October 27, 2020

ஒக்டோபர் வந்தாலே, மனசு கனக்கிறது - ஜுவைரியா


நேர்காணல் – P.M. முஜீபுர் ரஹ்மான்

முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி நிதியம் (Muslim Women’s Development Trust (MWDT) என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜுவைரியா மொஹிதீன், முன்னணி காவலர் (Front Line Defenders) நிறுவனத்தினால் 2020 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைக் காவலராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார், எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகவும் புத்தளம் பாலாவியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், பெண் உரிமை, வெளியேற்றப்பட்டவர்களின் உரிமை என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர், அவருடனான நேர்காணல்.

உங்கள் கல்வி மற்றும் இதுவரையான உங்கள் பயணம் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?

மன்னார், எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நான், எருக்கலம்பிட்டி மகளீர் மகா வித்தியாலயத்திலேயே எனது ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரைக் கற்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பலவந்த வெளியேற்றத்தால் கல்வியைத் தொடர முடியாமல் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தொழில் செய்வதற்காக சென்றேன்.

வெளியேற்றத்திற்கு முன்னர், ஏழு பெண் பிள்ளைகளையும் 2 ஆண் பிள்ளைகளையும் கொண்ட எனது குடும்பம் எமது தந்தையின் பராமரிப்பில் சிறப்பாக இருந்தது. இவ்வெளியேற்றத்தால் நாம் அனைத்தையும் இழந்தோம். இதனால் ஏற்பட்ட குடும்பச் சுமையை போக்குவதற்காக வேண்டி ஒரு நிறுவனத்தில் தொழில் செய்வதற்காக இணைந்தேன். அந்நிறுவனத்தில் பெண்களின் விவகாரங்களோடு இணைந்து வேலை செய்ததால், எமது பெண்கள் பல பிரச்சினைகளோடு வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். எனவே, பெண்களது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே நான் முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி நிதியம் (Muslim Women’s Development Trust (MWDT) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதன் பின்னணியிலேயே நான் உளவளத்துணை டிப்ளோமா கல்வியைக் கற்றேன். இப்போது, உளவளத்துணையாளராக பெண்களது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருகிறேன்.

இந்நிறுவன உருவாக்கத்திற்கும் எனது வெற்றிக்காகவும் பலர் உதவியுள்ளார்கள். அனைவருக்கும் எனது நன்றிகள். விஷேடமாக சிறீன் சறூர் என்பவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

புலிகளால் வெளியேற்றப்பட்டு 30 வருடங்களாகின்றன என்ற வகையில் நீங்கள் மன்னார், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவர் என்பதால், இந் நிகழ்வை எவ்வாறு நோக்குகிறீர்கள்?.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இப்பலவந்த வெளியேற்றம், எங்களது வாழ்வை புரட்டிப் போட்டது. அந்நிகழ்வை நினைக்கும்போது கண்கள் கலங்குகின்றன. பேசுவதற்கு நாவு மறுக்கிறது. 1990 ஒக்டோபர் 28ஆம் திகதி வந்தாலே மனசு கனத்து குறிப்பிட்ட நேரம் எதையுமே செய்ய முடியாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கச் செய்கிறது. அந்நிகழ்வு மிகப் பெரிய காயமாக 30 வருடமாக என்னை வாட்டுகிறது. இதிலிருந்து என்னால் மீளமுடியாமல் இருக்கிறது.

1990 ஒக்டோபர் 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் எங்களது பள்ளிவாசல் ஒலி பெருக்கி சத்தம் கேட்டதும். ஏதோ மரணச் செய்தி அறிவிக்கப் போகிறார்களோ என அவதானமாக கேட்டபோதுதான், இந்த புலிகளின் பலவந்த வெளியேற்ற மரணச் செய்தி எங்கள் காதுகளை எட்டியது. அச்செய்தி வருகின்றபோது எங்கள் தந்தை இந்தியாவில் இருந்தார். அவர் இல்லாமல் நாங்கள் எங்கு போவது, என்ன செய்வது என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். உடனடியாக உம்மா (அம்மா) எங்களுக்குத் தேவையான உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாள். அத்தோடு, எங்களது வீட்டில் பெண் பிள்ளைகள் அதிகமாக இருந்த படியால் எங்களிடம் ஒரு தையல் இயந்திரம் இருந்தது. அந்த இயந்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு உம்மாவோடு நாம் வெளியேறினோம்.

எங்கள் ஊருக்குச் செல்லும் நுழைவாயிலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்கள் வெளியேறிச் செல்கின்ற அனைவரையும் சோதித்துத்தான் அனுப்பினார்கள். அப்போது, நாங்கள் சென்றதும் எங்களிடம் இருந்த தையல் இயந்திரத்தையும் கேட்டார்கள். “பெண்களாகிய நாங்கள் இதனை வைத்தாவது எங்களது வாழ்க்கையை நடத்துகிறோம். எனவே, இதனை மாத்திரம் கொண்டு செல்ல அனுமதியுங்கள்” என்றோம். அப்போது, அங்கிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த புலிகளின் பொறுப்பாளரிடம் சென்று விசாரித்து வருமாறு எங்களது உம்மாவை அனுப்பினார்கள். உம்மா அழுது கொண்டு வந்து அதனை கொண்டு செல்லுமாறு அனுமதித்ததாக கூறினாள். அத்தையல் இயந்திரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தோம்.

