Header Ads



மதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)


துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

கொழும்பு மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியை அண்மித்து இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் மதுஷ் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இருவர் போதைவஸ்து தொடர்பாக தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நள்ளிரவு 12.05 அளவில் மாளிகாவத்தை லக்செத செவன குடியிருப்புத் தொகுதிக்கு சென்றிருந்தனர்.

அங்கு போதைப்பொருள் இருப்பதை உறுதிசெய்துகொண்ட அதிகாரிகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அதனை அறிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கருத்தின் பிரகாரம், மாகந்துரே மதுஷிடம் விசாரணை நடத்திய போதே போதைப்பொருள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பின்னர் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர், மாக்கந்துரே மதுஷை அழைத்துக்கொண்டு அதிகாலை 2.45 அளவில் லக்செத செவன குடியிருப்புத் தொகுதிக்கு சென்றுள்ளனர்.

அதிகாலை 3.05 அளவில் குறித்த வீட்டுத் தொகுதியை அடைந்த அதிகாரிகள், மேல் மாடிக்கு செல்வதற்காக படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்த போது மேல் மாடியிலிருந்து வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, மாக்கந்துரே மதுஷூம், பொலிஸ் அதிகாரி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தாம் வந்திருந்த மோட்டார்சைக்கிளை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கைக்குண்டு வெடித்ததில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்களை தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், மாக்கந்துரே மதுஷ் அப்போது உயிரிழந்திருந்ததுடன், காயமடைந்த இரண்டு அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு பொலிஸ் அதிகாரியின் காலில் காயமேற்பட்டுள்ளதுடன், கைக்குண்டு வெடித்ததில் மற்றைய அதிகாரியின் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.


துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தில் துப்பாக்கிகள் இரண்டை துப்பாக்கிதாரிகள் கைவிட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


T56 ரக துப்பாக்கியும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

துபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்படிருந்த மாக்கந்துரே மதுஷ், மேலதிக விசாரணைகளுக்காக அண்மையில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மாக்கந்துரே மதுஷின் ஒத்துழைப்புடன் பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வந்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் மூன்று நாட்களுக்கு முன்னர் வௌ்ளவத்தை பகுதியில் திருடப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார்சைக்கிள் திருடிச்செல்லப்பட்ட காட்சி CCTV-யில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில், புதுக்கடை 4 ஆம் இலக்க மேலதிக நீதவான் காஞ்சனா

நெரஞ்சலா விசாரணைகளை நடத்தினார்.

அதன் பிறகு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை நீதவான் பார்வையிட்டார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் மாக்கந்துரே மதுஷின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிடப்பட்டது.

41 வயதான மாகந்துரே மதுஷ் 2006 ஆம் ஆண்டு தென் மாகாண சபையின் உறுப்பினராக செயற்பட்ட டெனீ ஹித்தெடியவின் கொலை உட்பட மேலும் பல கொலைகள், திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராவார்.

https://www.youtube.com/watch?v=JJyxfNxv8Ns&feature=emb_logo

No comments

Powered by Blogger.