October 25, 2020

நபி முஹம்மத் (ஸல்) அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை


எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) B.A (Hons)

உலகில் குறுகிய காலத்தில் மக்கள் உள்ளங்களில் அதிகம் தாக்கம் செலுத்திய , புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மனிதர்களை காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகவும் பக்கச்சார்பின்றியும் நோக்குகின்ற எவரும் ஒரு மனிதரை முதன்மைப்படுத்தி பேசாமல் இருக்கமாட்டார். அந்த மாமனிதர் தான் உலகத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார். 

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும், வழிகாட்டல்களும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. 

இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான். அந்தவகையில் அவர் மீது அன்பு செலுத்துவதும், அவரை முழுமையாக பின்பற்றுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடைமையாகும் அது மட்டுமன்றி முழு உலகிற்கும் அண்ணலாரை மிகச் சரியாக அறிமுகப்படுத்துவது எம்மீதுள்ள  பொறுப்புமாகும்  . நபி (ஸல்) அவர்களை நேசிப்பது எமது ஈமானுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றது

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்” (33:6)

ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னுயிர் மீது நான் அன்புகொள்வதற்கு அடுத்ததாக உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களை விடவும் என் மனைவி மக்கள், உறவினர்கள் சொத்து செல்வங்களை விட உங்களைத் தான் நான் அதிகம் விரும்புகின்றேன், அன்பு கொள்கின்றேன் எனக்கூற, நபி (ஸல்) அவர்கள், உமரே இன்னும் உமது ஈமான் பூர்த்தியாகவில்லை. ஏனெனில் உமது உயிரை விட என்மீது அன்புகொள்கின்ற போதுதான் உமது ஈமான் பூரணமாகும் எனக் குறிப்பிட்டார்கள். பின் உமர் (ரழி) வர்கள் அல்லாஹ்வின் தூதரே! சத்தியமாக என் உயிரை விரும்புவதனை விட நான் உங்களை மேலாக விரும்புகின்றேன் என மனப்பூர்வமாகச் சொன்னார்கள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உமரே இப்போதுதான் உமது ஈமான் முழுமையாகின்றது’ எனக்குறிப்பிட்டார்கள். (புஹாரி)

உலகம் சில மனிதர்களை வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் உலகில் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்களா என்றால் அது கேள்விக்குறி ஆனால் எழுத வாசிக்கக் கூடத் தெரியாத நபி (ஸல்) அவர்கள் இறை வழிகாட்டல்கள் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒரு சமூகத் தலைவராக, குடும்ப தலைவராக போராட்டத் தளபதியாக, நம்பிக்கைக்குரிய வியாபாரியாக, நட்புக்கு இலக்கணமாக, சிறந்த கணவராக என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.

விஞ்ஞானத்தினதும் தகவல் தொழில்நுட்பத்தினதும் இமாலய சாதனைகளைக் கண்டு உலகம் புருவம் உயர்த்திப் பார்க்கின்ற தற்கால நிலையில் ஒரு நாகரிகத்தின் அல்லது ஒரு சமூகத்தின் ஆரம்ப அலகான குடும்ப கட்டமைப்பைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறுகின்ற நிலையில் சீரானதும் மிகச் சரியானதுமான வழிகாட்டல்களை முறையாக நடைமுறைப்படுத்திக் காட்டிய முழுமையான முன்மாதிரி மனிதர் நபி(ஸல்) அவர்களாவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக (Role Model) திகழ்ந்தார்கள். இதனைத்தான் அல்குர்ஆன் "நபி (ஸல்) அவர்களிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் காணப்படுகின்றன" (33:21) எனக் குறிப்பிடுகின்றது

நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை மாத்திரம் கண்டு முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பலதை வரலாற்றில் காணலாம். அண்ணலாரை கொலை செய்யவந்தவர் பற்றி வஹி மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் அவரை அருகே அழைத்து அதனை அவருக்கு அறிவித்த போது மனமுடைந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். உங்களைப் போன்று  ஒரு வெறுப்பான முகத்தை உலகில் பார்க்கவில்லை என்று சொன்னவர் மூன்றே நாட்களில் நபி (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்க்கையை  பார்த்தபின் உங்கள் முகத்தைப் போன்று ஒரு விருப்பமான முகத்தை இனி பார்க்கப் போவதுமில்லை என்றார். 

