Header Ads



எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை



20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தொடர்பில் விவாதம் இடம்பெறும்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கான விசாரணை தொடர்கின்றது.

அவரை இன்னும் கைது செய்ய முடியாமல் போயுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டிற்கு சென்றது.

ரிஷாட் பதியுதீனுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் தொலைபேசி அழைப்பு எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது வினவியதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது தமது பொறுப்பும் கடமையும் என்பதை நினைவுபடுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறி இரண்டு நாட்கள் சென்றுள்ள போதிலும், அது இடம்பெறாமையால் அரசாங்கம் முழுமையான திரைக்கதைக்கு ஏற்றாற்போன்று செயற்படுவதாகத் தோன்றுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.