வாப்பா (அப்பா) இந்தியாவில் இருக்கிறார். நாம் எங்கு செல்வது?, யாருடைய இயந்திர படகை வாடகைக்கு பிடிப்பது எனத் தெரியாமல். அந்நாள் இரவு கடற்கரையிலேயே தங்கினோம். அப்போது, எங்களுக்கு இரவு சாப்பாடு மற்றும் காலை சாப்பாட்டை அப்பிரதேச அருட் தந்தையும் சில தமிழ் சகோதரர்களும் கொண்டு வந்து தந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள். “தமிழீழ விடுதலைப் புலிகளின் இச்செயலை நாம் கண்டிக்கிறோம். ஆனால், எம்மால் அவர்களை எதிர்த்து எதுவும் கூற முடியாத நிலையில் உள்ளோம்” என்றனர்.

ஒரு பெண் என்ற முறையில் அன்றைய இரவையும் அக்காலைப் பொழுதையும் ஒரு மரண வேதனையான நாளாகவே உணர்ந்தேன். அனைவரும் கடற்கரை ஓரத்தில் இருக்கிறார்கள். அத்தியாவசியக் கடமைகளை (மல சலம் கழித்தல் மற்றும் ஏனைய பெண்களின் தேவைகளை) நிறைவேற்றுவதற்கு ஒரு வழியுமே இருக்கவில்லை. அப்போது இருந்த வேதனையைவிட மரணித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று உணர்ந்தேன். இத்தேவைகளை நிறைவேற்றுவதற்குக் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் காலவகாசம் தரவில்லை என்பது வேதனையாக இருக்கின்றது. (இதனைக் கூறும்போது தேம்பித் தேம்பி அழுதார்)

மறுநாள் காலை வாப்பா  ஒரு படகில் இந்தியாவில் இருந்து வந்தார். வாப்பாவோடு நாங்கள் கல்பிட்டி கடற்கரையை அடைந்தோம். படகில் ஏறியது முதல் கல்பிட்டி கடற்கரையை வந்தடையும் வரை தொடராக மழை பெய்து கொண்டே இருந்தது. மழையினால் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்ற அதேநேரம், கடும் மழையினால் திசைமாறிவிடுவோமோ என்ற பயம் ஒரு பக்கம்.இறைவனின் துணையால் கல்பிட்டி கடற் கரையை அடைந்ததும், உடலெல்லாம் மழையில் நனைந்து ஆடைகளை மாற்றுவதற்குக் கூட வழியில்லாமல் தவித்தோம். அப்போது, எங்கள் வாப்பாவோடு  தொழில் செய்த ஒருவரைத் தேடிப் பிடித்து அவரின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு சில நாட்கள் தங்கினோம். அங்கிருந்து புத்தளம் வந்தோம். புத்தளத்தில் மல்ஹார்ஸ் புடவைக் கடை உரிமையாளரின் தோட்டத்தில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து அகதி வாழ்க்கையை ஆரம்பித்தோம்.

அன்றில் இருந்து இன்று 30 வருடங்களாகியும் அங்கேயே வாழ்கிறோம். இந்த 30 வருட பயணத்தின் பின்னரே, எனக்கு மனித உரிமைக் காவலர் என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது. இதனை நினைக்கும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. ஆனால், சொந்த தாயகத்தை இழந்து இன்னும் வெளியேற்றப்பட்டவளாக புத்தளத்தில் வாழ்கிறேன் என்பது கவலைதான். ஆனால், இப்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, என்னால் புத்தளத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது. புத்தளமும் மன்னாரும் எனது இரு கண்களைப் போன்றது.

மீள்குடியேற்ற சவால்களுக்கு மத்தியில் பெண்களின் நிலையை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  30 வருடங்களாக வாழ்ந்து, அந்தந்த இடங்களில் தங்களது இருப்புக்களை பலப்படுத்திக் கொண்ட பலர் இருக்கிறார்கள். இப்படி நோக்குகின்றபோது, வெளியேற்றப்பட்ட அனைவரும் மீளக்குடியேறுவார்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், பெரும்பாலானவர்கள் மீள்குடியேறுவார்கள். அதற்கு அரசாங்கம் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.


ஏனெனில், 30 வருடங்களாக அகதி முகாம்களில் அரசாங்கத்தின் சிறிய கொடுப்பனவுகளை மாத்திரம் நம்பி வாழ்ந்த இம்மக்கள் எப்படி உடனடியாக மீளக்குடியேற முடியும்? அரசாங்கத்தின் ஒத்துழைப்பும், உதவியும் இன்றி தற்காலிக கொட்டில்களை அமைத்து அதில் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. எனவே, இவர்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கத்தின் பாரிய பங்களிப்பு தேவையாக உள்ளது.

