ஒரு ஆண்டு சென்றிருக்கும். இஸ்லாம் என்னுள் சிறந்த பண்புகளை உருவாக்கியிருப்பதாக கூறி பிரிந்து சென்றவர்கள் திரும்பவும் வந்து இணைந்துக்கொண்டார்கள். இஸ்லாமை ஏற்பதற்கு முன்பான அறியாமை காலத்தில் இதயம் வெற்றிடமாக இருந்தது. அதனை நிரப்ப சொகுசான கார்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என்று அலைந்துக்கொண்டிருந்தேன். இல்லை, இவை தீர்வல்ல. இன்று என்னிடம் சிறிய வீடு தான் இருக்கிறது. சிறிய காரே இருக்கிறது, ஆனால் மனம் நிறைவாக இருக்கிறது. இதனை என்னுள் கொண்டு வந்து இஸ்லாம் தான். 

இஸ்லாமை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களா, நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். அரசியல்வாதிகளையோ, மீடியாக்களையோ நம்பாதீர்கள். உங்களை நம்புங்கள். இஸ்லாம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை மார்க்கம் அறிந்த அறிஞர்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ கேட்டு தெளிவு பெறுங்கள். இறைவன் நாடினால். இஸ்லாமை ஒரு நிறைவான, அமைதியான, அறிவுக்கு ஒத்துவரும் வாழ்வியல் நெறியாக நீங்கள் காண்பீர்கள்"

தற்பொழுது இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் அனார்ட். இஸ்லாமை ஏற்றுக்கொண்டதற்கு பின்பான அனார்ட்-டின் நன்னடத்தைகளால் கவரப்பட்ட  அவருடைய மகனான Amien De Vries, 2014-ல் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். 

படம்: தன் மகனுடன் அனார்ட் வென் தொர்ன்

* பித்னா - குழப்பம் அல்லது கலகம் உண்டாக்குதல் என பொருள் கொள்ளலாம்.

செய்திக்கான ஆதாரங்கள்:

1. The Deen Show 2. The Huffington Post 3. The Guardian 4. Arab News 

Aashiq Ahamed

0 கருத்துரைகள்:

Post a Comment