Header Ads



பிரெஞ்சு பார்வையில், இஸ்லாம் நெருக்கடியில் உள்ளதா..?


- Rajhi -

"இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனை நமது நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதிலும் காணுகிறோம் " சொன்னது வேறு யாருமல்ல பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன். 

அடிமனதில் ஒன்றின் மீது ஆழ்ந்துள்ள பயம் கனவுகளில் கூட நம்மை விட்டு வைக்காது. எப்போதுமே நம்மைச்சுற்றி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும். சில வேளை அந்த பயம் நம்மை புலம்ப வைக்கும். 

அதேபோல சில மேற்கு நாடுகளுக்கு இஸ்லாம் என்றாலே பயம் என்கிற அலர்ஜி வரலாறு தொட்டே இருந்து வந்துள்ளது. விசேடமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள்,  பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் என்பன உஷ்மானிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் நேரடியாக பாதிக்கப்பட்டதால் அவற்றுக்கு இஸ்லாத்தின் மீது ஓரு வெறுப்பும், பயமும் எப்போதுமே இருந்து வருவதை அந்நாடுகளின் செயற்பாடுகள் பறைசாற்றுகின்றன.  

ஏன் அவர் இதனை இந்த காலகட்டத்தில் கூற வேண்டும்? 

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் மனித சமூகத்தின் முதல் எதிரி கொரோனா என பிரகடனப்படுத்தி உள்ள நிலையில் ஏன் இந்த வெறுப்பு கொண்ட,  வரலாற்று காயத்தை மீளவும் அவர் ஏன் நோண்டிக்கொண்டு இருக்கிறார்? 

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் இஸ்லாம் மீதுள்ள பயம். 

சமீபத்தில் துருக்கியோடு,  லிபியாவில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு,   துருக்கியின் சர்ச்சைக்குரிய மத்திய தரைக்கடலில்  எரிவாயு ஆராய்ச்சி,  ஆர்மேனிய -அசர்பைஜான் யுத்தத்தில் துருக்கி அசர்பைஜானுக்கு பகிரங்க ஆதரவு அளித்துள்ளமை  ஆகியன பிரான்சின் அபிலாசைகளை முரணானதாக இருப்பதால் துருக்கி என்கிற நாட்டின் மீதுள்ள வெறுப்புணர்வு இஸ்லாம் என்கிற பரந்த வடிவில் அவரின் வார்த்தைகளில் வெளிவந்துள்ளது. 

இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின் உச்ச கட்டத்தில் கிருஸ்தவ உலகின் தலைநகராக இருந்த கொன்ஸ்தாந்து நோபிள்  முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டு இஸ்தான்புல் ஆகியதையும், உஸ்மானிய கிலாஃபாவின் உச்ச கட்டத்தில்  பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய ஆட்சிக்குள் சென்றதையும், தென் பிரான்ஸ் முஸ்லீம்களின் ஆட்சிக்குள் சென்றிருந்ததையும் பாரிஸின் கதவு தட்டப்பட்டதையும் பிரான்ஸ் மறந்திருக்க முடியாது. 

'இஸ்லாம் வீழ்ச்சி கண்டுள்ளது'. 'நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது 'என மேற்கு நாடுகளும் கிருஸ்தவ உலகமும் கணக்கு போட்ட ஒவ்வொரு தடவையும் அது எழுச்சி கண்டு முன்னர் இருந்ததை விட பிரமாண்ட வளர்ச்சி கண்டமை மேற்கு நாடுகளுக்கு தெரியாதது அல்ல. 

ஜிங்கிஸ்கானின் படையெடுப்பை அடுத்து இடம்பெற்ற அனர்த்தங்கள், அசம்பாவிதங்கள், படுகொலைகள் ஆகியவற்றை அடுத்து இஸ்லாத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டதாக அக்காலத்தில் தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் இது இடம்பெற்று 40 ஆண்டுகளுக்குள் அதே மொங்கோலிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தை வளர்த்ததுடன் இஸ்லாமிய வரலாற்றில் உள்ள பொற்காலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

 கிருஸ்தவ உலகம் ஜெரூசலத்தை கைப்பற்றிய வேளை இஸ்லாம் இப்போது மெக்ரோன் கூறிய "நெருக்க்கடியான நிலையில்"தான் இருந்தது. பல கிலாஃபாகளாக பிரிந்து தமக்குள்ளேயே மோதிக்கொண்டிருந்த காலம். அக்காலத்தில்தான்  சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டார்கள்.  ஐரோப்பா கனவிலும் எதிர்பார்க்காத விதமாக ஜெருசலம் கைப்பற்றப்பட்டது.  

