Header Ads



எலிக் காய்ச்சலினால், பெண் வபாத்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் கிராமத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணமாகியியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பாதிப்பில் ரிதீதென்ன 2ஆம் பரம்பரை குடியேற்றக் கிராமத்தைச் முஹம்மது இஸ்மாயில் நுஷ‪ரத் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே ஞாயிற்றுக்கிழமை 11.10.2020 பிற்பகலளவில் மரணமடைந்துள்ளார்.

இவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மரணமடைந்துள்ளமை வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த புதன்கிழமையன்று 07.10.2020 இந்தப் பெண் திடீரென காய்ச்சலால் சுகவீனமடைந்து இடுப்பின் ஒரு பகுதி அவருக்கு செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக வியாழனன்று அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

ரிதீதென்ன, 2ஆம் பரம்பரைக் குடியேற்றப்பகுதி, ஓமடியாமடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீராடுவதற்கும் ஏனைய பாவனைக்கான நீரைப் பெறுவதற்கும் அருகிலுள்ள கடவத்தமடு குளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குளத்தைச் சூழ அடர்ந்த புற்புதர்களைக் கொண்ட இந்தப் பகுதியில் எலிகள் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.