அரசாங்கம் இவர்களது மீள்குடியேற்றத்திற்கு உதவுவதற்குப் பதிலாக இவர்களின் உரிமைகளை இல்லாமல் செய்கின்ற வேலைகளைச் செய்கின்றன. அதாவது, தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கொத்தணி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்த சுமார் 6000 வடமாகாண முஸ்லிம்களின் வாக்குகளையும் இல்லாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்கள். இது மிகப் பெரிய உரிமை மீறலாகவே நான் பார்க்கிறேன். இது எவ்விதத்திலும் நியாயமாகாது.

எனவே, மீள்குடியேற்றம் பூரணமாகும் வரை கடந்த 30 வருடங்களாக நடைபெறுகின்ற தேர்தல்களில், வடமாகாண முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களித்தார்களோ, அவ்வாறே வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இல்லையாயின், இந்த 6000 முஸ்லிம்களதும் பதிவுகள் இல்லாமலாக்கப்பட்டால், அரசாங்கத்திடம் இவர்கள் பெறுகின்ற அனைத்து உரிமை மற்றும் சலுகைகளை இழக்க நேரிடும். மேலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, பல்வேறு அசௌகரிகங்களுக்கு உட்படுகிறார்கள்.

ஏனெனில், மலசல கூட வசதி மற்றும் ஏனைய வசதிகள் இன்றி பெண்கள் எவ்வாறு மீள்குடியேற முடியும்? அவ்வாறு மீள்குடியேற வேண்டும் என்றால் தற்காலிக கொட்டில்கள் மற்றும் மலசல கூடங்களை உடனடியாக யார் அமைத்துக் கொடுப்பது? மீள்குடியேறுகின்றவர்களுக்கான வசதிகளை உடனடியாக அரசாங்கம் செய்து கொடுக்குமா? இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு உடனடியாக மீள்குடியேறுவது?

அதேபோல், 1990 ஆம் ஆண்டு வடக்கில் வெளியேற்றப்பட்டவர்கள், இப்போது பல மடங்காக அதிகரித்துள்ளார்கள். அந்த அதிகரித்தவர்களுக்கான காணி மற்றும் ஏனைய வசதிகளை யார் ஏற்படுத்திக் கொடுப்பது? இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்கும்போது இம்மக்களின் மீள்குடியேற்றம் சிறப்பாக நடைபெறும் என நான் நம்புகிறேன்.

மேலும், பெண்கள் இந்த சமூகத்தினால் அடக்கு முறைகளுக்கு உட்படுகிறார்கள். அவர்களது கல்வி, தொழில் என்பவற்றை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது. அத்தோடு, கலாசாரம் என்ற கட்டுக் கோப்புக்குள் பெண்கள் உட்படுவதால், அவர்களால் மேலதிகமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. அதுமாத்திரமன்றி உயர் கல்வியை மேற்கொண்ட பெண்கள், அவர்களது தகுதிக்குரியவர்களை திருமணம் முடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.


எனவே, முன்மாதிரி மிக்க சமூகம் என்ற வகையில், பெண்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சமூகத்தின் தலையாய கடமை. சுதந்திரமான பெண்களைக் கொண்ட சமூகம் உருவாகினால், அந்த சமூகம் முன்னேற்றமடையும். அதாவது, ஆரோக்கியமான குழந்தைகளை அவர்கள் உருவாக்குவார்கள்.

இறுதியாக மனித உரிமை காவலராக தெரிவு செய்யப்பட்மை குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட காலம் மூதல் நானும் எனது குடும்பமும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். இக்கஷ்டங்களைப் போக்குவதற்காக தொழில் தேடிச் சென்ற நான் சுயமாக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தேன். அதன் மூலம் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு என்னாலான அனைத்து வழிகளிலும் தீர்வினைப் பெற்றக் கொடுக்க பாடுபட்டேன்.

விஷேடமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் மூலம் பல முஸ்லிம் பெண்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். இதற்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக நான் முயற்சித்தேன். அதிலும், முஸ்லிம் பெண்களின் சிறு வயதுத் திருமணம், பெண்கள் காதி நீதிபதிகளாக நியமித்தல் போன்ற வற்றில் அதிக ஈடுபாடு கொண்டு செயற்பட்டேன். அதனை ஆண்கள் சமூகம் கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதிலுள்ள நியாயம், அதேபோல் அதில் மறைந்திருக்கும் அநீதி என்பவற்றை யாரும் பார்க்கவில்லை. எனவே, இதிலுள்ள அநீதியை சமூக மயப்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க தொடராக போராடி வந்தேன். மேலும், பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிக்கு எதிராக போராடுவேன்.

இதன் பிரதி பலனாகவே எனக்கு இவ்விருது கிடைத்தது. இவ்விருது கிடைத்தமையை நினைத்து மிகுந்த சந்தோசம் அடைகிறேன். இவ்விருது கிடைப்பதற்காக பல கட்டங்களைத் தாண்டியுள்ளேன். இதற்காக பலர் உதவியுள்ளார்கள். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஷேடமாக எல்லா வழிகளிலும் உதவிய சிறீன் சரூர் என்பவருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துரைகள்:

Post a Comment