அல்ஜீரியாவை ஆக்கிரமித்த பிரான்ஸ்  இதே பாணியில் இஸ்லாம் நெருக்கடிக்கு உள்ளானதாக எண்ணியது. மேற்கத்திய கலாசாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தியது. அல்ஜீரியா, பிரெஞ்சு கலாசாரத்துக்குள், நாகரீகத்துக்குள் வந்துவிடும் என கனவு கண்டது ஆனாலும்  

பத்து இலட்சம்  அல்ஜீரியர்களை பிரான்ஸ் கொன்று குவித்தும் இருபது இலட்சம் பேரை கடும் சித்திரவதை படுத்தியும் ,   நாடு கடத்தியும்  தமது ஆட்சியை நிலை நாட்ட முடியாமல் போனது .  

லாலா பாத்திமா ,  பாவ்  பாகியா போன்ற போராளிகளால் தொடங்கி வைக்கப்பட்ட எழுச்சி பிரெஞ்சு காலனித்துவத்தை பின்னடைய வைத்தது. 

ஆக மொத்தத்தில் நம்மை பற்றிய பயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இஸ்லாம்  நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் கூறும்போது அல்லாஹ்வின் நாட்டத்தில் நமக்குள்  எழுச்சி ஏற்படபோகிறது என்பதுதான் அர்த்தம். 

கிலாஃபா வீழ்ச்சியடைந்து 2023 ஆம் ஆண்டு நூறு வருடங்களை தொடுகிறது. ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஓரு முறை அல்லாஹு தஆலா தனது மார்க்கத்தை மீளஉயிர் பெற வைப்பான் என்பது கண்மணி நாயகம் (ஸல் )அவர்களின் ஹதீஸ். 

எனவே  "இஸ்லாம் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது " என்கிற கருத்து மெக்ரோனின் கருத்து இஸ்லாம் மீண்டும் எழுச்சி  கண்டு விடுமோ என்கிற உள்ளச்சத்தில் வெளிவந்த கருத்தாக இருக்க வேண்டும். 

கொரானாவின் பிடியில் மேற்கத்திய பொருளாதாரங்கள் சின்னாபின்னமாகி கொண்டிருப்பதும், உலக பொருளாதார ஆதிக்கம் மேற்கில் இருந்து கிழக்குக்கு மாற்றம் காணுவதும்,  வீழ்ச்சியில் இஸ்லாம் எழுச்சி கண்ட சரித்திர சம்பவங்களும் அவரை கிலி கொள்ள வைத்திருக்க வேண்டும். 

பிரெஞ்சு ஜெனரல் லெப்டினன்ட் கேணல் லூசியன் டீ மொண்டாக்நெக்  1843 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 15ஆம் திகதி அவரது நண்பருக்கும் எழுதிய பின்வரும் கடிதம் காலனித்துவ மனநிலை இன்னமும் நவீன கால பிரான்ஸில் இன்னமும்  நிக்காப் தடை வடிவில், உயிர் வாழுகிறது என்பதை உணர்த்துகிறது. 

"நமது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத மக்களை பலவந்தமாக  ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அவர்களின்  வயது பால் ஆகியவற்றுக்கு அப்பால்  அவர்களின் அனைத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும். பிரெஞ்சு இராணுவத்தின் கால் பட்ட இடத்தில் புல் கூட வளர கூடாது.... 

அரபுக்களோடு யுத்தம் புரிய வேண்டும் அவர்களின் 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கொல்லுங்கள். அவர்களது பெண்களையும் குழந்தைகளையும் கப்பலில் ஏற்றி மார்க்கீஸஸ் தீவுக்கு அல்லது ஏனைய இடங்களுக்கு அனுப்புங்கள். ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நமது கால்களுக்கு அடியே நாய்கள் போல பணிந்து நெளியாத  அனைவரையும் கொன்று குவியுங்கள் " 

இஸ்லாத்தை வீழ்த்த  எதிரிகளால்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எழுச்சிகளாகவே காலப்போக்கில் உருவெடுத்துள்ளன. 

இஸ்ரேல் சார்பான "புதிய மத்திய கிழக்கின்" வளர்ச்சி,  உம்மாவுக்கு எதிரான உலகளாவிய ரீதியான அடக்குமுறை, கிலபாவுக்கான தேடல், மாற்றத்துக்கான வேண்டுதல் அனைத்தையும் பார்க்கும் போது அல்லாஹு தஆலாவின் நாட்டத்தில் விரைவில் எழுச்சி ஒன்று தோன்றப்போகிறது என தோன்றுகிறது. 

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் 


1 comment:

  1. அல்லாஹ் சகலதையும் மிக நன்கு அறிந்தவன். தனக்கு மாறு செய்பவனுக்கு எவ்வாறான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்ற கணக்கையும் ஏற்கனவே போட்டு வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் இதேவிதமாக நடக்கும்.
    The Almighty Allah is fully aware of all things. He has already accounted for the punishments to be meted out to those who change their minds. Everything happens the same way at specific times.

    ReplyDelete

Powered by Blogger.