Header Ads



வாகனத்தில் கூட்டமாக பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்


( செ.தேன்மொழி)

களுத்துறை மாவட்டத்தில் பேரூவளை,அளுத்கம மற்றும் பயாகல ஆகிய பகுதிகளுக்கு நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படமாட்டாது என அறிவிக்கப்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று -25- ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவரது,

கம்பஹா மாவட்டம் முழுவதிலும் இரு வாரங்களாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு அவசியமான  அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக ,இன்று காலை 8 மணிமுதல்  இரவு 10 மணி வரைக்கும் வர்த்தக நிலையங்கள்,மருந்தகங்கள் திறந்து வைக்கப்படும். 

இதன்போது அந்த பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளையும் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்யு வருபவர்கள்,வாகனத்தில் கூட்டமாக வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எவரேனும் வந்தால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கம் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, கொழும்பு கோட்டை ,புறக்கோட்டை உட்பட 64 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது  கொழும்பு பகுதிக்கு வருகைத்தரும் பொது வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளை தொடர்தும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவையாளர்கள் தங்களது தொழில் அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்.  

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் , தனியார் நிறுவன ஊழியர்கள் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளமுடியும். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் ,சேவை நிலையங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கான வசதிகள் மற்றும் அவர்களின் உடல் வெப்பத்தை அளவிடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். என்றார்.

No comments

Powered by Blogger.