Header Ads



ஒரு வீட்டிலிருந்து ஒருவர், மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும்


(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் , மருந்தகங்களை நாளைய தினம் மாத்திரம் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் இருக்கும் மக்கள் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அன்றைய தினம் செல்வதுடன் , பெரும்பாலும் தங்களது வீட்டின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் தங்களது சேவையை பெற்றுக் கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க உட்பட 19 பொலிஸ் பிரிவுகளிலும் தொற்றுநீக்க சட்டவிதிகளுக்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இந்த காலப்பகுதியில் அப்பகுதி மக்கள் அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் , கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று  வியாழக்கிழமை வரை அவற்றை மூடிவைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் , நாளை காலை எட்டு மணிமுதல் இரவு 10 மணிவரை மீண்டும் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் , மருந்தகங்கள் மற்றும் அரச ஒளடத நிலையங்கள் என்பவற்றை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை அப்பகுதி மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேவேளை இந்த பகுதியில் இருக்கும் மக்கள் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அன்றைய தினம் செல்வதுடன் , பெரும்பாலும் தங்களது வீட்டின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் தங்களது சேவையை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை , இவ்வாறு வெளியில் செல்லும் அனைவரும் முக்கக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் . மேலும் வர்த்தகநிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்லும் பொது கைகளை கழுவி செல்வதுடன் , வெளியில் வந்தும் கைகளை கழுவ வேண்டும். 

பணம் மற்றும் ஏ.டீ.எம். தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டைகளை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும். இந்த சட்டவிதிகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக குறிப்பிட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.