Header Ads



'மினுவாங்கொடை கொத்தணி' என்றோ 'பிரண்டிக்ஸ் கொத்தணி' எனவோ அழைக்காதீர்கள் - கரு ஆட்சேபம்


(நா.தனுஜா)


நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை 'மினுவாங்கொடை கொத்தணி' என்றோ அல்லது 'பிரண்டிக்ஸ் கொத்தணி' என்றோ இனியும் அழைப்பது தவறாகும் என்று குறிப்பிட்டிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அது வரப்போகின்ற ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிப்பதாகவே அமைகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.  


இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கரு ஜயசூரிய பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.


அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,


ஏனைய நோய்களைப் போன்று கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றிடமிருந்த எம்மால் விலகி ஓடமுடியாது. எனினும் நாட்டை மேலும் பலவீனப்படுத்தக்கூடியவாறான மற்றொரு முடக்கத்தைத் தவிர்ப்பதற்காக, நாமனைவரும் தற்போதைய நிலைவரத்துடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


தனிமைப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் விடயங்கள் உயர் முக்கியத்துவத்துடன் பின்பற்றப்பட வேண்டும். அவை பலவீனமானவர்களை அடக்குவதற்கோ அல்லது அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கோ பயன்படுத்தப்படாமல், அனைவருக்கும் பொதுவானதும் நியாயமானதுமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


அதேபோன்று தற்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். எனவே அனைவரும் தாம் வைரஸ் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதற்கும் தம்மால் பிறருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கும் உரிய அனைத்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


தற்போதைய கொரோனா வைரஸ் பரவலை 'மினுவாங்கொடை கொத்தணி' என்றோ அல்லது 'பிரண்டிக்ஸ் கொத்தணி' என்றோ இனியும் அழைப்பது தவறானது என்பதுடன் அது ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

No comments

Powered by Blogger.