Header Ads



கடும்போக்காளர்களை திருப்திப்படுத்த சகோதரர் றிஸாத்தை, கைது செய்வதை ஏற்க முடியாது - ஹரீஸ்


இலங்கை முஸ்லிங்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் கைது விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த விசேட ஊடக அறிக்கையில் மேலும், 

இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகளை உண்டாக்கி நாட்டை சீரழிக்க துடிக்கும் சில பேரினவாத சக்திகளின் அஜந்தாக்களுக்கு அரசு செவிசாய்ப்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. இந்த நாட்டில் சகல இனங்களையும் சரி சமனாக மதித்து உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அரசே ஜனநாயக கடமையை செய்வித்த அப்போதைய அமைச்சர் ஒருவரை கேள்விக்குட்படுத்தி கைதுசெய்ய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஜனநாயக கடமையான வாக்கை செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்பதை குற்றமாக சுமத்தி கைதுசெய்ய முனைவது கவலையளிக்கிறது. அரசின் இந்த செயலானது சிறுபான்மை மக்களை அரசிடமிருந்து வெகுவாக தூரமாக்கும் என்பதை அரசுக்கு எத்திவைக்க விரும்புகிறேன். இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஊடக பிரிவு.

1 comment:

  1. கோளைகளாக வீட்டுக்குள் ஒழிந்து கொண்டு, அரசியல் அறிக்கைகள் விடாமல், ஏன் நீங்கள் இதை எதிர்த்து வீதியில் இறங்கி போராட கூடாது?

    ReplyDelete

Powered by Blogger.