Header Ads



மைத்திரியை சிறையில் அடைத்து, தண்டிக்க வேண்டும் என பேசப்படுவதை காணமுடிகிறது - சு.க.


பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் தற்போது மீறப்பட்டுள்ளதால், சுதந்திரக் கட்சிக்குள் ஒரு அதிருப்தி காணப்படுவதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.


கொழும்பில்  செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிய அதிருப்தி காணப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் நாங்கள் செய்துக் கொண்ட உடன்படிக்கை அப்படியே அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்ற விடயம் கேள்விக்குரியது.


மூன்றில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்படும், பொதுச் சின்னத்தில் போட்டியிடலாம் எனக் கூறினார்கள்.


தேசிய பட்டியலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் எனக் கூறினார்கள்.


இவை அனைத்தும் தற்போது மீறப்பட்டுள்ளது. எமது கட்சியினர் சில அமைச்சர்களிடம் செல்லும் போது நீங்கள் சுதந்திரக் கட்சியினர் எனக் கூறி அவர்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுப்பதில்லை.


அத்துடன் ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதியை சிறையில் அடைக்க வேண்டும், கைது செய்ய வேண்டும், தண்டனை வழங்க வேண்டும் என பேசுவதை காணமுடிகிறது.


நாங்கள் அரசாங்கத்தின் கூட்டணியில் இருக்கின்றோம். கூட்டணியில் இருக்கும் போது நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.


வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், நாங்கள் அரசாங்கத்துடன் மோதலுக்கு செல்ல மாட்டோம். பொறுமையாக செயற்படுவோம் எனவும் லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.