நபி (ஸல்) அவர்கள் உலகளவில் ஏற்படுத்திய மாற்றங்களை மிகச் சரியாக விளங்குகின்ற மனிதர்கள் அனைவரும் உலகத் தலைவர்களில் முதல் மனிதராக அவரைக் காண்கின்றனர். நபி (ஸல்) அவர்களை இஸ்லாமிய சமுகத்திற்குள் இருக்கின்றவர்கள் மட்டும் உயர்ந்த மாமனிதர் சிறந்த சமூக முன்னோடி என்று சொல்லவில்லை. மாறாக இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கும் சாதாரணமானவர்கள் மட்டுமல்லாது புகழ் பூத்த அறிஞர்களும் நபி (ஸல்) அவர்கள் இயல்பிலேயே உயர்ந்த குணங்களின் பிறப்பிடம் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றனர். 

இவர்களுள் அறிஞர் பேர்னாட்சோ முக்கியமானவர். இவர் சிறந்த மானுட நாகரிகத்தை உலகிற்குக் கற்றுக்கொடுத்த ஒருவராக முஹம்மது நபியைக் காணுகின்றார். ‘முகம்மது நபி நம்முடன் இன்று இருப்பாரென்றிருந்தால் மானுட நாகரிகம் இன்று எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளையும் வெற்றி கொண்டிருப்பார்’ என்று எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

இவர் மட்டுமல்ல இந்திய மேதையான மகாத்மா காந்தி ‘ கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இருக்கும் சிறந்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்திட அவாக் கெண்டேன். அது இஸ்லாத்திற்குள் இருக்கும் நபி (ஸல்) அவர்கள் என்று அடையாளம் கண்டேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தன்னைச் சாதாரணமானவனாகக் கருதும் உயர்ந்த பண்பு, வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தோழர்கள் மீது கொண்ட அன்பு, அஞ்சாமை, இறைவன் மீதான பிரச்சாரத்தில் கொண்ட முழு நம்பிக்கை இவைகளே அவரிடமும் அவருடைய தோழர்களிடமும் உலக சக்திகள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தது’ என்றும் எடுத்துக் கூறி நபிகளாரின் ஒழுக்கப் பண்பு கண்டு வியப்புக் கொள்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அறிஞரான மைக்கல் எச். ஹார்ட் என்பவரும் உலகத் தலைவர்களில் அல்லது பிரசித்தி பெற்றவர்களில் நபி (ஸல்) தான் மிக உயர்ந்தவர் என்று நூறு பெயர் கொண்ட வரிசையில் முதலிடம் கொடுத்து விட்டு ‘உலக வரலாற்றிலேயே சமயத் துறை, உலகியல் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமாத் திகழ்ந்த மாமனிதர் முகம்மது’ என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

நாகரிகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது அல்லாஹூத்தாலா நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ அது சாத்தியமாகவில்லை.

மாறாக நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் வசீகரித்தது என்றால் அது  மிகையாகாது. நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே ‘அல்அமீன், அஸ்ஸாதிக் என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுகத்தினரால் அடையாளம் காணப்பட்டவர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு உறுதிசெய்கிறது. 

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4) 

இன்னுமொரு இடத்தில்

உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. ( 10: 16)

பிரிதொரு இடத்தில்

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். (3:159) என்று கூறுகிறான்.

அந்தவகையில் அல்லாஹூத்தாலா நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு வஹியை பிரகடனப்படுத்துகிறான். நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது நிதர்சனம்.

''சங்கையான நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்'' (முவத்தா) என்று நபி (ஸல்) தூதுத்துவத்தின் நோக்கம் இறை உறவை (இபாதத்) வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உறவையும்(அஹ்லாக்) மேம்படுத்துவதும் என்பதை சூட்சுமமாக உணர்த்தினார்கள்.

இவ்வாறு நற்குணத்தை வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். எல்லா காலத்திலும், எல்லா மக்களிடமும், எல்லா நிலையிலும் அவர்கள் நற்குணத்தின் நாயகராகத் பரிணமித்தார்கள். 

அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது? என வினவப்பட்டபோது தக்வாவும், நற்குணங்களும்தான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (திர்மிதி)

பிரிதொரு சந்தர்ப்பத்தில் 

"நற்குணம்தான் மறுமையில் நன்மையின் தராசை கனதியாக்கக்கூடியது" எனக் கூறினார்கள். (அபூதாவூத்)

இன்னுமொரு சந்தர்ப்பத்தில்

எனக்கு அதிகம் நேசத்திற்குரியவரையும், மறுமைநாளில் என்னுடைய சபையில் அதிக நெருக்கத்திற்குரியவரையும் நான் அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் மௌனமாக இருந்தார்கள். இரண்டு தடவை மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். இறுதியாக நபித்தோழர்கள் அல்லாஹ்வின்  தூதரே கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களிள்   அழகிய குணம் கொண்டவரே என பதிலளித்தார்கள். (அஹ்மத்)

சமூகத்தில் பிறரின் தயவில் தங்கி வாழும் சிறுவர்களின் உணர்வுகளை மதித்த நபி(ஸல்) அவர்கள் அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னனி வகித்தார்கள். அதனை பின்வரும் சம்பவம் உறுதி செய்கிறது.

அவையில் அமர்ந்திருக்கும்போது உணவை வலதுபுறமாக வழங்கப் படுவதுதான் வழக்கம். ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவன் இருக்கிறார். இடப்புறத்தில் அபூபக்கர், உமர் போன்றோர் இருக்கிறார்கள். இந்நிலையில் உணவு பரிமாறும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் வலப்பறம் உள்ள சிறுவரிடம் இடதுபுறம் இருக்கும் பெரியவர்களுக்கு முதலில் உணவை வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுவர் வழக்கப்படி வலதுபுறம் இருக்கும் எனக்குத்தான் முதலில் தர வேண்டும் என்றார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்

அதேபோன்று "பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள்" (இப்னு மாஜா)  என்று தொழிலாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை மென்மையைக் கொண்டே அவர்களை நடத்தினார்கள். 

நபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.

அண்டை அயலவர் உரிமை பற்றி பேசவந்த நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்

'அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்தும், உம் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்' (முஸ்லிம்)

இவ்வாறு அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய எல்லோரிடத்திலும் மிகவும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள். 

அதே போல கடன் கொடுத்த ஒருவர் அதை வசூலிக்கும்போது நபி(ஸல்) அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டார். இதனைப்பார்த்து நபித்தோழர்கள் கோபமுற்று, அவரை தாக்க முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் "அவரை விட்டுவிடுங்கள் ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாக) பேசும் உரிமை உள்ளது" என்று கூறினார்கள். மேலும் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்கு கொடுங்கள் எனக்கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதைவிடக்கூடுதல் வயதுடைய ஒட்டகம்தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள், உடனே அவருக்கு அதையே கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத்திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் எனக்கூறினார்கள். ( புகாரி)

அது தவிர ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், 'சாதாரணமாக இருப்பீராக' உலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன்தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தார்கள். (இப்னுமாஜா)

மேலும் தலைவர் என்ற வகையில் மக்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து சமூக பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள். (புகாரி)

இதன மூலம் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ( புகாரி)

மன்னிப்பதையே பண்பாகக்கொண்ட நபி(ஸல்) அவர்கள்  ஒரு கிராமவாசி வந்து பள்ளியில் சிறுநீர் கழிப்பதைக் கண்டு மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டுவிடுங்கள்' என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்து இது அல்லாஹ்வின் ஆலயம், இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது, தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவுகூறுவதற்கும் உரியது' என்று அறிவுரை கூறினார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் பேச்சொழுக்கம் பற்றி அண்ணாரது தோழர்கள் கூறும் போது 

''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருவருப்பாக பேசுபவராகவும், அருவருக்கத்தக்கவைகளைக் கேட்பவராகவும் இருந்ததில்லை'' (புகாரி)

அதேபோன்று ஒரு இறை விசுவாசி என்னதான் இரவு முழுவதும் கால் பாதங்கள் வீங்குமளவுக்கு நின்று தொழுதாலும் , உணவையும் நீரையும் தவிர்த்து நோன்பு நோற்றாலும் அவரிடத்தில நற்பண்புகள் இல்லாத பட்சத்தில் அந்த வணக்கங்களினூடாக எந்த பலாபலனுமில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் மறைமுகமாக கூறுகிறார்கள். 

''ஒரு இறைவிசுவாசி, நற்குணத்தின் மூலம் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் மேன்மையை அடைந்து விடுகிறார்.” (அபூ தாவூத்)

எனவேதான் மனித தொடர்பாடலிலேயே இறை உறவும் தங்கியிருக்கிறது என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறவருகிறார்கள். அந்தவகையில் வழிபாடில்லாத பண்பாடும் , பண்பாடில்லாத வழிபாடும் பயனற்றது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. 

ஏன் இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது முன்மாதிரியானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது எமது அவதானத்துக்குறியது. அவர்களது அப்பழுக்கற்ற வாழ்க்கையை அறியும் ஒருவன் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்வதோடு சத்தியக் கொள்கையையும், மனித நேயத்தையும் உலகில் நிலைநாட்ட எந்த தியாகத்தையும் செய்ய தயாராகி விடுகிறான் என்பது கண்கூடு.

1 கருத்துரைகள்:

Post a Comment